
பொதுவாக 40 வயதில் தான் வீட்டிலும், வேலையிலும் பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் நம்மை ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு இருந்தாலும் நேரமின்மை காரணமாக பசி எடுக்கும் பொழுது பசியை அடைப்பதற்காக ஏதேனும் ஜங்க் ஃபுட்களை எடுத்துக் கொள்வதும், சரியான தூக்க நெறிமுறைகளை கடைபிடிக்காமலும், உடற்பயிற்சி செய்ய நேரமின்றி தவிர்ப்பதாலும் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாவோம்.
40 வயதிற்குப் பிறகு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதற்கு சிறிது மெனக்கிட்டு, அதற்கென்று நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்வதும், சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி எடுக்கலாம்.
1. காலை உணவை தவிர்ப்பது
நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. நேரமின்மை காரணமாகவோ, உடல் எடையை குறைக்கிறேன் என்றோ காலை உணவை தவிர்ப்பது சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். உடலில் சுரக்கும் டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்கள் தான் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். காலை உணவை தவிர்ப்பதால் பிறரிடம் எரிச்சல் படுவதும், நிதானமின்றி நடந்து கொள்ளுதல் போன்ற குணங்கள் வெளிப்படும். காலை உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கும், ஆற்றல் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
2. உடற்பயிற்சி இன்றி இருப்பது
40 வயதிற்கு மேல் உட்கார்ந்த வாழ்க்கை முறை பல நோய்களை விருந்தாளியாக அழைத்து வரும். உடற்பயிற்சியின்றி இருப்பது நோய்களை புதிது புதிதாக உருவாக்கும். உடற்பயிற்சிகள் செய்யாத போது கலோரிகள் எரிக்கப்படுவதில்லை. இதனால் உடல் எடையில் அதிகரிப்பு, தசைகள் பலவீனம் அடைவது, உடல் சோர்வாகவும், ஆற்றல் குறைந்தும் காணப்படுவது மற்றும் இதய நோய்கள் போன்ற பல உடல் நலப் பிரச்சினைகள் உடற்பயிற்சி இன்மையால் ஏற்படும். நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகள் செய்வது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தைத் தந்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
3. ஆரோக்கியமற்ற உணவு முறை
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்டுகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகள், அதிக இனிப்பு வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிப்பதுடன், உடல் நலப் பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் நம்மை நோயின்றி உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும். புதிதாக சமைத்த உணவுகளும், பழங்களும், சாலட்களும், கீரை வகைகளும், முழு தானியங்களும் கொண்ட சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
4. மோசமான தூக்கப்பழக்கம்
நேரம் கெட்ட நேரத்தில் தூங்கச் செல்வதும், தினமும் முறையான ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லாமல் டிவி பார்ப்பதும், செல்போனை நோண்டுவதும் என இருப்பது தலைவலி, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற தூக்க முறைகள் இதய நோய், வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளை உண்டாக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
5. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவை தூக்கத்தின் ஒழுங்கு முறையை சீர்குலைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தேவையற்ற நோய்களை அழையா விருந்தாளியாக அழைத்து வரும். புகைப்பிடித்தல் நுரையீரல், இதயம் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். மது அருந்துதலோ கல்லீரல் மற்றும் மூளையை பாதிக்கும். சுவாச நோய்கள், இதய நோய் புற்றுநோய்க்கும் வழி வகுக்கும் இந்த தீய பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.
6. அதிகப்படியான திரை நேரம்
நீண்ட நேரம் தொலைக்காட்சியிலும், கணினியிலும், செல்போனிலும் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், தூக்க முறைகளையும் தொந்தரவு செய்யும். அதிகப்படியான நேரத்தை திரையில் செலவிடுவதை கட்டுப்படுத்துவது அவசியம். அதிக நேரம் திரைகளைப் பார்ப்பதால் கண் பாதிப்பு, தூக்கமின்மை, உடல் பருமன் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படலாம். அதிக நேரம் திரைகளில் நேரம் செலவழிப்பதால் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவது குறைவதுடன், சமூக தொடர்புகளும் குறைந்து விடும். டிவி மற்றும் செல்போன் பார்ப்பதற்கான நேரத்தை குறைத்து கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.
7. ரெகுலர் செக்கப்பை தவிர்ப்பது
நாற்பது வயதிற்கு மேல் ரெகுலர் செக்கப் அவசியமாகிறது. நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றிற்கான சிகிச்சையை செய்வது எளிதாகும். சில நோய்கள் வருவதற்கான அபாயத்தை குறைக்கவும் வழக்கமான பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். நோய்கள் முற்றிய பிறகு சிகிச்சை பெறுவதை விட ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மருத்துவ செலவை குறைப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கும். 40 வயதிற்கு மேல் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு போன்றவையும், எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து கொள்வதும், கண் மற்றும் பல் பரிசோதனைகள் செய்வதும் அவசியமானது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)