52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி!

தோஹாவில் 28 சிக்சர்களுடன் வரலாறு படைத்த பீகார் சிங்கத்தின் மிரட்டல் ஆட்டத்தின் முழு விவரம்!
வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi
வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

படிப்போ, விளையாட்டோ, எதுவாக இருந்தாலும் திறமைசாலிகளுக்கே எதிலும் முதலிடம். ’இளமையிற் கல்’ என்ற நம் முன்னோரின் பொன்னெழுத்துக்களுக்குப் பெருமை சேர்த்து, வரலாற்றையே வாய் பிளக்க வைத்துள்ளார் நம் புத்திளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

திறமைகளை இளம் வயதிலேயே கற்றுக்கொண்டால் அது ஆயுளுக்கும், நீண்ட நாட்களுக்கும் உதவும் என்பதால்தான் இளமையிற் கல் என்றார்கள். அதனை அப்படியே வாழ்வில் கடைப்பிடித்து ஆச்சரியமான வரலாற்று இலக்குகளை அனாயாசமாக நிறைவேற்றி வருகிறார் இவர்.

விளையாட்டுப் போட்டிகளில் பலவகை இருந்தாலும், இன்றைய உலகில் தலைமையிடத்தில் நின்று தரணியை ஆண்டு கொண்டிருப்பது கிரிக்கெட்தான் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. பல கோடி ரசிகர்களைத் தன்னகத்தே கொண்ட விளையாட்டாக அது விசுபரூபம் எடுத்துள்ளது.

’சாக்கர்’ என்றழைக்கப்படும் கால் பந்து போட்டிகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சிறந்து விளங்குவதைப்போல், கிரிக்கெட்டும் உலகம் முழுவதும் கொடி கட்டிப் பறக்கிறது. கால்பந்தைப் பின்னுக்குத் தள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படி நம் இந்திய நாட்டின் தேசீய விளையாட்டாம் ஹாக்கியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதோ, அதைப்போல!

டெஸ்ட் கிரிக்கெட்டாகவும், ஒன் டே மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டாகவும் ஒருபுறம் விளையாடும் நேரம் சுருங்கி வர, மறுபுறமோ அதன் புகழ் பெருகி வருகிறது! பல காலம் உழைத்துப் பல படங்களில் நடித்து நடிகர்கள் ஈட்டும் புகழையும், பணத்தையும் குறுகிய காலத்திலேயே அடைந்து சாதனை படைக்கிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். சச்சின், லாரா, கெயில் போன்றோர் உலகோரிடையே உன்னத இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்கள்.

தங்கள் இதயங் கவர்ந்த நடிகர்களின் கட்அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்யும் சினிமா ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர் நமது கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கட் வாங்க, கவுண்டர்களுக்குப் பல மணி நேரம் முன்னதாகவே வந்து காத்துக் கிடக்கிறார்கள். பவுண்டரியும், சிக்சரும் களத்தில் நிகழ்ந்தால்,உற்சாகக் களிப்பில் மைதானத்தையே மறந்து குதியாட்டம் போடுகிறார்கள். குதூகலத்தில் மிதக்கிறார்கள்!

பீகாரில் பிறந்த வைபவ் சூர்ய வன்ஷி (27 மார்ச் 2011) 16 வயதை நெருங்கும் மார்க்கண்டேய வயதுப் பையன்.12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்ற இவர் 13 வயதில் ராஜஸ்தான் ராயல்சுக்காக ஆட ஆரம்பித்தார். ஒரு கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இமாலய சாதனை 

இவர் பல சிறந்த வீரர்களின் பல ஆண்டு ரெகார்டுகளையெல்லாம் எளிதாய் முறியடித்து உயர்ந்தவர் என்றாலும், தற்போதைய சாதனையே இமாலயச் சாதனையாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் 24 ஆம் தேதி, கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் குழுப்போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இந்தியா ஏ போட்டியில் விளையாடியபோது, ஐம்பத்து மூன்றே பந்துகளில் 204 ரன்களைக் குவித்துள்ளார். 52 பந்துகளில் 200 ரன்களை, இரட்டைச் சதங்களை எட்டியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi
வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi

28 பந்துகளில் சதத்தை எட்டிய இவர், தொடர்ந்து விளையாடி, 40 பந்துகளில 150 ரன்களையும், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் தனதாக்கிக் கொண்டார். 28 சிக்சர்கள்(28x6=168), 7 பவுண்டரிகள் (7x4=28) என்று எதிரணியின் பந்துகளைத் துவம்சம் செய்து இந்த இமாலய இலக்கை அடைந்துள்ளார்.

இதற்கு முந்தைய சாதனையுடன் ஒப்பிடும்போதுதான் இவர் சாதனையின் பெருமை விளங்க வருகிறது. 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் சாட் போவ்ஸ் (Chad Bowes)103 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். இப்பொழுது தெரிகிறதா வன்ஷியின் அசாதாரணச் சாதனை!

-103 பந்துகள் எங்கே? வெறும் 52 பந்துகள் எங்கே? இந்தச் சரித்திர சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல!

இதையும் படியுங்கள்:
35 பந்துகளில் சதம் ,13.2 ஓவரில் அசுர அடி கொடுத்து மேட்சை முடித்த இந்திய அணி: தொடரை கைப்பற்றி சாதனை!
வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi

ஒரே போட்டியில் பல சாதனை

52 பந்துகளில் இரட்டைச் சதம்-சாதனை1,

40 பந்நுகளில் 150 ரன்கள்-சாதனை2 (ஏற்கனவே 59 பந்துகளில் வன்ஷியே 150 ரன்கள் எடுத்த சாதனை முறியடிப்பு)

-29 பந்துகளில் சதமடித்த ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்கின் சாதனையை 28 பந்துகளில் சதமடித்து வன்ஷி முறியடிப்பு-சாதனை-3

-50,100,150, 200 ரன்கள் எடுக்கும் அனைத்து நிலைகளிலும் நம்பர்1-சாதனை-4

-ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடிப்பது-28 சிக்சர்கள்-சாதனை-5

(இவர் எடுத்த 204 ரன்னில் 196 ரன்கள், பவுண்டரி மற்றும் சிக்சர்கள் மூலமே வந்தவை.)

இளம் வயதில் இரட்டைச் சத நாயகன்

15 வயது முடிந்து 242 நாட்களை மட்டுமே கடந்த இந்தச் சிறு வயதில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதத்தைக் கடந்த தங்க மகனாக ஜொலிக்கிறார் வன்ஷி.

பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!

இன்னும் இவர் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இந்த இமாலயச் சாதனைகளுக்காக இவரைப் பாராட்டுவோம்! இன்னும் வியத்தகு சாதனைகளை நிறைவேற்ற வாழ்த்துவோம்!

(ஆனாலும் சிறு சந்தேகம்! இவர் இனிச் சாதிக்க ஏதாவது இருக்கிறதா கிரிக்கெட்டில்? தன்னைத்தானே முறியடிக்க வேண்டிய இக்கட்டில் அல்லவா நிற்கிறார்! ஆம்! அவர் சாதனைகளை அவரே முறியடித்து முன்னேறவேண்டும்!)

உலகக் கிரிக்கெட் தோட்டத்தில் ஒரு ராட்சதப் பூ நம் வன்ஷி!

இதையும் படியுங்கள்:
அறிமுகப் போட்டியிலேயே 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ‘ஜாம்ஷெட் ஆலம்’...
வைபவ் சூர்யவன்ஷி - Vaibhav Suryavanshi