

ஒரு சிறுவனின் மனதில் விதையாக விழுந்த கனவு, பத்து ஆண்டுகள் கழித்து மைதானத்தில் சாதனையாக மலர்ந்திருக்கிறது. குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் தடையாக இருந்தாலும், கிரிக்கெட் மீதான காதலைக் கைவிடாத இளைஞர் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பதே பெரிய சாதனை. அதுவும் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துவது அரிதான நிகழ்வு. அதனைத் தனது முதல் உள்ளூர் டி20 போட்டியிலேயே நிகழ்த்தியிருப்பவர் ரயில்வேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாம்ஷெட் ஆலம். அவரது சாதனையைவிட, அந்த இடத்தை அடைவதற்காக அவர் கடந்து வந்த பாதை நெகிழ்ச்சியூட்டுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் ஃபசில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாம்ஷெட் ஆலம். விவசாயியான அவரது தந்தைக்கு, குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக கிரிக்கெட் பயிற்சிக்கான செலவுகளை ஏற்க முடியவில்லை. ஆனால், தனது அண்ணனுடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்ற 13 வயது ஜாம்ஷெத்தின் மனதில், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை ஆழமாகப் பதிந்தது.
வீட்டில் தனது விருப்பத்தைச் சொன்னபோது தந்தையிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. கிரிக்கெட் என்ற பேச்சையே எடுக்க வேண்டாம் என்று அவர் கண்டிப்பாகக் கூறியதாக ஜாம்ஷெட் நினைவு கூர்ந்துள்ளார். ஆனாலும் கனவை விடத் தயாராக இல்லாத அவர், தன்னிடம் இருந்த ரூ.2,500 பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். லக்னோவில் வசித்த நண்பர் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். அங்குள்ள கொல்வின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியைத் தொடங்கினார்.
பயிற்சிக் கட்டணத்தைக் கட்டுவதற்கும் சிரமம் ஏற்பட்டது. அப்போது அண்ணன் உதவினார். பயிற்சியாளர் பிஸ்வஜித் சின்ஹாவும், போட்டியில் வெற்றியைத் தேடித்தரும் பந்துவீச்சை வெளிப்படுத்தினால் இலவசமாகப் பயிற்சி அளிப்பதாக உறுதியளித்தார்.
அடுத்த இரண்டு போட்டிகளில் ஜாம்ஷெட் சிறப்பாகப் பந்துவீசி அந்த வாய்ப்பைப் பெற்றார். பின்னர் குடும்பத்தினர் சமாதானப்படுத்தியதால் வீடு திரும்பினார். தந்தை இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார். அந்தக் காலத்திற்குள் உத்தரப் பிரதேசம் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார்.
பின்னர் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் ரயில்வேஸ் அணிக்கு மாறினார். விளையாட்டு ஒதுக்கீட்டில் ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியும் கிடைத்தது. 23 வயதில் சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் சௌராஷ்டிராவுக்கு எதிராக அறிமுகமானார். அந்தப் போட்டியில் ஹர்விக் தேசாய், பிரேரக் மங்கட், ருசித் அஹிர், சம்மர் குஜ்ஜர் ஆகியோரைத் தொடர்ந்து நான்கு பந்துகளில் வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தார்.
கடந்த சீசனில் 23 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரில் ரயில்வேஸ் அணியின் அதிக விக்கெட்டுகளை எடுத்தது அவருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
அணியின் முதல் நான்கு தோல்விகளையும் வெளியில் அமர்ந்து பார்த்த ஜாம்ஷெட், கிடைத்த வாய்ப்பைச் சாதனையாக மாற்றினார்.
மும்பை டி20 லீக்கில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய அனுபவமும் அவருக்கு உண்டு. ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியும் கிடைத்துள்ளது. மகனுக்குக் கிடைத்த அரசுப் பணியில் தந்தை பெருமை கொண்டாலும், இந்திய அணியிலோ ஐ.பி.எல். தொடரிலோ இடம்பிடித்த பிறகே தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கூறுகிறாராம். அந்த எதிர்பார்ப்பே ஜாம்ஷெத்தின் அடுத்த இலக்கை உணர்த்துகிறது.
ஜாம்ஷெத்தின் இந்த சாதனை ஒரே நாளில் கிடைத்த வெற்றி அல்ல.. ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தாலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் தனது திறமையை நிரூபிப்பதற்கான மேடையாகவே அவர் பயன்படுத்திக் கொண்டார்.. வேகப் பந்து வீச்சில் ஆர்வம் கொண்ட அவர், தொடர்ந்து பயிற்சி செய்து தனது பந்து வீச்சின் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்தினார்..
மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் அவரிடம் இருப்பது அவரது கடின உழைப்பிற்கு சான்று..
கிரிக்கெட் பயணத்தில் தோல்விகளும் ஏமாற்றங்களும் இயல்பானதே.. குறிப்பாக இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போவது மனச் சோர்வை ஏற்படுத்தலாம்.. ஆனால் ஜாம்ஷெட் அவற்றைக் கடந்து தனது முயற்சியைத் தொடர்ந்தார்.. ரயில்வேஸ் அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்..
இப்போது அவரது பார்வை இந்திய அணியில் இடம் பிடிப்பதிலும், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதிலும் இருக்கிறது.. தனது திறமையால் தந்தையின் நம்பிக்கையை முழுமையாகப் பெற வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக உள்ளது.. அந்த இலக்கை நோக்கி அவர் தொடர்ந்து பயணிக்கிறார்..
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகவே வீட்டை விட்டுப் புறப்பட்ட சிறுவன், இன்று தனது திறமையால் குடும்பத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.. அவரது பயணம், கனவு காணும் இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை..
பத்து ஆண்டுகள் காத்திருந்த கனவுக்கு நான்கு பந்துகள் புதிய அடையாளம் தந்துள்ளன. ஜாம்ஷெத்தின் அடுத்த இலக்கு இந்திய அணிக்காகவும் ஐ.பி.எல். தொடரிலும் விளையாடுவது.
அவரது விடாமுயற்சி அந்த வாய்ப்பையும் ஒருநாள் பெற்றுத் தரட்டும்! அவரது கனவு நனவாகட்டும் என்றே வாழ்த்துவோம்.