
வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கங்களையும் மரபணு பொருட்களையும் கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்று பரவுதலை எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக் என மூன்றாக பிரிக்கலாம்.
எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். அம்மை, மலேரியாக் காய்ச்சல் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.
எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் அதிகமாக பரவக்கூடிய நோயாகும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் வரும் காய்ச்சல் வரும் இவ்வகையைச் சேர்ந்தது.
பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும் போது, அங்கும் இத்தொற்றின் பாதிப்பு ஏற்படும்.
21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.
1. இபோலா வைரஸ் மனிதக்குரங்குகள், பழந்தின்னி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவக்கூடியது ஆகும்.
1976-ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான், காங்கோ ஆகிய நாடுகளில் இத்தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இத்தொற்றால் 11,300 பேர் இறந்துள்ளனர். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இத்தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது. திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள் ஆகும். இந்த வைரஸிற்கு சிகிச்சை எதுமில்லை.
2. சார்ஸ் (SARS) தொற்று 21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாக பார்க்கப்பட்டது. Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது.
2002ஆம் ஆண்டு 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது. சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர். தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.
3. ஜிகா வைரஸ் Aedes எனப்படும் கொசு வகை கடிப்பால் ஏற்படுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டும் கடிக்கக் கூடியது. இந்த வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது.
Aedes கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். இத்தொற்று பரவலுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
4. நிபா வைரஸ் தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் `Fruit bats` எனப்படும் பழந்தின்னி வௌவால்கள் ஆகும். 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது. இவ்வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படலாம்.
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் இது பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
சத்தான உணவு, அன்றாட உடற்பயிற்சி, போதுமான உறக்கம் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையின் மூலம் நம் உடலில் மேம்படும் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே நம்மை இத்தொற்றுகலிலிருந்து காப்பாற்றும் என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.