
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் (பிப்.6, பிப்.9 மற்றும் பிப்.12) விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்க உள்ளது.
வருகிற 19-ந்தேதி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால் அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்பதால் இரு அணியினருமே இந்த தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாக மோதிக்கொள்வார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரை டெஸ்ட் தொடரிலும், உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சியிலும் சொதப்பிய ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரை தோற்றதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தோல்வியில் இருந்து தப்பிக்க அதிரடியாக விளையாட முயற்சிக்கும்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 107 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 58-ல் இந்தியாவும், 44-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி அவற்றில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நீண்டகால கடனுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டுவார்கள் என்பதால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
போட்டி நடக்கும் நாக்பூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் 'ரன்'மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் இதுவரை 9 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் அல்லது லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் அல்லது வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், முகமது ஷமி.
இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சகிப் மக்மூத்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.