மழைக்காலத்தில் உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்தால் இந்தத் தப்பு பண்ணாதீங்க!

நீரிழப்பு (Dehydration) ஆபத்தும், உயிர்காக்கும் ORS கரைசல் தயாரிப்பு முறைகளும் பற்றிய முழுமையான விழிப்புணர்வு.
Child Diarrhea Care | வயிற்றுப்போக்கு
Child Diarrhea Care | வயிற்றுப்போக்குImage Credit: ChatGPt
Dr K. Ravanan M.D, Paediatrics

டாக்டர். க. இராவணன் அவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் M.B.B.S. பட்டப்படிப்பினையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவத்தில் M.D (Paed) உயர் பட்டப்படிப்பினையும் படித்தவர். குழந்தைகள் நல மருத்துவத்தில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். தற்போது அரக்கோணத்தில் Dr. RAV’s Child Clinic என்ற பெயரில் குழந்தைகளுக்கான மருத்துவமனையினை நடத்தி வருகிறார். Indian Medical Association, Indian Academy of Pediatrics & Infectious Disease Chapter IAP முதலான அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராவார். தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கரங்களால் முதல் பரிசினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் ‘குழந்தை நலம்’ மற்றும் 'ஒரு குழந்தை நல மருத்துவரின் டைரி குறிப்புகள்' ஆகும்.

Updated on: 

மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது அதிகரிக்கலாம். அசுத்தமான குடிநீர், மாசுபட்ட உணவு, சுகாதாரமற்ற சுற்றுப்புறம் ஆகியவற்றின் மூலம் கிருமிகள் உடலுக்குள் நுழைகின்றன. வயிற்றுப்போக்கு ஒரு சாதாரண பிரச்சினையாகத் தோன்றினாலும், குழந்தைகளில் நீரிழப்பு ஏற்பட்டால் அது ஆபத்தான நிலையாக மாறலாம். எனவே பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான முதலுதவி ORS கரைசல்.

Q

வயிற்றுப்போக்கு ஏன் ஆபத்தானது?

A

வயிற்றுப் போக்கின்போது உடலில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல, சோடியம், பொட்டாசியம் போன்ற முக்கிய உப்புகளும் வெளியேறுகின்றன. இதனால் உடலின் நீர் மற்றும் உப்புச் சமநிலை பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆறு மாதத்திற்குக் குறைவான குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகலாம்.

Q

ORS என்றால் என்ன?

A

ORS என்பது Oral Rehydration Solution எனப்படும் வாய்வழி நீரேற்றக் கரைசல். இது தண்ணீர், குளுக்கோஸ் மற்றும் தேவையான உப்புகள் சரியான விகிதத்தில் கலந்த மருத்துவக் கரைசல். குடல் பாதிக்கப்பட்டிருந்தாலும், குளுக்கோஸ் மற்றும் சோடியம் இணைந்து உறிஞ்சப்படுவதன் மூலம் தண்ணீர் உடலுக்குள் செல்ல உதவுகின்றன. இதனால் நீரிழப்பைத் தடுக்கவும் சரிசெய்யவும் முடியும்.

Kid drink ORS | வயிற்றுப்போக்கு
ORS | வயிற்றுப்போக்கு
Q

ORS எப்படித் தயாரிப்பது?

A

மருந்தகங்களில் கிடைக்கும் ORS பொட்டலத்தை வாங்கி, அதன் மீது குறிப்பிடப்பட்டுள்ள தண்ணீரின் அளவில் முழுமையாகக் கரைக்க வேண்டும். சில பொட்டலங்கள் ஒரு லிட்டர் தண்ணீருக்கானவை, சில குறைந்த அளவு தண்ணீருக்கானவை. எனவே பொட்டலத்தின் வழிமுறையை கவனமாகப் படிக்க வேண்டும்.

கொதிக்கவைத்து ஆறிய அல்லது பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். கூடுதல் சர்க்கரை, உப்பு சேர்க்கக்கூடாது. குறைந்த தண்ணீரில் கரைப்பதும் தவறு. தயாரித்த கரைசலை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி, மீதமுள்ளதைத் தூக்கி எறிய வேண்டும்.

Q

எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும்?

A

வயிற்றுப்போக்கு தொடங்கியவுடன் ORS கொடுக்கலாம். ஒவ்வொரு முறை மலம் கழித்த பின்னரும் சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும்.

இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஒவ்வொரு வயிற்றுப்போக்கிற்குப் பிறகும் 50–100 மி.லி.

இரண்டு முதல் பத்து வயது குழந்தைகளுக்கு 100–200 மி.லி.

பெரிய குழந்தைகளுக்கு தாகம் மற்றும் தேவைக்கேற்ப அதிகமாகக் கொடுக்கலாம்.

குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் ஒரு கரண்டி அல்லது சிறிய அளவில் அடிக்கடி கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
இல்லத்தரசிகள் கவனத்திற்கு: ஜிம் போகாமல் உங்கள் உடல் நலத்தை எப்படிப் பாதுகாப்பது?
Child Diarrhea Care | வயிற்றுப்போக்கு
Q

தாய்ப்பாலும் உணவும் தொடர வேண்டுமா?

A

நிச்சயமாக. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வழக்கம்போல அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையின் வயதுக்கு ஏற்ற உணவுகளையும் நிறுத்தக்கூடாது. உணவை நிறுத்துவது குழந்தையின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதிகரிக்கலாம். பழச்சாறுகள், குளிர்பானங்கள், அதிக சர்க்கரை உள்ள பானங்கள் வயிற்றுப்போக்கை மோசமாக்கலாம்.

Q

எப்போது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்?

A

குழந்தைக்கு சிறுநீர் மிகவும் குறைவாக வருதல், வாய் மற்றும் நாக்கு வறண்டு காணப்படுதல், கண்கள் உள்ளே செல்வது, அழும்போது கண்ணீர் வராமை, அதிக சோர்வு, மயக்கம், குடிக்க முடியாமை போன்றவை நீரிழப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்.

மலத்தில் ரத்தம், தொடர்ந்து வாந்தி, அதிக காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி அல்லது குழந்தை வழக்கத்திற்கு மாறாக மந்தமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். குழந்தை குடிக்க முடியாமல் இருப்பது அல்லது மயக்க நிலையில் இருப்பது அவசர சிகிச்சைக்கான அறிகுறிகள்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி லேகியம் மிச்சம் இருக்கா? எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?
Child Diarrhea Care | வயிற்றுப்போக்கு
Q

வயிற்றுப்போக்கைத் தடுப்பது எப்படி?

A

கைகளை சோப்பால் கழுவுதல், பாதுகாப்பான குடிநீர், சுத்தமான உணவு, கழிப்பறை சுகாதாரம் ஆகியவை மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ற தடுப்பூசிகளைப் பெறுவதும் முக்கியம். குறிப்பாக ரோட்டா வைரஸ் தடுப்பூசி கடுமையான வயிற்றுப்போக்கிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உதவுகிறது.

நிறைவாக, வயிற்றுப்போக்கை நிறுத்துவதைக் காட்டிலும் நீரிழப்பைத் தடுப்பதே முதன்மையான நோக்கம். சரியான நேரத்தில் ORS கொடுப்பதும், ஆபத்தான அறிகுறிகளை அடையாளம் காண்பதும் குழந்தையின் உயிரைக் காக்கும் எளிய அறிவியல் நடவடிக்கைகள்.