குழந்தைகளுக்குப் பிடித்த நூடுல்ஸ்: ஆரோக்கியமான உணவாக மாற்றுவது எப்படி?

சிறுதானிய மாவு, காய்கறிகள் மற்றும் புரதச்சத்து சேர்த்துக் சுவையாகச் சமைக்கும் வழிகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து குறித்து முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
Healthy Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்
Healthy Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்
Updated on: 

நூடுல்ஸ் என்பது ஒரு தவிர்க்கப் பட வேண்டிய உணவல்ல. அதை எப்படி தேர்ந்தெடுத்து, எதனுடன் சேர்த்து கொடுக்கிறோம் என்பதே முக்கிய பொறுப்பு!

நூடுல்ஸ் இன்று குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்றாகிவிட்டது. ஆனால் 'நூடுல்ஸ் என்றாலே உடலுக்குக் கேடு' என்று குழந்தைகளை பயமுறுத்த வேண்டாம். 'குழந்தை விரும்புகிறது, எனவே அடிக்கடி கொடுக்கலாம்' என்பதும் தவறு தான். அதன் தயாரிப்பு முறை, மாவின் தன்மை, உப்பு அளவு, கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் அதனுடன் சேர்க்கப்படும் உணவுகளே அதன் ஊட்டச்சத்து மதிப்பை நிர்ணயிக்கின்றன.

Q

நூடுல்ஸின் பிறப்பிடம் எது?

A

நூடுல்ஸின் வரலாறு சீனாவுடன் நெருங்கிய தொடர்புடையது. பல நூற்றாண்டுகளாக கோதுமை அல்லது பிற தானிய மாவிலிருந்து நீளமான மாவு உணவுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்று குழந்தைகள் விரும்பும் உடனடி நூடுல்ஸ் ஜப்பானில் 1958-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நவீன உணவாகும். அதனால் பாரம்பரிய நூடுல்ஸையும் உடனடி நூடுல்ஸையும் ஒன்றாகக் கருதக்கூடாது.

Q

நல்ல நூடுல்ஸ் எப்படி இருக்க வேண்டும்?

A

குழந்தைகளுக்கான சிறந்த நூடுல்ஸ் என்பது வெறும் மாவாக இருக்கக்கூடாது. முழுக் கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழுத்தானிய மாவுகளை அடிப்படையாகக் கொண்ட நூடுல்ஸ் நார்ச்சத்தை அதிகரிக்க உதவும். அதனுடன் காய்கறிகள், பருப்பு, முட்டை, மீன் அல்லது கோழி போன்ற புரத உணவுகளைச் சேர்த்தால் ஒரு முழுமையான உணவாக மாற்ற முடியும். உலக சுகாதார அமைப்பும் (World Health Organization) குழந்தைகளின் உணவில் பதப்படுத்தப் படாத, புதியதாக தயாரிக்கப்பட்ட, பல்வகை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது.

Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்
Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்
Q

கடைகளில் கிடைக்கும் உடனடி நூடுல்ஸ் நல்லதா?

A

பல உடனடி நூடுல்ஸ்களில் சுத்திகரிக்கப்பட்ட மாவு (Refined flour), அதிக உப்பு, சுவையூட்டிகள் மற்றும் சில வகைகளில் அதிக கொழுப்பு இருக்கலாம். இதனால் வயிறு நிறைந்த உணர்வு கிடைத்தாலும், காய்கறி, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் போன்றவை போதுமான அளவில் கிடைக்காமல் போகலாம். குறிப்பாக அதிக உப்பு சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

Q

குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படலாம்?

A

ஒருமுறை நூடுல்ஸ் சாப்பிட்டதால் குழந்தைக்கு நோய் வந்துவிடும் என்று அச்சமடைய வேண்டாம். ஆனால் அடிக்கடி இதையே உணவாகக் கொடுத்து, வீட்டுச் சோறு, பருப்பு, காய்கறி, பழம், முட்டை போன்றவற்றைத் தவிர்த்தால் உணவின் பல்வகை சத்துக்களும், நன்மைகளும் கிடைக்காது. அதிக உப்பு உள்ள உணவுகளை நீண்டகாலம் அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Q

அம்மாக்கள் செய்ய வேண்டியது என்ன?

A

நூடுல்ஸை வேகவைத்த பிறகு அதில் கேரட், பீன்ஸ், பட்டாணி, கீரை, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை நிறைய சேர்க்கலாம். ஒரு முட்டை அல்லது பருப்பு சேர்த்தால் புரதம் அதிகரிக்கும். சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நிலக்கடலைப் பொடி சேர்ப்பதும் ஊட்டச்சத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு செய்தால் குழந்தை விரும்பும் உணவையே அதிக சத்துள்ள உணவாக மாற்ற முடியும்.

இதையும் படியுங்கள்:
பூப்பெய்திய பெண் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? பாரம்பரிய உணவு முறைகள்!
Healthy Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்
Q

சுவையூட்டும் பொடியை முழுவதும் போட வேண்டுமா?

A

அவசியமில்லை. பொதியுடன் வரும் சுவையூட்டும் பொடியில் (Spice packet) உப்பு அதிகமாக இருக்கக்கூடும். எனவே அதன் அளவைக் குறைத்து, வீட்டிலுள்ள பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், சிறிதளவு மஞ்சள் போன்ற இயற்கையான சுவையூட்டிகளைப் பயன்படுத்தலாம். வணிக ரீதியான சுவையூட்டிகள் மற்றும் உடனடி உணவுகளை குறைப்பது உப்பைக் கட்டுப்படுத்த உதவும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

Q

எத்தனை முறை கொடுக்கலாம்?

A

நூடுல்ஸை தினசரி முக்கிய உணவாக வைத்துக்கொள்ள வேண்டாம். எப்போதாவது கொடுக்கப்படும் உணவாக வைத்திருப்பது நல்லது. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு பலவகையான தானியங்கள், பருப்பு, முட்டை, காய்கறி, பழங்கள், பால் அல்லது தயிர் போன்றவற்றை மாறி மாறி வழங்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் உருவாகும் உணவுப் பழக்கங்கள் பின்னர் வாழ்க்கையிலும் தொடரக்கூடும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளில் அதிகரிக்கும் உடல் பருமன்: இளம் வயதில் இதயம் காக்கும் வழிகள்!
Healthy Noodles - ஆரோக்கியமான நூடுல்ஸ்

'நூடுல்ஸ் வேண்டாம்' என்பது அல்ல நம் நிலைப்பாடு… 'நல்ல நூடுல்ஸ் வேண்டும்!'

அம்மாக்கள் நூடுல்ஸை முற்றிலும் மறுக்க வேண்டியதில்லை. நல்ல மாவு, குறைந்த உப்பு, அதிக காய்கறி, புரத உணவு, என்ற முறையில் சரிவிகித உணவாக தயாரித்து மாதம் ஓரிரு முறை மட்டும் கொடுத்தால், குழந்தையின் விருப்ப உணவையும் ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றலாம்

logo
Kalki Online
kalkionline.com