

சிலருக்கு உடலில் ஏற்படும் சில வலிகள் தீவிரமான நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். நெஞ்சு வலி, திடீர் கடுமையான தலைவலி, மூச்சுத் திணறலுடன் கூடிய கால் வலி, வயிற்றின் கீழ் பகுதியில் கடுமையான வலி, தொடர்ந்து முதுகு வலி, மற்றும் திடீர் உடல் எடையிழப்புடன் கூடிய வலி போன்றவை தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. அந்த வகையில் ஒருபோதும் உதாசீனம் செய்யக்கூடாத 12 முக்கிய வலிகள் மற்றும் அவை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்:
திடீர் கடுமையான தலைவலி:
பொதுவாக தலைவலி ஏற்பட்டால் பலரும் தைலம் தடவிக்கொள்வார்கள் அல்லது மாத்திரை போட்டுக்கொள்வார்கள்.
ஆனால் இதுவரை அனுபவிக்காத அளவுக்கு திடீரெனவும் கடுமையாகவும் தலைவலி ஏற்பட்டால், மூளையில் ரத்தக்கசிவு (Brain Hemorrhage), பக்கவாதம் (Stroke) அல்லது ரத்த அழுத்த மாற்றங்கள் போன்ற ஆபத்தான நிலைகளை சுட்டிக்காட்டலாம். உயர் இரத்த அழுத்தம் (Hypertension) இந்த ரத்தக்கசிவு பக்கவாதத்தின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கண் வலி:
கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் இருந்தால், குளோக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம். கண் வலி, கடுமையான தலைவலி, திடீர் பார்வை இழப்பு, குமட்டல்/வாந்தி, கண்களில் ரத்தம் அல்லது சீழ், மற்றும் ஒளியை பார்க்க முடியாமை (ஒளி உணர்திறன்) ஆகியவற்றுடன் இருந்தால், அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தான அறிகுறியாகும்.
காது வலி மற்றும் சீழ் வெளியேறுதல்:
காது வலியுடன் காய்ச்சல் அல்லது கடுமையான துர்நாற்றத்துடன் கூடிய சீழ் வெளியேறுதல் ஏற்பட்டால், அது கடுமையான நோய்த்தொற்றின் அறிகுறியாகும். அந்த தொற்று தாடை, தொண்டை அல்லது மூக்கு பகுதிகளுக்கு பரவக்கூடும். அதேபோல் கடுமையான காது வலி திடீரென நின்றால், அது செவிப்பறை கிழிந்திருப்பதன் (Ruptured Eardrum) அறிகுறியாக இருக்கலாம். காது வலியின் போது காதுக்குள் எண்ணெய் அல்லது மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி ஊற்றக்கூடாது.
பல் வலி:
பல்லில் தொடர்ந்து வலி இருந்தால், ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். வலி லேசாக இருந்தாலும், அது அடிக்கடி வந்தால், பல் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது சிறந்தது, இல்லையெனில் தொற்று மற்ற பற்களுக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. அதேபோல் பல் வலி, இதய நோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
கழுத்து வலி மற்றும் காய்ச்சல்:
கழுத்தை அசைக்க முடியாத அளவுக்கு வலி மற்றும் அதனுடன் காய்ச்சல் இருந்தால், அது மெனின்ஜைட்டிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றுடன் கை/கால் பலவீனம், மரத்துப்போதல், விழுங்குவதில் சிரமம், அல்லது மூச்சுத் திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
திடீர் தோள்பட்டை வலி:
திடீர் தோள்பட்டை வலி, குறிப்பாக வலது பக்கத்தில் இருந்தால், அது பித்தப்பை கல் அல்லது வீக்கம் (Acute cholecystitis) காரணமாக இருக்கலாம். இது வயிற்றிலிருந்து தோள்பட்டைக்கு பரவுகிறது. மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலியுடன் இருந்தால் அது நுரையீரல் தொடர்பான பிரச்னையாக (நிமோனியா, கட்டிகள்) இருக்கலாம். இத்துடன் கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மார்பு வலி:
மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக மூச்சுத்திணறல், கடுமையான அழுத்தம் அல்லது அந்த வலி இடது கை, முதுகு அல்லது கழுத்து அல்லது தாடை பகுதிக்கு பரவினால், இதயக்கோளாறு அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
