
உலகம் முழுவதும் கிரிக்கெட்டை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முதன் முதலில் கிரிக்கெட் இங்கிலாந்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கிரிக்கெட் தேசிய விளையாட்டாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அதிகளவில் ரசிகர்களை கொண்ட விளையாட்டுக்களில் கிரிக்கெட் முதல் இடத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களை குவித்தது இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் சஞ்சு சாம்சன் (26 ரன்), திலக் வர்மா (19 ரன்) ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்தனர். வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் பட்டேல் 2 விக்கெட்டையும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கலக்கி இருந்தனர்.
இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் அதிகளவில் இருந்தபோதிலும் பேட்டிங்கில் கேப்டன் ஜோஸ் பட்லர் (68 ரன்) தவிர வேறு யாரும் அதிக ரன் குவிக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் பந்து வீச்சிலும் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் மட்டுமே விக்கெட் வீழ்த்தி இருந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். முதல் போட்டியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இந்தியா அணி ஆல்ரவுண்ட் திறன்களுக்கு ஒரு சான்றாக இருந்தது.
கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் இங்கிலாந்து தடுமாறியதால் இந்த போட்டியில் அதை சரிசெய்ய தீவிரம் காட்டுவார்கள் என்றே தோன்றுகிறது. எனவே இன்று சென்னையில் நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது. இந்த கிரிக்கெட் மோதலின் ஒவ்வொரு தருணத்தையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து இந்த தொடரை சமன் செய்யுமா அல்லது இந்தியா தனது முன்னிலையை நீடிக்குமா என்று பார்க்கலாம்.
T20I தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இருக்கும் நிலையில் இரு அணிகளும் தங்கள் திறமை மற்றும் உத்தியை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகளை உள்ளன. சேப்பாக்கம் மைதானம் வழக்கமாக சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் சூழலில் அது எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடக்க உள்ளது. இப்போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.