மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்! செஸ் உலகில் புதிய சாதனை!

50 நகர்வுகளில் உலக சாம்பியனை சாய்த்துவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற டெல்லி சிறுவன் வந்தன்!
செஸ் சாதனை - Magnus Carlsen,
செஸ் சாதனை - Magnus Carlsen,
Updated on

செஸ் சாதனை:

Chess.com தளத்தில் நடைபெற்ற Title Tuesday ஆன்லைன் போட்டியில், வெள்ளைக்காய்களுடன் Giuoco Piano முறையில் விளையாடிய 15 வயது வந்தன் அலங்கார் சவாய், 2,288 ஃபிடே தரவரிசையுடன், 2,823 புள்ளிகள் கொண்ட உலக முதல் நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சனை 50 நகர்வுகளில் தோற்கடித்துள்ளார். பயண சோர்வால் போட்டிக்குப் பிறகு நேராக தூங்கச்சென்ற வந்தனின் இந்த அமைதியான அணுகுமுறை, அவரது பணிவும் மன உறுதியும் வெளிப்படுத்துகிறது.

செஸ் விளையாட்டில் உலகின் முதல் நிலை வீரராக இருப்பவர் நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen). ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான இவரை 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் (Vandan Alankar Sawai) 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

பிரபல இணைய செஸ் தளமான செஸ்.காம் (Chess.com)ல் வாரந்தோறும் 'டைட்டில்டு டியூஸ்டே' (Title Tuesday) என்ற போட்டி நடைபெறும். இதில், கடந்த 2026- ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லியை சேர்ந்த வந்தன் அலங்கார் சவாய் (Vandan Alankar Sawai) என்ற 15 வயது சிறுவன் கலந்து கொண்டார். அவரை எதிர்த்து மேக்னஸ் கார்ல்சன் விளையாடினார். உலகின் முதல்நிலை வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற பயம் இல்லாமல் விளையாடியுள்ளார்.

50வது நகர்வில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கார்ல்சன் வெளியேறியுள்ளார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்து ஒரு பிரமிக்கவைக்கும் வெற்றியைப் பதிவுசெய்துவிட்டு, அவரை வீழ்த்தியதற்கு எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் வந்தன் தூங்க சென்றுவிட்டார் என்பது தான் இதில் ஹை லைட்.

இணையவழிப் போட்டியின்போது, வெள்ளைக் காய்களுடன் விளையாடிய வந்தன் (ஃபிடே தரவரிசை 2,288), ஜியூகோ பியானோ (Giuoco Piano) முறையில் நடைபெற்ற (ஜியோகோ பியானோ என்பது ஒரு பாரம்பரிய சதுரங்கத் தொடக்கமாகும், இதன் இத்தாலியப் பொருள் 'அமைதியான ஆட்டம்' என்பதாகும்.) ஆட்டத்தில் 26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், இரண்டாவது சுற்றில் கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக்கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார். இதில் கார்ல்சனை (தரவரிசை 2,823) ஐந்து முறை உலக சாம்பியனான அவரை 50 நகர்வுகளுக்குப்பிறகு வெற்றி பெற்றார்.

செஸ் சாதனை - Magnus Carlsen,
செஸ் சாதனை - Magnus Carlsen,

இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, வந்தன் ஐரோப்பாவிற்கு மேற்கொண்ட சோர்வுமிக்க ஆறு வாரப் பயணத்திலிருந்து திரும்பியிருந்தான். போட்டியில் நான்கு சுற்றுகள் விளையாடிய பிறகு, பயணக்களைப்பு காரணமாக, அவன் தன் பெற்றோரிடம் அன்றைய பொழுதுக்கு போதும் என்று கூறிவிட்டு நேராக உறங்கச்சென்றுவிட்டான்.

அவரது தந்தையும் முன்னாள் வங்கியாளருமான அலங்கார் சவாய், பின்னர் தற்செயலாக Chess.com- இல் உள்நுழைந்தபோது தனது மகன் வந்தன், கார்ல்சனை வீழ்த்தியது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார். போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர். போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

வந்தன் மிகவும் சோர்வாகவும், விளையாடத் தயக்கமாகவும் இருந்ததால், அவரைப் போட்டியில் பங்கேற்க உண்மையில் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது என்று அவரது தாயார், டாக்டர் மாதுரி அலங்கார் சவாய், கூறியுள்ளார். வந்தனின் தாய் அவரது சகோதரருடன் விளையாடும்போது வந்தனும் விளையாட கற்று வெற்றிபெற துவங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சுதந்திர இந்தியாவின் முதல் குரல் முதல் ஆட்டோமொபைல் ஹப் வரை: சென்னையின் பிரம்மாண்ட வரலாறு!
செஸ் சாதனை - Magnus Carlsen,

ஆனால் வந்தன் செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாக மாற்றுவாரா என்பது உறுதியில்லை என்றாலும், சர்வதேச மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றுவது அவரது உடனடி இலக்காக உள்ளது.

அவனுடைய நீண்டகாலப் பயிற்சியாளரான குர்பிரீத் பால் சிங்குக்கு, அந்தச் சிறுவனிடமிருந்து எந்தச் செய்தியோ அல்லது தொலைபேசி அழைப்போ வரவில்லை. அடுத்த நாள் வந்தனின் தந்தை அவரை அழைத்து அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டபோதுதான் அவருக்கு அது தெரியவந்தது. குர்பிரீத் பால் சிங் வந்தனுக்கு 7 ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்துள்ளார். வந்தன் சற்று அமைதியானவன், அதிகம் பேசாமாட்டான். அது கூச்ச சுபாவம் இல்லை ஆனால் ஒதுங்கி இருப்பான். அவன் தந்தை கூறிதான் எனக்கு இந்த வெற்றி தெரியும் என கூறியுள்ளார்.

நவீன சதுரங்க வரலாற்றின் மிகப்பெரிய ஆளுமையைத் தோற்கடித்த போதிலும், சர்தார் படேல் வித்யாலயாவின் பத்தாம் வகுப்பு மாணவர், சதுரங்கத்தை ஒரு முழுநேரத் தொழிலாகத் தொடரவேண்டுமா என்பது குறித்து தனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டு, வியக்கத்தக்க வகையில் பணிவுடன் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
வரலாறு படைத்த தமிழக புயல்: கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா சாதனை!
செஸ் சாதனை - Magnus Carlsen,

வந்தனுக்கு திரைப்படங்கள், புனைகதைகள் போன்றவற்றில் ஆர்வமில்லை. போர்கள் பற்றிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். எதிர்காலத்தில் வரலாற்றுத்துறை அல்லது அரசியல் அறிவியல் துறையில் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com