
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீட்டு தானியங்கள் உடலில் மெதுவாக ஜீரணமாகி இரத்த சர்க்கரை அளவை மெதுவாக, படிப்படியாக அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இவை எடை மேலாண்மை, டைப் டூ நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதற்கு உதவுகின்றன. லோ கிளைசமிக் இன்டெக்ஸ் உள்ள தானியங்கள் பற்றியும் அதன் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்றால் என்ன?
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது அரிசி சாதம், வெள்ளை ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ட பிறகு ஒருவருடைய ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு விரைவாக உயர்கிறது என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் ஒரு எண் அளவுகோலாகும்.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ள உணவுகளை உண்ணும் போது உடல் கார்போஹைட்ரேட் சத்தை மெதுவாக ஜீரணித்து உறிஞ்சுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு மெதுவாகவும் படிப்படியாகவும் அதிகரிக்கும். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், அவை மெதுவாக ஜீரணம் ஆகின்றன. பசியையும் தள்ளிப் போடுகிறது.
குறைந்த கிளைசசெமிக் குறியீடு உள்ள தானியங்கள்;
1. பார்லி;
இதில் பீட்டா குளுக்கன் நிறைந்துள்ளதால் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு துணை புரிகிறது. பார்லி கொழுப்பை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளும் இதய நோயாளிகளும் பயனடைகிறார்கள். அதிலும் உமி நீக்கப்பட்ட பார்லி மிகவும் சிறந்தது.
2. குயினோவா;
குறைந்த கிளைசெமிக் குறியீட்டுக் கொண்ட தானியமான குயினோவாவில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வாகும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. உடலின் ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது. அரிசிக்கு மாற்றாக குயினோவாவில் சாலடுகள் செய்து உண்ணலாம்.
3. ஓட்ஸ்;
ஸ்டீல் கட் ஓட்ஸ் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பசியை தள்ளிப் போடுகிறது. இதய நோயாளிகளுக்கும் உகந்தது. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் வீக்கத்தை குறைக்க உதவும்.
4. திணை;
திணை உணவுகள் செரிமானத்திற்கு சிறந்தது. இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இது நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.
5. பயறு வகைகள்;
பயறு வகைகளில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. அவை அதிக புரதச்சத்து நிறைந்தவை. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இதில் உள்ள இரும்பு மற்றும் புரதச்சத்து உடலின் ஆற்றல் தன்மைக்கும் தசைகளுக்கும் உகந்ததாக இருக்கிறது.
6. பக்வீட்;
இது கோதுமை போன்ற ஒரு தானியம் ஆகும். ஆனால் இதில் கோதுமையைப் போல பசையம் இல்லை. இதைக் கஞ்சி காய்ச்சி குடிக்கலாம். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு தாவரக் கலவையாகும். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் குளுக்கோஸ் உடலின் வளர் சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
7. பழுப்பு அரிசி;
வெள்ளை அரிசிக்கு மாற்றாக பழுப்பு அரிசி இருக்கிறது. இது மெதுவாக ஜீரணம் ஆவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்த தானியமாகும்.
8. சோளம்;
சோள வகைகளில் முத்து சோளத்தில் தான் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது பசையமில்லாத தானியமாகும். அரிசி அல்லது குயினோவாவைப் போல சமைத்து சாப்பிடலாம். மேலும் சாலடுகள் மற்றும் சூப்புகளில் சேர்க்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)