சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

Soya Beans
Soya Beans
Updated on

சோயாபீன்ஸ், உலகம் முழுவதும் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு சத்தான உணவுப்பொருள். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, டின்னருக்கு சோயாபீன்ஸ் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. சோயாபீன்ஸில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. 

1. புரதச்சத்து நிறைந்தது:

சோயாபீன்ஸ் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். 100 கிராம் சோயா பீன்ஸில் சுமார் 36 கிராம் புரதம் உள்ளது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் சோயாவில் உள்ளன. புரதம் தசைகளின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளை மீட்டெடுக்க சோயாபீன்ஸ் உதவுகிறது.

 2. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

சோயாபீன்ஸில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. 100 கிராம் சோயா பீன்ஸில் 9.3 கிராம் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

3. எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது:

இதில் கால்சியம் மற்றும் ஐசோஃப்ளேவோன்கள் நிறைந்துள்ளன. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் முக்கியமானது. ஐசோஃப்ளேவோன்கள் ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இவை எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகின்றன. குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம். சோயாபீன்ஸ் உட்கொள்வது இந்த அபாயத்தைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இதய ஆரோக்கியம், எலும்புகளின் வலிமைக்கு உதவும் ஐந்து வகை க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள்ஸ்!
Soya Beans

4. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது:

சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. மேலும், சோயாபீன்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

5. ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது:

சோயாபீன்ஸில் உள்ள ஈஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான அசௌகரியங்களைக் குறைக்க சோயாபீன்ஸ் உதவுகிறது. மேலும், இது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் அறிகுறிகளையும் குறைக்க உதவும்.

6. உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது:

சோயாபீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் நிறைந்துள்ளதால், இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாக உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், இது ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளின் தேவையை குறைக்கிறது. 

இதையும் படியுங்கள்:
பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?
Soya Beans

7. பல்துறை பயன்பாடு மற்றும் சுவை:

சோயாபீன்ஸை பல வடிவங்களில் உட்கொள்ளலாம். டோஃபூ, சோயா பால், சோயா சங்க்ஸ் போன்றவை பிரபலமான சோயா பொருட்கள். இவற்றை பல்வேறு உணவுகளில் சேர்த்து சமைக்கலாம். சோயாபீன்ஸ் சுவையானது மற்றும் பலவிதமான உணவு வகைகளுக்கு ஏற்றது.

logo
Kalki Online
kalkionline.com