உங்கள் காலைப்பொழுதை நீங்கள் தொடங்கும் விதம்தான் உங்கள் முழு நாளுக்கும் ஒரு நல்ல மனநிலையை தரும். அந்த வகையில் காலையில் சுறுசுறுப்புடன் எழுந்து பணிகளை தொடங்குவது அந்நாளை சிறப்பாக அமைப்பதற்கான அடித்தளமாகும். ஆனால் ஒரு சிலரோ காலை எழுந்ததுமே மந்தமாக உணர்வார்கள். அதனால் அன்றாட வேலைகளை கூட செய்வதற்கு அவர்களுக்கு சக்தி இருக்காது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்களை பின்பற்றிப் பாருங்கள்... உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
1) காலையில் தூங்கி எழுந்ததும் காதுகளுக்கு மசாஜ் செய்வது உங்களது தூக்க கலக்கத்தை முற்றிலும் நீக்க உதவுவதுடன், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும். இதன் பின்னர் எழுந்ததும் சிறிது நேரம் உடலை முறுக்கி 'ஸ்ட்ரெட்ச் அவுட்' பயிற்சியை செய்வதன் மூலம் உடல் தசைகள் ரிலாக்ஸாகி தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பாகும்.
2) காலை எழுந்ததுமே படுக்கையில் இருந்தபடியே செல்போனை பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இந்த பழக்கம் உங்களது உடல் சுறுசுறுப்பு மற்றும் நேர்மறை சிந்தனை என அனைத்தையும் தடுக்கும். எனவே, காலையில் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்பட மொபைல் போன் பயன்படுத்துவதை தூங்கி எழுந்து ஒரு மணி நேரத்திற்கு தவிர்க்கவும்.
3) பின்னர் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தண்ணீர் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை தொடங்கும். நச்சுக்களை வெளியேற்ற உதவும் மற்றும் மூளையை நீரேற்றம் செய்யும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
4) பின்னர் முகம் மற்றும் வாய் கழுவ வேண்டும். காலையில் 50 மில்லி தண்ணீரில் 5-7 துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் பிரச்சினைகள் நீங்கும். ஆயில் புல்லிங் செய்யலாம். அதுவும் மிகவும் சிறப்பானது. தூங்கி எழுந்ததும் பல் துலக்குதலை தவிருங்கள்.
5) தினமும் காலையில் பல் துலக்கும் போது பற்களை சுத்தம் செய்தல் போலவே நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் நாக்கில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து ஈறுகளை காக்கும். பற்களில் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்.
6) காலைக்கடன்களை முடித்தவுடன் தினமும் காலை 10 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா அல்லது லேசான உடற்பயிற்சி செய்வதை பழக்கமாகக் கொள்ளுங்கள். இது உடல் இயக்கம், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசைகளுக்கு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் மற்றும் மூளைக்கு ஆக்சிஜனை வழங்கும். பதட்டத்தை நீக்கி மனத்தெளிவை அதிகரிக்கும்.
7) காலையில் 3 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் மற்றும் சுவாச பயிற்சியில் கவனம் செலுத்தினால், மன அழுத்தம் குறையும். மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். நுரையீரல் நலன் காக்கும்.
8) காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பது வைட்டமின் டி பெற உதவுகிறது. மேலும் இது மனநிலையை மேம்படுத்தி உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கவும், இரவில் ஆழ்ந்த தூக்கம் வரவும் உதவும் என்கிறார்கள்.
9) காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பதால் சிறுநீரகம், குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். காலையில் உணவு எடுத்துக் கொள்ளும் 10-15 நிமிடங்களுக்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட உடல் அழற்சிக்கான அறிகுறிகள் நீங்கி, உடல் உற்பத்தி திறன் தூண்டப்படும். நினைவாற்றலை அதிகரிக்கும்.
10) உங்களுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் வழங்குவது நீங்கள் எடுத்துக் கொள்ளும் காலை உணவு தான். அதனை ஒரு போதும் தவிர்க்காதீர்கள். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை காலை உணவாக சாப்பிடுங்கள். இவை ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். காலை உணவை 8 மணிக்குள் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.