

குழந்தையின் மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் கட்டமைப்பிற்குத் தேவையான சமச்சீர் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த முழு விபரம் குறித்து விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
ஊட்டச்சத்து என்றால் என்ன? அது ஏன் அவசியம்?
உணவு என்பது பசியைப் போக்குவதற்கு மட்டுமல்ல, உடலின் ஒவ்வொரு செல்லும் சீராக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலையும் கட்டமைப்புப் பொருட்களையும் வழங்குகிறது. புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நீர் ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளைச் சீராக வைத்திருக்கின்றன. குழந்தைப் பருவத்தில் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பது உயரம், எடை, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புச் சக்தி, கற்றல் திறன் ஆகிய அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது எடை குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும்தானா?
இல்லை. தேவையான கலோரிகளை உட்கொண்டாலும் இரும்புச்சத்து, வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துகள் குறைவாக இருக்கலாம். இதனை மறைமுக ஊட்டச்சத்துக் குறைபாடு என்கிறோம். உடல் பருமனாக உள்ளவர்களுக்குக்கூட இத்தகைய குறைபாடுகள் ஏற்படலாம். சோர்வு, இரத்தச்சோகை, எலும்பு பலவீனம், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல் போன்றவை இதன் விளைவுகளாக இருக்கலாம். எனவே, உடல் எடையை மட்டும் வைத்து ஒருவரின் ஊட்டச்சத்து நிலையை மதிப்பிட முடியாது.
குழந்தையின் வளர்ச்சியில் உணவின் பங்கு என்ன?
குழந்தையின் வளர்ச்சி என்பது உயரமும் எடையும் அதிகரிப்பதோடு முடிந்துவிடுவதில்லை. எலும்புகள், தசைகள், நரம்புகள், மூளை ஆகிய அனைத்தும் சீராக ஆரோக்கியத்துடன் வளர வேண்டும். வாழ்வின் முதல் ஆயிரம் நாட்கள் மூளை வளர்ச்சிக்கும் உடல் கட்டமைப்புக்கும் மிக முக்கியமானவை. இக்காலத்தில் ஏற்படும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் எதிர்கால வளர்ச்சியையும், கற்றல் திறனையும் பாதிக்கக்கூடும். பள்ளிப் பருவத்தில் போதிய உணவு கிடைக்காவிட்டால் சோர்வு, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
கர்ப்பிணித் தாயின் உணவுக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு?
குழந்தையின் ஆரோக்கியம் பிறப்பதற்கு முன்பே உருவாகத் தொடங்குகிறது. ஃபோலிக் அமிலம் கருவின் நரம்பு மண்டல குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்து இரத்த உற்பத்திக்கும், கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும் அவசியம். கர்ப்பிணித் தாய் இரு மடங்கு உணவு உண்ண வேண்டும் என்பது தவறான கருத்து. உணவின் அளவைவிட அதன் தரமும் ஊட்டச்சத்து முழுமையுமே முக்கியம். மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான கூடுதல் ஊட்டச்சத்துகளைப் பெற வேண்டும்.
சமச்சீரான உணவு எப்படி இருக்க வேண்டும்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்ட உணவு வழிகாட்டுதல்கள், பல்வகை உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், பால் அல்லது தயிர், முட்டை, கொட்டைகள், விதைகள் ஆகியவை அன்றாட உணவில் இடம்பெற வேண்டும். குழந்தையின் வயது, உடல் உழைப்பு, வளர்ச்சி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப உணவின் அளவைத் தீர்மானிப்பது அவசியம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை எப்படிக் கற்றுக்கொடுப்பது?
பெற்றோர் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி உண்பதைப் பார்க்கும் குழந்தைகள் அவற்றைப் பார்த்து கற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். புதிய உணவை ஒருமுறை மறுத்துவிட்டால் மீண்டும் மீண்டும் சிறிய அளவில் வெவ்வேறு வடிவங்களில் அறிமுகப்படுத்த வேண்டும், பழக்கப் படுத்த வேண்டும். உணவைப் பரிசாகவோ தண்டனையாகவோ பயன்படுத்தக் கூடாது. கைப்பேசி, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே உண்பதைத் தவிர்த்து, குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உண்பது நல்ல பழக்கமாகும்.
ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கூடுதல் மாத்திரைகள் தேவையா?
இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பருப்பு வகைகள், முட்டை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் தாவர உணவிலுள்ள இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றன. குழந்தையின் உயரம், எடை ஆகியவற்றை வயதுக்கேற்ற வளர்ச்சி அட்டவணையில் தொடர்ந்து பதிவு செய்வது குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய உதவும். வைட்டமின் மாத்திரைகள் சில நேரங்களில் அவசியமாகலாம். ஆனால் அவை இயற்கையான உணவுக்கு மாற்றாகாது. மருத்துவரின் ஆலோசனையின்றி குழந்தைகளுக்குக் கூடுதல் ஊட்டச்சத்துகளை வழங்கக் கூடாது.
ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
அதிக சர்க்கரை, உப்பு, நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளும் உடல் இயக்கமின்மையும் குழந்தைப் பருவ உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. இது பிற்காலத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கலாம். வீட்டில் சமைத்த உணவுக்கு முன்னுரிமை அளித்தல், பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல், தினசரி விளையாட்டு மற்றும் போதுமான உறக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவை அவசியம்.
சத்து நிறைந்த உணவுப் பழக்கத்தை வீட்டிலேயே தொடங்குவோம். நலமான நாளைய தலைமுறையை உருவாக்குவோம்!