
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ?
இந்த வரிகள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
இருபது ஓவர் ஐபிஎல் போட்டி 2008 ஆம் வருடம் ஆரம்பித்தது.
இப்போது நடந்து கொண்டிருப்பது 18வது தொடர்.
இந்த வருடம் இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்று, புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் நிற்கிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. இதனால், தகுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த முதல் அணி என்ற சாதனை படைத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கடந்த கால வரலாற்றை சற்றே உற்று நோக்குவோம்.
2024 ஆம் வருடம் வரை நடந்த 17 ஐபிஎல் போட்டிகளில், 15 போட்டிகளில் சிஎஸ்கே விளையாடி, பன்னிரண்டு முறை தகுதிச் சுற்றிற்கு சென்றிருக்கிறது. அதாவது 80 சதவிகிதம்.
பத்து முறை இறுதிச் சுற்றிற்கு முன்னேறிய சிஎஸ்கே, 2010, 2011, 2018, 2021, 2023 என்று ஐந்து வருடம் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 50 சதவிகிதம்.
2008, 2012, 2013, 2015, 2019 இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
போன வருடம் வரை நடந்த ஐபிஎல் தொடர்களில் நடந்த மொத்த போட்டிகளில், சிஎஸ்கே 242 போட்டிகளில் விளையாடி 139 போட்டிகளில் வென்றது. வெற்றி சதவிகிதம் 57.43%
சென்ற வருடம் சிஎஸ்கே தகுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனால் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது. நான்காவது இடத்தில் இருந்த ஆர்சிபி அணியும், ஐந்தாவது இடம் சிஎஸ்கே அணியும் தலா 14 புள்ளிகள் பெற்றன. போன வருடம் நான்கு அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திற்குப் போட்டியிட்டன. ஆனால் ஓட்டம் குவித்த எண்ணிக்கை விகிதம் அடிப்படையில், ஆர்சிபி தகுதிச் சுற்றிற்கு முன்னேறியது.
17 ஐபில் போட்டிகளில் விளையாடிய மும்பாய் இந்தியன் 10 வருடங்கள் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 58.82 சதவிகிதம்.
அதில், ஆறு முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மும்பாய் இந்தியன், சிஎஸ்கே அணிக்குச் சமமாக, ஐந்து முறை தொடரை வென்றது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, சாம்பியன் பட்டம் வென்றதில் வெற்றி சதவிகிதம் 83.3 சதவிகிதம். மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.
மும்பாய் இந்தியன் தொடரைக் கைப்பற்றிய வருடங்கள் 2013, 2015, 2017, 2019, 2020. இரண்டாவது இடத்தைப் பிடித்த வருடம் 2010.
இதுவரை நடந்த ஐபில் தொடர்களில் பங்கேற்ற 264 போட்டிகளில், 143 போட்டிகளில் வெற்றி வாகை சூடியது மும்பாய் அணி. அவர்களின் வெற்றி சதவிகிதம் 54.16%.
இந்த வருடம் இது வரை நடந்த 10 போட்டிகளில் ஆறில் வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. போன வருடம் 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று பத்தாவது இடத்தைப் பிடித்த “எம்அய்” அதை நமக்கு விட்டுக் கொடுத்துள்ளது.
தற்போது டி20 கிரிக்கெட் அதிரடி ரன் குவிக்கும் ஆட்டங்களாக மாறி வருகின்றன. 200க்கும் மேல் ரன்கள் எடுப்பது மிகச் சாதாரணமாக மாறிவிட்டது. கூடிய சீக்கிரம் 300 ரன்கள் என்ற இலக்கை அடைவார்கள் என்று தோன்றுகிறது.
காலத்திற்கேற்ப சிஎஸ்கே தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்ப்போம்.
கே.என்.சுவாமிநாதன், சென்னை