

பத்தாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டம், இன்று (மார்ச் 08) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன.
இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்? கோப்பையை வென்று மகுடம் சூடப் போவது யார்? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றி ஆராய்கிறது இந்த பதிவு.
மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி வீரர்கள் தீவிரமாக களத்தில் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்க, நியூசிலாந்து அணி வீரர்களும் களத்தில் மல்லுக் கட்டுவார்கள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணியின் பலம்:
* இந்திய பேட்டிங் வரிசையைப் பொருத்தவரை சஞ்சு சாம்சனின் ஃபார்ம் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கடந்த இரு போட்டிகளிலும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் சாம்சன். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தால், பின் வரிசையில் வரும் வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்கள்.
* இஷான் கிஷனும் இந்த தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
* ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே மற்றும் திலக் வர்மா ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
* பௌலிங்கை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு வேற லெவலில் இருக்கிறது. கடந்த அரையிறுதிப் போட்டியில் கூட 18-வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றினார் பும்ரா.
* ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதால் அவரது பந்துவீச்சும் இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
* இறுதிப் போட்டியில் பும்ரா மற்றும் பாண்டியாவுக்கு உறுதுணையாக மற்ற பவுலர்களும் செயல்பட்டால், நியூசிலாந்தை குறைந்த ரன்களிலேயே சுருட்டி விடலாம்.
* அக்ஷர் படேல் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவது மிகப்பெரிய பலம்.
இந்தியாவின் பலவீனம்:
* நடப்பு உலகக்கோப்பை தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆகி ஒரே ஒரு அரை சதத்தை மட்டுமே அடித்திருக்கும் அபிஷேக் ஷர்மாவின் ஃபார்ம் இந்திய அணிக்கு பலவீனமாகவே கருதப்படுகிறது. ஒருவேளை இறுதிப் போட்டியில் மீண்டெழுந்து, அவர் ரன்ளை குவிக்கும் பட்சத்தில் அவரது பலவீனம் இந்தியாவுக்கு பலமாக மாறிவிடும்.
* வருண் சக்கரவர்த்தி கடந்த இரண்டு போட்டிகளாக அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளார். தற்போது அவர் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது
நியூசிலாந்து அணியின் பலம்:
* நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரை தொடக்க வீரர்களான செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
* கடந்த அரையிறுதி போட்டியில் 170 ரன்களை வெறும் 12.5 ஓவர்களிலேயே சேஸ் செய்து அசத்தியமான வெற்றியை பெற்றது நியூசிலாந்து.
* பின்வரிசையில் ரச்சின் ரவீந்திரா, கிளென் ஃபிலிப்ஸ் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் பேட்டிங்கில் நியூசிலாந்து அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
* வேகப்பந்து வீச்சில் மேட் ஹென்றியும், சுழல் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் சாண்ட்னரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
* ஃபீல்டிங்கை பொறுத்த வரை நியூசிலாந்து அபாரமாக செயல்படுவது வழக்கம். குறிப்பாக கிளென் ஃபிலிப்ஸ் பறந்து பறந்து கேட்ச்சுகளை பிடிக்கும் அசாத்திய திறமை பெற்றவர்.
நியூசிலாந்து பலவீனம்:
* தொடக்க ஆட்டக்காரர்களை விரைந்து அவுட் செய்து விட்டால் அடுத்து வரும் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது நியூசிலாந்து அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
* டேரில் மிட்செல் இந்தத் தொடர் முழுவதும் ரன் குவிக்கத் திணறி வருகிறார்.
* ஆல்ரவுண்டராக வரும் ஜிம்மி நீஷமின் பௌலிங் சுமாராகவே இருக்கிறது.
சம பலம் பொருந்திய இரு அணிகள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதவிருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பது கூட கடினம் தான். இருப்பினும் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.