

ஆரோக்கியமானவை என்று நினைத்து நாம் தினமும் நம்பிச் சாப்பிடும் பல உணவுகள் உண்மையில் ஆரோக்கிய மற்றவையாகவும் உடல் நலத்திற்கு பங்கம் விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக பழச்சாறுகள் (Fruit juices), பிரவுன் பிரெட் (Brown Bread), வெஜ் சிப்ஸ், இனிப்பு யோகர்ட், மற்றும் ஃப்ளேவர்ட் தயிர் (Flavored Yoghurt) போன்ற உணவுகளில் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மறைந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க...
இனிப்பு யோகர்ட் (Sweet yogurt):
யோகர்ட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் புரோபயாடிக்குகள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. ஆனால் இனிப்பு சேர்க்கப்பட்ட வண்ண நிறங்களை கொண்ட யோகர்ட்டுகளை தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் அதில் சர்க்கரைகளும், செயற்கை சுவையூட்டிகளும் அதிகமாக கலந்திருக்கும். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க செய்துவிடக்கூடும். அதற்கு பதிலாக சாதாரண தயிரை தேர்ந்தேடுப்பதே நல்லது.
வெஜ் சிப்ஸ் (Veggie Chips):
உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு ஆரோக்கியமானதுதான். அவற்றில் தயாரிக்கப்படும் சிப்ஸ்களில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். எண்ணெய்யிலும் பொரித்தெடுக்கப்படும் என்பதை விட அதில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கும். அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறி துண்டுகளை சிப்ஸ்களாக ருசிப்பது ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.
குறைந்த கொழுப்புள்ள உணவுகள் (Low-fat foods):
கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் (Fat free products) சுவை குறைவாக இருக்கும் என்பதால், அந்த சுவையை ஈடுகட்ட அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது.
டயட் சோடா (Diet Soda):
குறைந்த கலோரி கொண்ட பானம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் டயட் சோடாவில் செயற்கை இனிப்பூட்டிகள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். மேலும் சர்க்கரை மீதான ஆசையை அதிகரிக்க செய்துவிடும். இதை தொடர்ந்து ருசிப்பது வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் மற்றும் உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும். இனிப்பு சேர்க்கப்படாத மூலிகை தேநீர் அல்லது இயற்கையாகவே கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.
புரோட்டீன் பார்கள் (Protein Bars):
பெரும்பாலும், தங்கள் உணவில் அதிக புரதம் இருப்பது தங்களுக்கு நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் விரும்பி சாப்பிடும் இந்த பார்களில், உங்கள் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை இனிப்பூட்டிகள், செயற்கை சுவையூட்டிகள், சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்திகள் போன்ற பொருட்கள் அதிக அளவில் உள்ளன.
ஸ்மூத்தி (Smoothie):
ஸ்மூத்திகள் ஆரோக்கியமானவைதான். ஆனால் பாட்டிலில் அடைத்து பதப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்மூத்தி வகைகளில் சர்க்கரைகள் கலந்திருக்கும். இந்த பானங்களில் சம்பந்தப்பட்ட பழங்களில் உள்ள நார்ச்சத்து முழுமையாக இடம் பெறாது. பழங்களில் இருந்து நேரடியாக ஸ்மூத்தி தயாரித்து பருகுவதே நல்லது.
பழச்சாறுகள் (Fruit Juices):
கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதற்குப் பதிலாகப் பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.
பிரவுன் பிரெட் (Brown Bread):
வெள்ளை பிரெட்டுக்கு பிரவுன் பிரெட் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் பல பிரவுன் பிரெட்களில் மைதா (சுத்திகரிக்கப்பட்ட மாவு), சர்க்கரை மற்றும் செயற்கை நிறங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. எந்தவொரு பிரவுன் பிரெட்டிலும் உங்களுக்கு 100% கோதுமை மாவு கிடைக்காது. நீங்கள் எந்தவொரு பிரவுன் பிரெட்டையும் எடுத்து, அதன் மூலப்பொருட்கள் அடங்கிய லேபிளை நீங்களே படித்துப் பார்க்கலாம். அதில் ‘சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு’ என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஆகவே, பிரவுன் பிரெட் ஆரோக்கியமானது என்றும், அது சப்பாத்திக்கு நிகரானது என்றும் நினைத்து நீங்கள் அதைத் தவறாமல் சாப்பிட்டால், அது தவறு. நீங்கள் பிரவுன் பிரெட் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்க வேண்டும்.
வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter):
வேர்க்கடலை வெண்ணெயில் அதிக அளவு புரதமும், உங்கள் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படும் சில ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. வேர்க்கடலை வெண்ணெய் சந்தேகமின்றி ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்தியாவில் நமக்குக் கிடைக்கும் எல்லா வேர்க்கடலை வெண்ணெய் பிராண்டுகளும், அதில் வேர்க்கடலையை மட்டும் சேர்ப்பதில்லை, மற்ற ஆரோக்கியமற்ற பொருட்களையும் சேர்க்கின்றன.
எனர்ஜி பானங்கள் (Energy Drinks):
இப்போதெல்லாம் எனர்ஜி பானங்களும் பிரபலமாகி வருகின்றன. இந்தப் பானங்களைக் குடிப்பதால் உங்களுக்குத் தற்காலிக ஆற்றல் கிடைக்கும், உங்கள் மனமும் விழிப்புடன் இருக்கும். ஆனால், இந்தப் பானங்களுக்கு சில கடுமையான பக்க விளைவுகளும் உள்ளன. எனர்ஜி பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பானங்களில் ஹை-ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் என்ற ஒரு பொருள் உள்ளது. இது நமது உடலில் மிக வேகமாக கொழுப்பை உருவாக்குகிறது. கொழுப்பு கல்லீரல் உருவாவதற்கும் இது ஒரு முக்கிய காரணமாகும்.
எப்படி தவிர்ப்பது?
நீங்கள் வாங்கும் பொருட்களின் லேபிள்களை (Ingredients) முழுமையாகப் படிக்கவும். சர்க்கரை (Sugar), சோடியம் (Sodium) மற்றும் பாதுகாப்புகள் (Preservatives) குறைவாக உள்ள இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.