
உணவு என்பது நாம் உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல உயிரோடு இருக்கும் வரை ஆரோக்கியமாக உலவுவதற்கும் தான். அறுசுவை உணவுகளை உண்பவருக்கு ஆயுட்காலம் நீடிக்கும் என்பது முன்னோர் வாக்கு. ஒரே விதமான உணவை விரும்புபவருக்கு உடல் நலம் விரைவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக சர்க்கரை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர் விரைவில் நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகிறார்.
எந்த ஒரு விஷயத்திலும் சமநிலை இருந்தால் தான் அது ஆரோக்கியமான விஷயமாக கருதப்படும். அப்படியே உணவும். அந்தக் காலத்தில் அறுசுவை உணவுகளுடன் நால்வகை உணவு வழிமுறைகளும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது . இன்று இந்த நால்வகை உணவுகள் என்பதே மறக்கடிக்கப்பட்ட விஷயமாகிவிட்டது. எல்லாவற்றிலும் அவசரம்.
அது என்ன நாள் வகை உணவுகள்? வாருங்கள் இந்த பதிவில் காணலாம்.
நக்கல், பருகல், தின்னல், மற்றும் விழுங்கல் ஆகிய நான்கு விதமான உணவு வகைகளைக் குறிக்கும் சொல்தான் நால்வகை உணவுகள். இவை பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளும் முறைகளாக பழங்கால இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.
1. நக்கல்
நமக்குப் பிடித்தமான சட்னி, சாம்பார், ஊறுகாய் வகைகளை உணவு உண்ட பின்பும் விரல்களால் தொட்டு சிறிது சிறிதாக நக்கி சாப்பிடுவதையே நக்கல் எனும் உணவு முறையாகிறது. இதை அருவெறுப்பாக எண்ணுவது தவறு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது தெரியுமா? சாப்பிட்ட பின்பு கைவிரல்களை சுத்தமாக நக்குவதால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் ஆர்.என்.ஏ நொதியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம் என்று மருத்துவம் கூறுவது ஆச்சரியத்தை தரும் விஷயம்!
2. பருகல்
இது பானங்கள் அல்லது நீர்க்கஞ்சி போன்ற திரவ உணவுகளை உறிஞ்சுவது அல்லது குடிக்கும் முறையாகும். பருகுவதால் பல நன்மைகள் இருந்தாலும், நீரிழப்பைத் தடுத்து, உடல் சீராக இயங்க உதவுகிறது எனவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை வழங்கும் 'பருகுதல்' சிறப்பு.
3. தின்னல்
கரும்பு, கிழங்கு போன்ற கடின உணவுகளை மென்று சாப்பிடுவது போன்ற முறையே தின்னல். வெவ்வேறு சத்துள்ள உணவுகளை தின்று சாப்பிடுவதால் வெவ்வேறு நன்மைகள் கிடைக்கும். பாதாம் பருப்பை 'தின்'பதால் கொலஸ்ட்ரால் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். கடித்துத் தின்பதால் பற்கள் மற்றும் வாய் வழி ஆரோக்கியம் பேசலாம். உதாரணம் கரும்பு. பொதுவாக நாம் அனைத்து உணவுகளையும் தின்னும் வழிமுறையில் இணைக்கிறோம்.
4. விழுங்கல்
சிலர் எப்போதும் உணவை கையில் எடுத்து வாயில் போட்டு அப்படியே விழுங்கி விடுவார்கள். அது தவறு. இங்கு உணவை மெல்லாமல் நேரடியாக விழுங்குவது போன்ற விழுங்கல் முறையை குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக மாத்திரை மருந்துகளை கூறலாம். அவசரப்பட்டு விழுங்காமல் நிதானமாக விழுங்குவதே நலம் காக்கும் செயல்.
தமிழர்களின் உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ள இந்த நால்வகை முறைகளும் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டாலும் விழுங்கல் மட்டும் ஒரு சில உணவுகளுக்கு மட்டும் பயன்பட்டுள்ளது.
அடிப்படையில் இந்த நால்வகை உணவு வழிமுறைகளும் நமது அன்றாட வழக்கங்கள் என்பதால் நாம் இதனை பொருட்படுத்துவதில்லை. ஆனால், பழங்காலத் தமிழிலக்கியத்தில் கூறப்பட்ட இவற்றை அறிந்து கொள்வது சிறப்பு தானே? பின்பற்றுவது ஆரோக்கியம்தானே?