தற்போதைய காலகட்டத்தில் 35 முதல் 40 வயதில் இருப்பவர்களே அதிகமாக முழங்கால் வலியால் அவதிப்படுகின்றனர். உண்ணும் உணவின் மூலமே முழங்கால் வலியை கட்டுப்படுத்த முடியும். அது எந்த மாதிரி உணவு வகைகள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மஞ்சள்: இதில் உள்ள குர்க்குமின் பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளதால் இதை தினமும் உணவில் சேர்த்து வருவது முழங்கால் வலி மற்றும் மூட்டு வலியை போக்கும்.
2. ஆப்பிள் சைடர் வினிகர்: முழங்கால் வலி உள்ளவர்கள் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கலாம் அல்லது வலியுள்ள இடத்தில் அதை மேற்பூச்சாகவும் பூசலாம். இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை ஆலிவ் ஆயில் உடன் கலந்து ஒரு வாரத்திற்கு மசாஜ் செய்து வருவதால் முழங்கால் வலி குறையும்.
3. இஞ்சி: இதில் உள்ள ஜிஞ்சரால் என்கிற மூலப்பொருள் வலுவான அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இஞ்சியை உணவில் சேர்க்கும்போது வலி நன்றாகக் குறைகிறது. இஞ்சி டீ தயாரித்து அருந்தலாம் அல்லது உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.
4. கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. இவை இரண்டும் வலுவான அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள். இவை முழங்கால் வலியை குணப்படுத்துகின்றன. தினமும் ஒரு கேரட்டை நன்றாகக் கழுவி பச்சையாக உண்ணலாம். இல்லையென்றால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது. இது முழங்கால் வலியை கணிசமாகக் குறைக்கும்.
5. அவகோடா: இதில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்களை இது அளிக்கின்றன. மூட்டு வலியின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு அவகோடா பழம் தின்று வந்தால் வீக்கம், வலி குறையும்.
6. கடுகு எண்ணெய்: சிறிதளவு கடுகு எண்ணெயை ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து முழங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. முழங்கால் வீக்கமும் வலியும் குறையும்.
7. செர்ரி பழங்கள்: இதில் உள்ள அந்தோசயினின்கள் வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைக்கும். தினமும் சிறிதளவு செர்ரி பழங்களை உண்டு வந்தால் மூட்டுகள் ஆரோக்கியமாக செயல்பட உதவியாக இருக்கும்.
8. சிவப்பு மிளகாய்: இதில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது. உடலுக்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி முக்கியப் பங்கு வகிக்கிறது. மூட்டுகளுக்கு நல்ல கட்டமைப்பை அளிக்கிறது மற்றும் எலும்பை தசையுடன் இணைக்க உதவுகிறது. தசைநார்கள், தசை நாண்கள் மற்றும் குருத்தெழும்புகள் இவற்றை ஆதரிப்பதன் மூலம் வலி குறைகிறது. மாத்திரையாக உண்பதற்கு பதிலாக சிவப்பு மிளகாய் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி இருக்காது.
9. வால்நட்கள்: இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பி உள்ளன. முழங்கால் வலியை தணிப்பதில் வல்லமை பெற்றவை. இதில் அதிக கலோரிகள் இருந்தாலும் இவற்றை தினமும் தொடர்ந்து கொஞ்சமாக உண்டு வந்தால் நொறுக்கு தீனி எடுக்கத் தோன்றாது. உடல் எடையை குறைக்க உதவும். உடல் எடை குறைந்தாலே முழங்கால்களின் அழுத்தத்தை குறைக்க ஏதுவாக இருக்கும்.
10. முழு தானியங்கள்: சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் வலியையும் வீக்கத்தையும் அதிகரிக்கும். ஆனால், முழு தானியங்கள் மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணத்தை தரும். ஓட்ஸ், பார்லி, குயினோவா போன்றவையும் நல்ல பலன் தரும்.