
ஆஸ்துமா என்பது சில சூழல்களில் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் நோய். சிறியவர்கள், பெரியவர்கள் உள்பட இந்தியாவில் சுமார் 3.5 கோடி பேர் ஆஸ்துமாவின் பாதிப்பில் உள்ளனர். சர்வதேச அளவில் ஆஸ்துமா நோயாளிகளில் 13% பேர் இந்தியாவில் உள்ளனர். அதன் இறப்பு விகிதமும் நம் நாட்டில் அதிகமாக உள்ளது. பலரும் ஆஸ்துமாவை சாதாரண நோய் என்று அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். இதன் கொடிய பாதிப்பை உடனடியாக அவர்கள் உணர்வதும் இல்லை. சரியான நேரத்தில் ஆஸ்துமாவைக் கண்டறிந்து அதை கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆஸ்துமா என்றால் என்ன? (What is Asthma)
ஆஸ்துமா என்பது நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் பாதைகளை சுருக்குகிறது, காற்றுப் பாதைகளில் சளியால் நிரப்பி சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது மூச்சுத் திணறல், இருமல் அல்லது விசில் சத்தத்துடன் மூச்சு விடுதல் ஆகியவற்றிற்கு வழி செய்கிறது. இது ஒரு நீண்ட கால நோயாக நீடிக்கிறது.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் (Symptoms of Asthma)
பொதுவாக ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் தனிப்பட்ட நபருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது, ஒரு சிலருக்கு அடிக்கடி மூச்சு திணறல் வரலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி தினசரி சில வழிமுறைகளை பின்பற்றுவார்கள். பெரும்பாலானவர்களுக்கு மழைக்காலம், குளிர்காலம், தூசிகள் கலந்த காற்றை சுவாசிக்கும் தருணம் போன்ற நேரங்களில் மட்டுமே ஆஸ்துமாவின் அறிகுறிகள் தென்படும். அந்த நேரங்களில் மட்டும் இவர்களுக்கு மூச்சு திணறல், இருமல் போன்றவை வரும். சுவாசிக்கும் போது ஒரு விசில் சத்தம் அடிக்கடி வரலாம். இவர்களுக்கு இரவு நேரம் மற்றும் காலை நேரத்தில் இது போன்று நடைபெறலாம்.
இது தவிர சுவாசிப்பதில் கடும் சிரமம், காற்றுக்காக அலைதல், மனதில் குழப்பம் ஏற்பட்டு நிலையில்லாமல் இருத்தல், நீலம் அல்லது வெளிர் நிறத்திற்கு மாறிய உதடுகள் அல்லது நகங்கள், தலைச்சுற்றல், நடப்பதில் அல்லது பேசுவதில் சிரமம் போன்றவை ஆஸ்துமா அவசர நிலையின் அறிகுறிகள். இந்த தருணத்தில் நோயாளிகள் உடனடியாக மருத்துவ உதவிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது? (Why does asthma occur)
ஆஸ்துமா ஒரு மரபணு சார்ந்த நோயாக பெரும்பாலும் இருக்கிறது. சில சமயங்களில் மோசமான மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல் காரணமாகவும் ஏற்படுகிறது. ஆனாலும், ஆஸ்துமா ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால் அவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இளம் வயதில் RSV வைரஸ் போன்ற சுவாச நோய்த் தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவதால் அவை ஆஸ்துமாவை தூண்டுகின்றன. இவை இல்லாமல் காற்று மாசுபாடு, புகை அல்லது ரசாயனங்கள் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது. மாசுபாடு காரணமாக இது 2-3% பெரியவர்களையும் 4-20% குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது.
ஆஸ்துமாவில் இருந்து வெளியேறுவது எப்படி? (How to get rid of asthma)
காற்று மாசுபாடு, தூசி, பூஞ்சை செல்லப்பிராணி முடி, குளிர்ந்த காற்று, மன அழுத்தம் மற்றும் புகை ஆகியவை ஆஸ்துமாவை தூண்டும் என்பதால் இந்த சூழல்களை தவிர்த்து விடுங்கள். குளிர் அல்லது ஈரப்பதமான வானிலைக்கு மாறும்போது எச்சரிக்கையாக இருங்கள். அதிக மாசுபாடு உள்ள நகரத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் அல்லது நல்ல காற்று உள்ள இடங்களுக்கு மாறுங்கள்.
ஆஸ்துமா முழுமையாக குணமாகும் நோயல்ல, ஆயினும் மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றினால் அதை எப்போதும் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். தேவைப்படும் நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், எப்போதும் இன்ஹேலர்களை வைத்துக் கொள்ளவும். சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், கடுமையான மூச்சுத் திணறல், நீல உதடுகள் அல்லது பேசுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.