
கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தான். இது வரை 22 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு இந்த பதிவில்.
1934ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் ரிசார்ட் ஜமாரோ, மைதானத்தில் விளையாட செல்லும் போது தன்னுடன் ஒரு துடைப்பான் எடுத்துச் செல்வார். அதை கோல் கம்பம் அருகே வைத்திருப்பார். அவ்வப்போது கோல் கம்பத்தை அந்த துடைப்பான் மூலம் சுத்தம் செய்வார். ஏன் தெரியுமா? கோல் கம்பம் சுத்தமாக இருந்தால் கோல்கள் விழாது என்பது இவரது வித்தியாசமான நம்பிக்கை.
1998 உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ்தான் கோப்பையை வென்றது. ஆனால் அடுத்த 2002 உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெளியேறியது பிரான்ஸ். அதேபோல் 2010 உலக கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது ஸ்பெயின் ஆனால் அடுத்த 2014 உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெளியே வந்து விட்டது ஸ்பெயின். 2014 உலக கோப்பை போட்டியில் கோப்பையை வென்றது ஜெர்மனி ஆனால் 2018 ல் போட்டியில் மெக்சிகோவிடம் தோற்றது. பின்னர் முதல் சுற்றிலேயே வெளியேறியது.
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 2010-ம் ஆண்டில் ஸ்பெயின் தன்னுடைய முதல் போட்டியில் தோல்வி அடைந்தது, ஆனால் அந்த ஆண்டு கோப்பையை வென்றது அந்த அணி தான். இது போன்று வேறு எந்த அணிக்கும் நடைபெறவில்லை.
1962-ல் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதியில் ரஷ்யாவிற்கு எதிரான போட்டியில் சிலி நாட்டின் வீரர் எலாடியோ ரோஜால் வெற்றி கோலை அடித்தார். அவரை முதலில் கட்டிப்பிடித்து வாழ்த்தியவர் ரஷ்ய கோல்கீப்பர் தான். அவரை அடுத்து டச்சு நடுவர் லியோ கார்ன் வாழ்த்தினார். அதன் பிறகு தான் அவரது அணி சார்பில் வாழ்த்தினார்கள்.
1970-ல் மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் முதன்முதலாக கலரில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதே போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் கோல் அடித்த ஒரே வீரர் பிரேசில் நாட்டின் ஜேர் ஜின் ஹோ. வேறு யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1990-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் மெக்சிகோ அணி விளையாட தடை விதித்தது ஃபீஃபா. காரணம் அந்த அணியின் வீரர்கள் தங்களது வயதை ஏட்டிக்குப் போட்டியாக கூறியது தான்.
2002-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியை ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தியது. பல்வேறு நாடுகள் இணைந்து நடத்திய முதல் மற்றும் ஆசியாவில் நடந்த முதல் உலக கோப்பை போட்டி அது தான். கிரிக்கெட் விளையாட்டில் ஸ்டாம்ப் கேமரா உள்ளது போல் கால்பந்தாட்டத்தில் முதல் முறையாக கோல் போஸ்டில் கேமரா பொருத்தப்பட்டது அப்போது தான்.
2018 உலக கோப்பை இறுதி போட்டியில் பிரான்சும், குரோஷியாவும் மோதின. இதற்கு நடுவராக பணியாற்றிவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நெஸ்டர் பீட்னா. இவர் ஒரு முன்னாள் ஆக்ஷன் பட ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி போட்டியை முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பார்வையிட்டார்கள்.
4 முறை உலக கோப்பையை வென்ற இத்தாலி மற்றும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் 2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் உலகின் சிறிய நாடான ஐஸ்லாந்து உலக கோப்பை வரலாற்றில் முதன் முறையாக விளையாட தகுதி பெற்றது. இந்த அணியின் பயிற்சியாளர் ஹெர்மன் ஹால்கீரிம்சன் ஒரு பல் மருத்துவர் என்பது சுவாரஸ்யமான தகவல். இவர் கால்பந்து பயிற்சி இல்லாத நேரத்தில் பல் மருத்துவராக மாறிவிடுவாராம்.
2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஒரு நம்பிக்கை. அவர்கள் கலந்து கொண்ட மேட்ச்களில் எல்லாம் F வடிவில் கால்பந்துகளை மைதானத்தில் அடுக்கி வைத்து விட்டு தான் களத்தில் இறங்குவார்கள். இப்படி செய்தால் தங்களுக்கே வெற்றி என்று நம்பி வந்தார்கள்.
2022-ல் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 130 கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் பிறந்த நாடுகளை விட்டுவிட்டு வேறு வேறு நாடுகளுக்கு விளையாடினார்கள் . இப்படி நடந்தது அதுவே முதல்முறை. உலகக்கோப்பை வரலாற்றில் தாய் நாட்டிற்கு எதிராக வேறு ஒரு நாட்டிற்கு விளையாடி முதல் கோலை பதிவு செய்தவர் ஃபிரில் எப்போலோ. 25 வயதான இவர் கேமரூன் நாட்டில் பிறந்தவர். 2022-ல் நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டிற்காக விளையாடி தன் முதல் கோலை அடித்தார். ஆனால் அதனை கொண்டாட மறுத்து விட்டார்.
கத்தார் உலகக்கோப்பை போட்டிகளில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டை முதல் சுற்றில் வீழ்த்தியது சவுதி அரேபியா. இந்த கொண்டாட்டத்திற்கு சவூதி அரேபியா அரசு ஒரு நாள் பொதுவிடுமுறை அறிவித்தது. அத்துடன் சவுதி அரேபிய அணி கால்பந்து வீரர்களுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசாக வழங்கியது.