

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் கபடி என்று அழைக்கப்படும் சடுகுடு விளையாட்டு மிகவும் முக்கியமானது. மாறிவரும் நாகரிகமான சூழல்களிலும் இன்றும் கபடி விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக விளையாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் திருவிழா காலங்களில், பொங்கல் , தமிழ் புத்தாண்டு, ஆடிப் பெருக்கு போன்ற பாரம்பரிய கொண்டாட்ட நாட்களிலும் கபடி போட்டிகள் உள்ளூர் குழுவினரால் நடத்தப்படுகிறது.
பொதுவாக கபடி போட்டியின் முக்கிய நிபந்தனை, "மூச்சு விடாமல் 'கபடி கபடி' என்ற வார்த்தையை உச்சரித்துக் கொண்டே எதிரணியை சேர்ந்த வீரர்களை , அவர்களின் எல்லைக்குள் சென்று தொட வேண்டும்," என்பது தான். சில நேரங்களில் எதிரணி வீரர்களை தொடாமல் , குறிப்பிட்ட நிமிடங்கள் வரை அவர்களின் எல்லைக்குள் இருந்துவிட்டு, மீண்டும் தங்களது எல்லையை வீரர் தொட்டாலும் அவர் ஆட்டமிழக்காமல் இருப்பார்.
இந்த விளையாட்டில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால் , எப்போதெல்லாம் ஒரு அணியின் வீரர் எதிர் அணியின் எல்லைக்குள் செல்கிறாரோ? அப்போதெல்லாம் அவர் மூச்சு விடாமல் 'கபடி கபடி' என்ற வார்த்தையை விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை அவர் ஒரு நொடி, கபடி கபடி சொல்வதை விட்டு விட்டால், அவர் ஆட்டம் இழந்ததாக அர்த்தம்.
பெரும்பாலும் வீரர்கள் 'கபடி கபடி' சொல்வதை விட மாட்டார்கள். அப்போது எதிர் அணியை சேர்ந்த வீரர்கள் அந்த வீரரை சூழ்ந்து, அவர் எல்லைக் கூட்டினை கோட்டினை தொட்டு விட முடியாதபடி பிடித்து அமுக்கி விடுவார்கள். அவர் மூச்சு விடும் வரை எதிரணி வீரர்கள் அவரை விட மாட்டார்கள். ஒருவேளை அவர் மூச்சை விட்டு விட்டால், கபடி போட்டியில் அவர் ஆட்டம் இழந்ததாக வெளியேற்றப்படுவார்.
அதே நேரம் மூச்சை அடக்கி 'கபடி கபடி' என்று சொல்லிக் கொண்டே அவர் மெதுவாக எல்லைக்கோட்டை தொட்டுவிட்டால் , அவரைப் பிடித்து வைத்திருந்த எதிரணியை சேர்ந்த அனைத்து வீரர்களும் ஆட்டம் இழந்ததாக வெளியேற்றப்படுவார்கள்.கபடி போட்டியை பொருத்தவரையில் மூச்சினை அடக்குவது தான் போட்டியின் முக்கிய விதியாகும். இந்த விதியை பின்பற்றுபவர் அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவார்கள்.
கபடி போட்டியில் 'கபடி கபடி' என்ற வார்த்தை முக்கியமானது அல்ல, இங்கு மூச்சை அடக்குவது தான் பிரதானமானது. உள்ளூர் வட்டார பழக்கங்களின்படி பல்வேறு பாடல்கள் கபடி போட்டிக்கும்போது பாடப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் 'சடுகுடு சடுகுடு' என்ற பாடல் போட்டியின் போது ரெய்டுக்கு செல்லும் வீரர்களால் பாடப்படுகிறது. இன்னும் சில இடங்களில், 'நான் தான் கொப்பன் டா ' உள்ளிட்ட சில உள்ளூர் வட்டார பாடல்கள் பாடப்படுகிறது.
கபடி போட்டி மூச்சை அடக்குவதன் முக்கியத்தை உணர்த்துவதற்காக விளையாடப்படுகிறது. இது ஒரு வகையில் யோகாசனத்தின் பிராணயாமம் போன்ற ஒரு முக்கியமான மூச்சு பயிற்சியாகும். அமர்ந்த நிலையில் மூச்சை அடக்குவதன் அடுத்த நிலையாக ஓடிக்கொண்டோ நடந்தோ மூச்சை அடக்குவது மேம்பட்ட பயிற்சியாக விளங்குகிறது. அத்துடன் வாயில் பாடலை முணுமுணுத்துக் கொண்டே போட்டியில் நடப்பது, நுரையீரலின் வலிமையை மேலும் அதிகமாக்குகிறது.
பழங்கால விளையாட்டான இது எதிரிகளிடம் ஒரு வீரன் சிக்கிக்கொண்டால், அவன் மூச்சை அடக்கும் போது உள்ளே ஒரு உத்வேகம் கிடைக்கும், அதன் மூலம் அவன் தாக்குதல் நடத்த உந்தப்படுவான். எதிரிகள் இடம் இருந்து தப்பிப்பதற்கு சில நொடிகள் மூச்சை அடக்கும் பயிற்சி அவனுக்கு வலிமையை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் தினசரி சில நிமிடங்கள் மூச்சை அடக்கும் பயிற்சி சுவாச பாதைகளை சுத்தம் செய்வதோடு, சுவாசிப்பதை எளிதாக்குகிறது.
நல்ல மூச்சுப் பயிற்சி நுரையீரலையும் தாண்டி இதய செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. இதனால் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெற்று மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீரான வேகத்தில் இயங்கும், அதனால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. கபடி போட்டியின் நோக்கம் எதிரணி வீரர்களை வெற்றி பெறுவதாக இருந்தாலும் , அந்த விளையாட்டினை உருவாக்கிய நோக்கம் சிறந்த மூச்சுப் பயிற்சி என்பதன் அடிப்படையில்தான் இருந்திருக்கும்.