
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். குறைந்தது 8 வெற்றிகள் பெற்றால் தான் ‘பிளே-ஆப்’ சுற்றை நினைத்து பார்க்க முடியும்.
இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 38-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மல்லுக்கட்டின.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும்.
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டி போட்டி போட தயாராகி விட்டன.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா - ஷேக் ரஷீத் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வெறும் 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, அதனை தொடர்ந்து ஷேக் ரசீத் 19 ரன்களில் நடையை கட்ட, சென்னை அணி 63 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது.
4-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபேவும், ரவீந்திர ஜடேஜாவும் ஜோடி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்த இவர்கள் வலுவாக காலூன்றிய பிறகு அடிக்க ஆரம்பித்தனர்.
அணியின் ஸ்கோர் 142-ஆக (16.2 ஓவர்) உயர்ந்த போது ஷிவம் துபே 50 ரன்களில் (32 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்து வெளியேற, அதனை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி 4 ரன்னில் நடையை கட்டினார்.
கடைசி ஓவரில் ஜடேஜா சிக்சர், பவுண்டரி விரட்டியதுடன் தனது 4-வது அரைசதத்தையும் கடந்தார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. கடைசி 9 ஓவர்களில் மட்டும் 103 ரன்கள் சேகரித்தனர். ஜடேஜா 53 ரன்களுடனும் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாமி ஓவர்டான் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 177 ரன் இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணியின் விக்கெட் கீப்பர் ரையான் ரிக்கெல்டனும், ‘இம்பேக்ட’ வீரர் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி சென்னை அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்த நிலையில் ரிக்கெல்டன் 24 ரன்னில் ஆவுட்டாகி வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன், ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஆக்ரோஷமாக ஆடினர்.
ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது என்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை அணியின் பவுலர்களால் திணறினர். கடைசியில் இரு சிக்சருடன் சூர்யகுமார் வெற்றிக்கனியை பறித்தார்.
மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும் (45 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் (30 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இதன் மூலம், சேப்பாக்கத்தில் சென்னை அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு மும்பை பதிலடி கொடுத்து விட்டது.
மும்பைக்கு இது 4-வது வெற்றியாகும். சென்னை அணிக்கு 6-வது தோல்வியாகும்.
புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி (4 புள்ளி) எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி ஐதராபாத் சன்ரைசர்சுடன் மோதுகிறது.