அதேபோல் லேசான வலியாக இருந்தாலும், அது அடிக்கடி ஏற்பட்டாலும், அந்த வலி மாரடைப்பு சம்பந்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்பு:
திடீரென ஏற்படும் வயிற்று வலி அல்லது பிடிப்பு, குடல் புண், பித்தப்பை கோளாறு அல்லது அல்சர் போன்ற பிரச்சனைகளை குறிக்கும் வலிகளாகும். சில சமயங்களில் இதற்கு அவசர சிகிச்சை தேவைப்படலாம். அதாவது வலி மிகவும் கடுமையாக இருந்தால், வலி 24 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், காய்ச்சல், வாந்தி அல்லது மலம் கழிப்பதில் ரத்தம் இருந்தால், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
முதுகு வலி (கீழ்பகுதி அல்லது நடுப்பகுதி):
முதுகின் கீழ்பகுதி அல்லது நடுப்பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால், முதுகுத்தண்டுவட பிரச்சனை, உட்புற நோய்த்தொற்று அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக இருக்கலாம்.
காய்ச்சல், சிறுநீரில் இரத்தம், குமட்டல், வாந்தி, எரிச்சல் அல்லது துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல் ஆகியவை ஆபத்தை உணர்த்தும் முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாகும். கடுமையான மற்றும் தொடர்ந்து இருக்கும் முதுகு வலி, காய்ச்சல் மற்றும் வாந்தியுடன் இருந்தால், தாமதிக்காமல் சிறுநீரக மருத்துவரை அணுகி, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் மூலம் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல்
கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், நரம்பு பாதிப்பு(Peripheral Neuropathy), ரத்த ஓட்டக் குறைபாடு (PAD)அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம். இந்த எரிச்சல் தொடர்ந்து நீடித்தாலோ, உணர்வின்மை, குத்தல் வலி அல்லது புண்களுடன் வந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி, அடிப்படை நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
காலில் ஏற்படும் வலி/வீக்கம்:
திடீர் கால் வலி, காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், தோலில் சிவப்பு/நீல நிற மாற்றம் மற்றும் அந்த இடம் வெதுவெதுப்பாக (வெப்பம்)மாறுதல் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், ரத்த உறைவு (Deep Vein Thrombosis - DVT) ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக டாப்ளர் ஸ்கேன் (Doppler Scan) பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். காலில் ரத்த உறைவு என்பது நரம்புகளில் ரத்தம் கட்டியாகி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தீவிரமான நிலை. இதை அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். ரத்த உறைவு நுரையீரலுக்குச் சென்றால் (Pulmonary Embolism) மாரடைப்பு அல்லது திடீர் மரணம் ஏற்படலாம்.
பாத வலி அல்லது உணர்விழப்பு :
பாதங்களில் முள் குத்துவது போன்ற உணர்வு, எரிச்சல், மரத்துப்போதல் (உணர்விழப்பு) அல்லது கடுமையான வலி அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வுகள் நீரிழிவு நோய், முதுகுத்தண்டு நரம்பு அழுத்தம் (Sciatica), இரத்த ஓட்டக் குறைபாடு (PAD) அல்லது தசை நாண் அழற்சி போன்றவை ஆபத்தை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் அதிகமாகலாம் அல்லது நடக்கும்போது கால் வலி கூடி, ஓய்வெடுக்கும்போது குறையலாம். இந்த வலிகள் நீண்ட நாட்களாக நீடித்தாலோ அல்லது கடுமையானதாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- உங்கள் உடலில் இத்தகைய எச்சரிக்கை அறிகுறிகள் ஏற்பட்டால் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. எந்தவொரு வலியும் தொடர்ச்சியாக நீண்ட நாட்களாக நீடித்தாலோ அல்லது கடுமையானதாக இருந்தாலோ தாமதமின்றி மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)