

இன்றைய அவசர உலகில், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை PCOS பாதிப்பு. ஒழுங்கற்ற மாதவிடாய், தேவையற்ற உடல் எடை அதிகரிப்பு, முகப்பருக்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது யோகா (Yoga for PCOS).
PCOS-ல் யோகா எப்படி வேலை செய்கிறது?
PCOS பாதிப்பிற்கு முக்கியக் காரணம் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் 'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' ஆகும். யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம்:
1. கார்டிசோல்: மன அழுத்த ஹார்மோனைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.
2. ரத்த ஓட்டம்: அடிவயிற்றுப் பகுதிக்கும் சினைப்பைக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நீர்க்கட்டிகள் கரையும் வாய்ப்பை உருவாக்குகிறது.
3. ஹார்மோன் பேலன்ஸ்: நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டைத் தூண்டி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவைச் சீராக்குகிறது.
PCOS பாதிப்பைக் குறைக்கும் 5 முக்கிய யோகாசனங்கள்:
1. பத்த கோணாசனம் (Butterfly Pose):
இது PCOS-க்கு மிகச்சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது. தரையில் அமர்ந்து இரண்டு பாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைத்து, கால்களைப் பட்டாம்பூச்சி சிறகுகளைப் போல மெதுவாக அசைக்க வேண்டும். இதனால், இடுப்புப் பகுதி மற்றும் அடிவயிற்று தசைகளைத் தளர்த்துகிறது. இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. புஜங்காசனம் (Cobra Pose):
குப்புறப் படுத்து, கைகளைத் தரையில் ஊன்றி உடலின் மேற்பகுதியை மட்டும் உயர்த்திப் பார்க்க வேண்டும். இதன் மூலம், அடிவயிற்றுப் பகுதியை நன்கு நீட்டிப்பதன் மூலம் சினைப்பையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
3. தனுராசனம் (Bow Pose):
குப்புறப் படுத்துக் கால்களை மடித்து கைகளால் கணுக்காலைப் பிடித்து, வில்லைப் போல் உடலை வளைக்க வேண்டும். இது ஹார்மோன் சுரப்பிகளைத் தூண்டுவதோடு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் குறைக்க உதவுகிறது.
4. பாலாசனம் (Child’s Pose):
மண்டியிட்டு அமர்ந்து, மெதுவாகக் குனிந்து நெற்றியைத் தரையில் வைக்க வேண்டும். இது ஒரு சிறந்த 'ரிலாக்சேஷன்' பயிற்சி. PCOS-ஆல் ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
5. பிராணாயாமம்:
PCOS பாதிப்பில் உடல் நலத்தை விட மனநலம் அதிகம் பாதிக்கப்படுகிறது. மூச்சுப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரித்து, மனநிலை மாற்றங்கள்கட்டுப்படுத்தப்படுகின்றன. தினமும் 10 நிமிடம் தியானம் செய்வது ஹார்மோன் சமநிலைக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
கவனித்தில் கொள்ள வேண்டியவை:
யோகாசனங்களை வெறும் வயிற்றில் செய்வது சிறந்தது.
மாதவிடாய் காலங்களில் கடினமான ஆசனங்களைத் தவிர்த்து, எளிய மூச்சுப் பயிற்சிகளை மட்டும் செய்யலாம்.
சரியான யோகா நிபுணரின் ஆலோசனையுடன் பயிற்சிகளைத் தொடங்குவது பாதுகாப்பானது.
முக்கிய குறிப்பு: யோகா மட்டுமே PCOS-ஐ முழுமையாகக் குணப்படுத்தாது. இது ஒரு துணை சிகிச்சை மட்டுமே. ஆரோக்கியமான உணவு முறை, போதுமான உறக்கம் மற்றும் உங்கள் மருத்துவரின் முறையான ஆலோசனை ஆகியவற்றுடன் யோகாவையும் இணைத்துச் செயல்படுவது மட்டுமே முழுமையான பலனைத் தரும்.