பரோட்டா, நான் (Nan), பேக்கரி பிஸ்கட்ஸ் என மக்களுக்குப் பிடித்தமான பல வகை உணவுகளும் மைதா மாவினால் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வருகின்றன. மைதா, தோல் நீக்கப்பட்ட தானியத்திலிருந்து தயாரிக்கப்பட்டு வருவதால் அதில் ஊட்டச் சத்துக்கள் குறைவு.
அதில் நார்ச்சத்து இல்லாத காரணத்தினால், மைதா உபயோகித்து சமைத்த உணவுகளை உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர ஆரம்பிக்கும். மைதாவிற்குப் பதில் வேறு வகை மாவுகளை பயன்படுத்தி, சுவையாகவும் நிறைந்த ஊட்டச் சத்துக்களோடும் நீங்கள் விரும்பிய உணவுகளை தயாரித்து உண்ணலாம். அந்த மாவு வகை எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
1. முழு கோதுமை மாவு: இதில் அதிகளவு நார்ச் சத்துகளும், B வைட்டமின்களும் உள்ளன. இதில் ரொட்டி மற்றும் பிஸ்கட்ஸ் தயாரிக்கலாம். கிரேவியில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதில் கோதுமை மாவை கரைத்து ஊற்றி திக் ஆக்கலாம். முழு கோதுமை மாவு அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியது
2. கடலை மாவு (Besan): சன்னா பருப்பிலிருந்து தயாரிக்கப்படுவது கடலை மாவு. அதிகளவு ப்ரோட்டீன் நிறைந்தது. சுவை நிறைந்த பக்கோடா, சீலா மற்றும் பான்கேக் போன்றவற்றை கடலை மாவிலிருந்து செய்யலாம். ஹார்ட்டி டெக்ச்சருடன், குளூட்டன் ஃபிரீ பேக்கிங் (Baking) செய்ய கடலை மாவு உதவும்.
3. கேழ்வரகு (Finger Millet) மாவு: இதில் கால்சியம், இரும்புச் சத்து மற்றும் அமினோ ஆசிட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதிலிருந்து தயாரிக்கப்படும் அடை மற்றும் லட்டு போன்ற ஸ்னாக்ஸ் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் உண்ண ஏற்றது. எலும்புகளை வலுவாக்கக் கூடிய சிறப்பான உணவு கேழ்வரகு மாவு.
4. சோள (Sorghum) மாவு: சோளமாவு குளூட்டன் ஃபிரீயானது. சுடு நீர் விட்டு இந்த மாவைப் பிசைந்து ரொட்டி, தாலிபீத் மற்றும் பான்கேக் போன்ற உணவுகளை தயாரிக்கலாம். சிறப்பான ஜீரணத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவக் கூடியது சோளமாவு. இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் குணம் கொண்டது சோளம்.
5. ஆல்மன்ட் மாவு: ஆல்மன்ட் மாவு உணவுகளுக்கு அதிகளவு நட்டி ஃபிளேவர் கொடுக்கும். டெஸர்ட் வகை உணவு மற்றும் மென்மையாக பேக் செய்ய வேண்டிய உணவுகளின் தயாரிப்பிலும் ஆல்மன்ட் மாவு சேர்க்கப்படுகிறது. இதில் ப்ரோட்டீன் சத்து அதிகம். கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் குறைவு. நல்ல கொழுப்புகள் அதிகம் நிறைந்தது ஆல்மன்ட் மாவு.
அல்வா, கீர் மற்றும் விஷேச தினங்களில் தயாரிக்கப்படும் மிருதுவான ஸ்வீட் வகைகளிலும் ஆல்மன்ட் மாவு சேர்க்கலாம்.
சத்துக்கள் குறைந்த மைதா மாவுக்கு மாற்றாக மேலே கூறிய 5 வகை மாவுகளை உபயோகித்து ஆரோக்கியமாய் வாழ்வோம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)