

குழந்தைகளின் உலகம் விளையாட்டுகளால் நிறைந்தது. சிறு வயதில் ஓடி ஆடி விளையாடுவது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அவர்களின் உடல், மூளை, மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கே வளர்க்கும் இயற்கையான பயிற்சி. இன்றைய குழந்தைகள் கல்வி, கைப்பேசி, தொலைக்காட்சி எனப் பலவற்றுக்கு இடையே தங்கள் விளையாட்டு நேரத்தை இழந்து வருகின்றனர். ஆனால், ஒரு கயிறு, சில பந்துகள், சிறிதளவு திறந்தவெளி இருந்தாலே போதும் குழந்தைகளின் திறமைக்கும் வேகத்திற்கும் நல்லதொரு பயிற்சியாக அமைந்து விடும்.
விளையாட்டு ஒரு முழுமையான உடல்-மன பயிற்சி
விளையாடும்போது குழந்தைகளின் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. தசைகள் வலுப்பெறுகின்றன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உடல் சமநிலைக்கும் உதவுகிறது. ஓடுதல், குதித்தல், தவழ்தல், பந்தைப் பிடித்தல் போன்ற செயல்கள் உடலின் பல்வேறு உறுப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்படப் பயிற்றுவிக்கின்றன. உடல் பருமன் மற்றும் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் சுறுசுறுப்பான விளையாட்டுகள் உதவுகின்றன.
மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகள்
விளையாட்டு என்பது உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கான பயிற்சியும்கூட. பந்தை எறிந்து பிடிப்பது, தடைகளைத் தாண்டுவது, ஓர் இலக்கை நோக்கிப் பொருளை வீசுவது போன்ற செயல்களில் குழந்தைகள் தொடர்ந்து கவனிக்கவும், முடிவெடுக்கவும், அடுத்த செயலைத் திட்டமிடவும் பயிற்சி கிடைக்கிறது. இத்தகைய அனுபவங்கள் கவனம், நினைவாற்றல், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
கை – கண் ஒருங்கிணைந்து செயல்படுதல்
பந்தைப் பிடிப்பது, வண்ணக் கட்டைகளை அடுக்குவது, கயிற்றில் மணிகளைக் கோர்ப்பது, ஓவியம் வரைவது போன்ற செயல்கள் கை மற்றும் கண்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றன. இத்திறன் பின்னாளில் எழுதுதல், வரைதல், உணவைத் தானாக உண்ணுதல், உடைகளை அணிதல் போன்ற அன்றாடச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைகிறது.
நுண்தசை இயக்கத் திறன்களை வளர்ப்போம்
விரல்களையும் உள்ளங்கைகளையும் பயன்படுத்திச் செய்யும் சிறிய செயல்கள் நுண்தசை இயக்கத் திறன்களை (Fine Motor Skills) வளர்க்கின்றன. களிமண்ணில் உருவங்கள் செய்தல், காகிதத்தை மடித்தல், புதிர்களைப் பொருத்துதல், சிறிய பொருட்களை வகைப்படுத்துதல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளின் விரல் இயக்கத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்துகின்றன. இவை கற்றல் திறனுக்கும் தன்னம்பிக்கைக்கும் துணை நிற்கின்றன.
கயிறு தாண்டுதலும் உடல் ஒத்திசைவும்
கயிறு தாண்டுதல் என்பது எளிய விளையாட்டாகத் தோன்றினாலும், அதில் உடல் சமநிலை, கால்களின் வலிமை, நேரம் கணித்தல், கவனம் ஆகியவை ஒருங்கிணைகின்றன. இசைக்கேற்ப நடனமாடுதல், ஒரே நேரத்தில் கைதட்டுதல், குழுவாகச் சீரான அசைவுகளைச் செய்தல் போன்றவை உடல் ஒத்திசைவையும் தாள உணர்வையும் வளர்க்கின்றன. குழந்தைகளின் வயதுக்கும் உடல் திறனுக்கும் ஏற்றவாறு இவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும்.
குழுவாக விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி
குழுவாக விளையாடும்போது குழந்தைகள் காத்திருத்தல், விதிகளைப் பின்பற்றுதல், பிறருடன் பகிர்ந்துகொள்ளுதல், வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த பண்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பதும், தோல்வியடைந்த நண்பரைத் தேற்றுவதும் அவர்களின் சமூகப் பொறுப்பையும் உணர்ச்சிசார் வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றன. தனியாக விளையாடுவதைக் காட்டிலும் குழு விளையாட்டுகள் பல்வேறு சமூக அனுபவங்களை வழங்குகின்றன.
கவனமும் பாதுகாப்பும் அவசியம்
விளையாட்டின் பயன்களைப் பெறுவதற்கு பாதுகாப்பான சூழல் அவசியம். வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வழுக்காத தரை, போதுமான இடவசதி, பாதுகாப்பான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்த்து, போதுமான தண்ணீர் வழங்க வேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
விளையாடும் குழந்தைகளே மகிழ்ச்சியான ஆரோக்யமான குழந்தைகள்
குழந்தைகளின் விளையாட்டு நேரத்தை வீணான நேரமாகக் கருதும் மனப்பான்மை மாற வேண்டும். கல்விக்கும் விளையாட்டுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்துவதே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படை. தினமும் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் உடல் வலிமையை மட்டுமல்ல, மன உறுதியையும், நட்புணர்வையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களைவிட, விளையாடுவதற்கு போதிய நேரமும் ஏற்ற இடமும் அளித்து, அன்புடன் ஊக்கம் தரும் பெரியவர்களுமே முக்கியம். குழந்தைகளின் சிரிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த விளையாட்டு மைதானங்களே ஆரோக்கியமான எதிர்காலத்தின் அடித்தளங்கள்!