

2026 உலகக் கோப்பையில் ஸ்பெயினை எதிர்த்து கேப் வெர்டேவை காப்பாற்றிய 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா, ஏழு அசத்தலான சேவ்களால் உலக கவனத்தை ஈர்த்தார்; அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்புகள் சில மணி நேரத்தில் 50 ஆயிரத்திலிருந்து 75 லட்சமாக உயர்ந்தது.
இதே நேரத்தில், தந்தையின் தாய்நாடு டூனிசியாவுக்கு எதிராக கோல் அடித்தும் கொண்டாட மறுத்த ஸ்வீடன் வீரர் யாசின் அய்யாரியின் மரியாதை உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது.
ஒரே நாளில் உலகப் பிரபலமான கோல்கீப்பர்
2026 உலகக் கோப்பையின் ஆரம்ப ஆச்சரியங்களில் ஒன்றாக அமைந்தது ஸ்பெயின் - கேப் வெர்டே மோதல். உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான ஸ்பெயினை கோலின்றி தடுத்து நிறுத்திய கேப் வெர்டே அணியின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா (Vozinha). ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான கேப் வெர்டேவில், மிண்டெலோ நகரில் பிறந்தவர் ஜோசிமார் ஜோசே எவோரா டயாஸ் என்பது அவரின் முழுப் பெயர்.
ஃபிஃபா 2026 லில் ஜூன் 15 அன்று உலகக் கால்பந்தின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றான ஸ்பெயின் அணி. மறுபுறம், கேப் வெர்டே உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாடும் சிறிய தீவு நாடு. போட்டிக்கு முன் கணிப்புகள் அனைத்தும் ஸ்பெயினுக்கே சாதகமாக இருந்தன.
ஆனால், போட்டி தொடங்கிய பிறகு எதிர்பார்க்கப்பட்ட கதை அப்படியே மாறியது. ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வோசின்ஹாவின் சேவ்கள் முக்கியப் பங்கு வகித்தன. அந்தப் போட்டியில் அவர் ஏழு முக்கிய சேவ்களை நிகழ்த்தி, ஸ்பெயின் அணியின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தார். அவரது அமைதியான ஆட்டமும், சரியான நிலைப்பாடும் கேப் வெர்டே அணிக்கு நம்பிக்கையை அளித்தன. இறுதியில், அந்தப் போட்டி கோலின்றி முடிந்தது. இது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது.
அதேவேளை, ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே, கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் உலக அளவில் வைரலானது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை சுமார் 50,000 பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்த அவரது இன்ஸ்டாகிராம் பக்கம், போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே 75 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்தது.
இரட்டை கோல்களை அடித்தும் கொண்டாடாத வீரர்..!
யாசின் அய்யாரி (Yasin Ayari)சுவீடன் நாட்டைச் சேர்ந்த 22 வயதான இளம் கால்பந்து வீரர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஸ்வீடன் அணிக்காக விளையாடி வருகிறார். 15-6-26 ல்போட்டியில் உலகக்கோப்பை தகுதி சுற்றில் ஸ்வீடன் மற்றும் டூனிசியா நாட்டு அணிக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் யாசின் அய்யாரி களமிறங்கினார்.
அந்தப் போட்டியில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் (Double goal) அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். பொதுவாக கோல் அடிக்கும் வீரர்கள் களத்தில் கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் யாசின் மைதானத்தில் அமைதியாக நின்றார்.
கொண்டாடாத காரணம், அவரது தந்தை பிறந்த நாட்டிற்கு எதிராக அவர் விளையாட நேர்ந்தது. தன் தந்தை பிறந்த நாட்டிற்கு எதிராக கோல் அடித்து விட்டோமே என்ற வருத்தத்தாலும், தான் பிறந்து வளர்ந்த ஸ்வீடன் நாட்டிற்கு எந்த வகையிலும் துரோகம் செய்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர் கோல் அடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் அமைதியாக எதிரணி வீரர்களை பார்த்து வணங்கி நின்றார். இது உலக அளவில் பெரும் வைரலாகி மக்களின் மனதை நெகிழ வைத்தது.
ரசிகர்களுக்குத் தலைவணங்கிய வீரர்கள்!
