
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியான்ஷ் ஆர்யாவும், பிரப்சிம்ரன் சிங்கும் களம் புகுந்தனர். முதல் பந்தையே சிக்சருக்கு ஓடவிட்டு அட்டகாசமாக தொடங்கிய பிரியான்ஷ் சென்னை அணியை மிரள விட்டார்.
மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங் ரன் எடுக்காமலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் வரிசையாக ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். ஆனால் வரிசையாக விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் ஸ்கோரை உயர்த்துவதிலேயே குறியாக இருந்த பிரியான்ஷ் ஆர்யா சென்னை அணியின் அனைத்து பந்துகளையும் அடித்து நெறுக்கி 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
‘ஒன்மேன் ஆர்மி’ போல் தனிநபராக அணியை நிமிர வைத்த அவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பவுலர்கள் திண்டாடிப் போனார்கள்.
அணியின் ஸ்கோர் 154-ஆக உயர்ந்த போது பிரியான்ஷ் ஆர்யா 103 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அதனை தொடர்ந்து வந்த ஷசாங் சிங்கும், மார்கோ யான்செனும் ரன்ரேட் குறையாமல் ஆட்டத்தை சிறப்பாக விளையாடினர். அதேசமயம் சிஎஸ்கேவின் பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருந்தது. கடைசியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது.
சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், முகேஷ் சவுத்ரி, நூர் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திராவும், டிவான் கான்வேவும் 6.3 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து அருமையான தொடக்கம் தந்து விளையாடிய நிலையில் ரவீந்திரா 36 ரன்னிலும், அடுத்து இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
அதனை தொடர்ந்து களம் இறங்கிய கான்வேவுடன், ஷிவம் துபே ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ஸ்கோரை நகர்த்தி வந்த நிலையில் அணியின் ரன் 151-ஐ எட்டிய போது துபே 42 ரன்னில் போல்டு ஆகி வெளியேற, அதனை தொடர்ந்து கான்வே 69 ரன்னில் ‘ரிட்டயர்ட் அவுட்’ முறையில் வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து நுழைந்த தோனி சில சிக்சர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினாலும் அவரால் அணியை கரைசேர்க்க முடியவில்லை. 12 பந்தில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தில் கேட்ச் ஆனார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்களே எடுக்க முடிந்ததால் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5-வது லீக்கில் ஆடிய சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். பஞ்சாப்புக்கு 3-வது வெற்றியாகும்.
சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வருகிற 11-ந்தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.