லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனக்கும் தோனிக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கடந்த 2016 – 2017ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தபட்டன. ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் இணைந்தன.
இதனைத்தொடர்ந்து ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். ஆனால், இந்த சீசனில் புனே மிகவும் மோசமாக விளையாடியது. மொத்தம் 14 போட்டிகளில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணியின் கேப்டன்ஸி பதவியிலிருந்து தோனி நீக்கப்பட்டார். இது தோனி ரசிகர்களை மிகவும் கலங்கப்படுத்தியது. சாக்ஸி தோனிக்கூட இதுகுறித்து அணியின் உரிமையாளர் கோயங்காவை தாக்கிப் பேசியிருந்தார்.
இதுகுறித்துதான் தற்போது சஞ்சீவ் கோயங்கா பேசியிருக்கிறார். “கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தோனி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. எனக்கும் தோனிக்கும் இன்னும் நல்ல உறவு இருக்கிறது. கேப்டன்ஷிப் விவகாரம் ஒருபோதும் பிரச்சினை இல்லை. அவர் ஒரு வார்த்தை கூட வெளியில் பேசவில்லை , இனியும் அவர் பேசமாட்டார். அது ஒரு தனிப்பட்ட விஷயமாகும். இரண்டு நபர்களுக்கு இடையேயான நடந்த உரையாடல் அது, இரண்டு நபர்கள் அதை முடிவும் செய்தனர். முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் இருவருக்குமான இந்த உறவு இன்னும் நன்றாக இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.
சஞ்சீவ் கோயங்கா இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான அணி தோல்வியடைந்ததும், அனைவர் முன்னிலையிலும் ராகுலிடம் கடுமையாகப் பேசியிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு ரசிகர்கள் சஞ்சீவ் கோயங்காவை மிகவும் தாக்கிப் பேசினார்கள். மேலும் இந்த முறை ராகுல் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல்தான் தோனி விஷயத்திலும் நடந்தது. ஆனால், தற்போது சஞ்சீவ் அவர்களுக்கு இடையே நல்லுறவு இருப்பதாக கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது.