'நீ என்ன செய்தாலும் நான் குறையவே மாட்டேன்' என அடம் பிடிக்கும் இடுப்பைச் சுற்றி சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்க 5 எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
* காலை உணவாக குறைந்த அளவு புரோட்டீன் அடங்கிய உணவுகளை உட்கொள்ளும்போது அவை சீக்கிரமே ஜீரணமாகி மீண்டும். மீண்டும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும். இதனால் மேலும் உடலில் கொழுப்பு அதிகரித்து எடை கூடுவதற்கான வாய்ப்பு உண்டாகும். முளைகட்டிய பயறு வகைகள் மற்றும் நொதிக்கச் செய்த பருப்புகள் சேர்த்த புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவுகள் எடை குறைய உதவி புரியும்.
* நம் கல்லீரல் சரிவர வேலை செய்யாவிட்டால் அதன் வேலைப்பளு அதிகரிக்கும். எனவே, வாரம் ஒரு முறை நச்சுக்களை நீக்க உதவும் ஸ்மூத்தி ஒன்றை உட்கொண்டு கல்லீரலை சுத்தப்படுத்துவது நல்ல பலனளிக்கும்.
* கொழுப்பு குறையாமலிருக்க மற்றொரு காரணம் சரியான தூக்கமின்மையாகும். இதற்கு படுக்கைக்கு செல்லும் முன்பு ஒரு கப் கெமோமைல் (Chamomile) டீ அருந்துவது எதிர்பார்த்த நல்ல பலனைத் தரும்.
* ஜீரணம் சரிவர நடைபெறாவிட்டாலும் எடை குறைவது சாத்தியமாகாது. சாப்பிட்ட பின் பிரியாணி இலை (Bay Leaf) டீ அருந்துவது செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.
* மெட்டபாலிசம் மெதுவான அளவில் நடைபெறுவதும் இடுப்பு சதை குறைய உதவாது. உடலை சூரிய ஒளி படுமாறு வைப்பது முறையான மெட்டபாலிசம் நடைபெற உதவும். உடலில் வெயில் படுவது முடியாததென்றால் வைட்டமின் D சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
மேற்கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றி எடை குறைவு ஏற்படுவதை உறுதியாக எதிர்பார்க்கலாம்.