40 வயதா? நிம்மதியாக வாழ 7 விதிகள்! 40 வயதை கடந்தவர்களுக்குப் பகிருங்கள்!

Women over the age of 40
Women over the age of 40Img credit: AI Image
Published on

40 வயதை எட்டுவது என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும் இந்த காலத்தில் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர்வதற்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் நிறைய உள்ளன.

40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியம், நிதி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள், தசை வலிமை பயிற்சிகள், சத்தான உணவு முறை மற்றும் மன அழுத்தம் குறைத்தல் ஆகியவை மிகவும் முக்கியம். ஹார்மோன் மாற்றங்கள், எலும்பு பலவீனம் மற்றும் உடல் எடை அதிகரிப்பைத் தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறை அவசியம்.

1) மருத்துவ பரிசோதனை:

ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் இதய நலன் போன்றவையும், பெண்களுக்கு கூடுதலாக மாமோகிராம் பரிசோதனைகளைத் தவறாமல் செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டினாலே உடலில் நோய்கள் மெல்ல வரத் தொடங்கி விடும். எனவே அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

2) தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம்:

40 வயதுக்கு மேல் தசை இழப்பு தொடங்கும் என்பதால் நடைப்பயிற்சி, எடை தூக்குதல் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஸ்குவாட் பயிற்சியை செய்யலாம். இது எலும்புகளை வலுப்படுத்தவும், உடல் முழுக்க இரத்த ஓட்டம் சீராக பாயவும் உதவும். தசையை வலிமையாக்கும்.

இதையும் படியுங்கள்:
ஏசி ரூமே கதி என கிடக்கிறீர்களா? எச்சரிக்கை: உங்கள் உடலில் நடக்கும் சைலண்ட் மாற்றங்கள் ஆபத்தானவை!
Women over the age of 40

3) சத்தான உணவு:

வயதாக ஆக எலும்புகள் வலுவிழக்கும். தசை பலவீனம், பார்வை குறைபாடு, மறதி, மனச்சோர்வு, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும். எனவே புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உணவில் உப்பை குறைத்து சேர்ப்பதும், உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டியதும் அவசியம். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

4) தூக்கம் மற்றும் மனநலம்:

உடல் உறுப்புகள் சீராக இயங்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் தினமும் 7 மணி நேர தரமான தூக்கம் அவசியம். குடும்பம் மற்றும் வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைப்பதற்கு மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும், யோகா அல்லது தியானம் மேற்கொள்வதும் அவசியம். இது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும்.

5) ஹார்மோன் மாற்றம்:

பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் (menopause) நெருங்கும் சமயம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் சோர்வு, மனநிலை மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப உடலை கவனித்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய நிலையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் குறைந்து, மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள், உடல் வெப்பம், தூக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படும். இதற்கு சத்தான உணவு, வழக்கமான உடற்பயிற்சிகள், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை இந்த ஹார்மோன் மாற்றங்களை சமாளிக்க உதவும். அறிகுறிகள் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
விலை உயர்ந்த Pre-workout பவுடர் வேண்டாம்... இந்த சாதாரண பழங்கள் தரும் அசுர பலத்தை நீங்களே பாருங்க!
Women over the age of 40

6) மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது:

வயதாக ஆக மறதி ஏற்படுவது என்பது இயல்புதான். இதற்குக் காரணம் மூளைக்கு வேலை கொடுக்காமல் இருப்பது தான். எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் சுடுகோ போன்ற புதிர் விளையாட்டுகளை விளையாடுவதும், அதிகமான புத்தகங்களை படிப்பதும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதனால் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.

7) நிதி திட்டமிடல்:

ஓய்வு காலத்திற்கான சேமிப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 40 வயதுக்கு பிந்தைய வாழ்க்கையை ஆரோக்கியத்தில் முதலீடு செய்யும் நேரமாகும். 40 வயது என்பது வீழ்ச்சியல்ல, மாறாக வாழ்க்கையை இன்னும் திட்டமிட்டு நேர்த்தியாக வாழ்வதற்கான ஒரு புதிய தொடக்கமாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com