ஜப்பான் அணி ரவுண்டு ஆஃப் 32 போட்டியில் பிரேசிலிடம் 2-1 கணக்கில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்ததும், ஜப்பானிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு, தனது வீரர்களை மைதானத்தின் மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிய பிறகு, அணியினரைத் தங்களின் ரசிகர் பட்டாளம் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
தங்களின் உலகக் கோப்பைப் பயணம் முழுவதும் பெரும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு முன்னால், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்ட பயிற்சியாளர் மோரியாசு, குனிந்து தலைவணங்கி நன்றி தெரிவித்தார். அவரை தொடர்ந்து, அணியின் ஒவ்வொரு வீரரும் தலைவணங்கி மரியாதை செலுத்தினர்.
இந்த ஒரு செயல், தோல்வியின் வலியைத் தாண்டி அவர்களின் பண்பை உலகிற்குப் பறைசாற்றியது. இதோடு ஆட்டம் முடிந்ததும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்துவிட்டு சென்றது உலகின் கவனத்தை ஈர்த்தது. தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.
ஈரானின் உருக்கமான கடிதம்
பெல்ஜியம் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தை 0-0 என்ற கணக்கில் சமன் செய்த பிறகு, ஈரான் கால்பந்து அணி சோஃபி அரங்கின் (SoFi Stadium) ஆடை மாற்றும் அறையில் கைகளால் எழுதப்பட்ட நெகிழ்ச்சியான நன்றி கடிதம் ஒன்றை விட்டுச் சென்றது.
அமெரிக்காவின் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களுக்கு மத்தியிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மற்றும் அங்குள்ள ஈரான் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் ஈரான் அணி குறிப்பிட்ட உருக்கமான வரிகள்...
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய பெர்சியா முதல் இன்றைய நாகரிக ஈரான் வரை, ஈரானின் ஆன்மா எப்போதும் உயிர்ப்போடும் உறுதியோடும் உள்ளது; நாங்கள் பெருமையுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தோம், மரியாதையுடன் போட்டியிட்டோம், இப்போது கண்ணியத்துடன் விடைபெறுகிறோம்; லாஸ் ஏஞ்சல்ஸ் நகரே, உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி! இந்த 180 நிமிட ஆட்டங்களிலும் எங்களுக்காக தங்கள் இதயம், குரல் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்த ஒவ்வொரு ஈரானியருக்கும் எங்களது நன்றி; அனைத்து நாடுகளுக்கு இடையேயும் அமைதி, மரியாதை மற்றும் நட்பு நிலவட்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு சம்பவமாக இது கருதப்படுகிறது.
பிரான்ஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியின் ஆர்லாண்டோ கில் கோல்கீப்பருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் 1-0 என வென்றாலும் கில்லின் நேர்த்தியான துடுப்பாட்டம் ஆட்ட நாயகன் விருது தோல்வியடைந்த அணியின் வீரருக்கு வழங்கப்பட்டது கால்பந்து ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரான்ஸ் முன்னாள் வீரரான 57 வயதான டிடியர் டெசாம்ப்ஸ் அந்த நாட்டு கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் பிரான்ஸ் 2014-ம் ஆண்டு காலிறுதியுடன் வெளியேறியது. 2018-ல் மகுடம் சூடியது. 2022-ல் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்றது. தற்போது நாக் அவுட் சுற்றில் சுவீடனை பிரான்ஸ் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பையில் அவரது பயிற்சியின் கீழ் பிரான்சுக்கு கிடைத்த 18-வது வெற்றியாகும்.
அத்துடன் உலகக் கோப்பை யில் அதிக வெற்றிகளை குவித்த பயிற்சியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளனமும் (பிபா) இதற்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு கவுரவித்தது. இது உலக கால்பந்து ரசிகர்களை நெகிழ வைத்தது.
கால்பந்து விளையாட்டு என்பது வெறும் வெற்றி தோல்விகளைத் தாண்டியது என்பதை உணர்ந்து, உலகக் கோப்பையில் வீரர்கள் காட்டிய பண்பு, மனிதநேயம் மற்றும் சுயகட்டுப்பாடு ஆகிய உன்னத குணங்களை அறிந்து உத்வேகம் பெறலாம்.