
வயது வித்யாசமின்றி நம் அனைவருக்கும் அவ்வப்போது, வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் உடலில் வீக்கங்களும் வலிகளும் உண்டாவது இயற்கை. அந்த மாதிரி நேரங்களில் அவைகளின் தாக்கத்திலிருந்து விடுபட இயற்கை நமக்கு அளித்துள்ள உணவுப் பொருட்களே உறுதுணையாகும்.
அப்படி நமக்கு உதவக் கூடிய 10 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. அவகாடோ: அவகாடோ பழத்தில் முழுக்க ஆரோக்கியம் தரும் கொழுப்புகளும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை உடலிலுள்ள வீக்கங்களைக் குறைக்கவும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் வலிகளையும் அசௌகரியங்களையும் குறைக்க உதவும் பழம் இது.
2. நட்ஸ் மற்றும் விதைகள்: அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட தாவர வகைக் கொட்டைகள் வீக்கங்கங்களைக் குறைக்க, குறிப்பாக மூட்டுகளுக்கிடையே ஏற்படும் வீக்கத்தைக் குணப்படுத்த சிறந்த முறையில் உதவி புரிகின்றன.
3. பச்சை இலைக் காய்கறிகள்: இவற்றில் நிறைந்துள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூட்டுகளுக்கிடையே ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பெரிதளவில் உதவி புரிபவை.
4. தக்காளி: தக்காளி ஒரு ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் நிறைந்த பழம். இது ஆர்த்ரிடிஸ் போன்ற நோய் உடையவர்களின் வீக்கங்களையும் வலிகளையும் குறைக்க சிறந்த முறையில் உதவி புரியும்.
5. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்ட ஃபிளவனாய்ட்கள் உள்ளன. டார்க் சாக்லேட்டை குறைந்த அளவில் உட்கொள்ளும்போது அதிலுள்ள ஃபிளவனாய்ட்கள் வலியையும் வீக்கங்களையும் குறைக்க உதவும்.
6. க்ரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள அதிகளவு பாலிஃபினால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கங்களையும் வலிகளையும் குறைக்க சிறந்த முறையில் உதவி புரியும். நாள்ப்பட்ட வலியுடையவர்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் வலி படிப்படியாகக் குறைந்து குணம் கிடைக்கும்.
7. மஞ்சள்: மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த கூட்டுப் பொருளான குர்க்குமின், பிடிப்புகள், வலி, வீக்கம் போன்ற அனைத்துக் கோளாறுகளையும் நீக்கும் வல்லமை கொண்டது. ஆர்த்ரிடிஸ் நோய் உள்ளவர்களுக்கு அருமையான வலி நிவாரணி மஞ்சள்.
8. பெரி வகைப் பழங்கள்: ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி உள்ளிட்ட அனைத்துப் பெரிவகைப் பழங்களிலும் வைட்டமின் C மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை வீக்கங்களைக் குறைத்து வலியிலிருந்து நிவாரணம் பெற பெரியளவில் உதவி புரிபவை.
9. ஃபேட்டி ஃபிஷ் (Fatty Fish): இந்த வகை மீன்களிலிருந்து கிடைக்கும் அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கங்கள் குறைய உதவுபவை. அதன் மூலம் வலிகள் குறைய வாய்ப்பு உண்டாகிறது.
10. ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் ஓலியோகான்தல் (Oleocanthal) என்றொரு கூட்டுப்பொருள் உள்ளது. இது இபுப்ரோஃபன் என்ற மாத்திரைபோல் செயல்படக் கூடியது. ஆலிவ் ஆயிலை சமையலில் சேர்த்து உட்கொள்ளும்போது உடலில் உள்ள வீக்கங்கள் குறைகின்றன.