
மனித உடலில் ஒன்பது துவாரங்கள் அல்லது ஒன்பது வாசல்கள் என்று அழைக்கப்படும் நவ துவாரங்கள் உள்ளன.
மனித இனம் பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்தது. பொதுவாகவே பாலூட்டி இன உயிரினங்களுக்கு நவ துவாரங்கள் எனப்படும் ஒன்பது துவாரங்கள் உடலில் இருக்கும்.
நவ துவாரங்கள் என்று அழைக்கப்படுபவை எவை:
இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் இரு துவாரங்கள், வாய், மலம் மற்றும் சிறுநீரகத் துவாரங்கள் தான் உடலின் நவ துவாரங்கள் ஆகும்.
கண்களின் துவாரத்தினால் தான் நாம் நன்றாக எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஒரு கண் மட்டும் திறந்திருந்தால் நம்மால் சரியாக பார்க்க இயலாது. இரண்டு கண்ணால் பார்த்தால் தான் பார்க்கும் பொருள் மிகத் தெளிவாகத் தெரியும்.
கண்ணில் ஒரு திறப்பு உள்ளது. அதற்கு கண்மணி என்று பெயர். ஒளியை பெற்று கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும் திறன் கண்மணிக்கு உண்டு.
வாய் துவாரத்தின் வழியாகத் தான் நாம் வித விதமான உணவுகளை உண்கிறோம். பலவிதமான பானங்களை அருந்துகிறோம். முக்கியமாக வாய் தான் நம் மனதின் மொழியை வெளியே பேசுகிறது. சில சமயம் யாராவது நம்மை பேசி பேசி எரிச்சலுட்டினால் நாம் கூட சொல்வோம், 'உன் வாயே மூடாதா, பேசியே கொன்று விடுவாய் போல இருக்கு' என்று. மேலும் தும்மல், இருமல், சளி இவை எல்லாம் வாயின் மூலமாகத் தான் வெளியேறுகின்றன. ஆகவே வாய்த் துவாரம் மட்டும் இல்லை என்றால், அவ்வளவுதான், எல்லாம் நின்று விடும்.
காது துவாரத்தின் மூலமாகத் தான் நாம் எல்லாவற்றையும் கேட்கிறோம். சில நேரங்களில் சளி காதில் அடைத்துக் கொண்டாலே நமக்கு காது கேட்காது. இரண்டு துவாரம் ஏன் இருக்கிறது தெரியுமா... நல்ல விஷயங்களை ஒரு காதில் வாங்கி தக்க வைத்து கொள்ளவும், கெட்ட விஷயத்தை அல்லது சில மனக்கசப்பான விஷயங்களை ஒரு காதில் கேட்டு இன்னொரு காதின் வழியாக வெளியேற்றுவதற்கும்... ஆகவே தான் நம் முன்னோர்கள் அடிக்கடி ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக விடு என்று சொன்னார்கள்.
மேலும் இந்த நவத் துவாரங்கள் வழியாகத் தான் நம் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்கள் வெளியேறும். நவ துவாரங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடல் அதனை நமக்கு உணர்த்தும். அதுமட்டுமின்றி உடலில் தேங்கும் கழிவுப் பொருட்களை நீக்கவும், கழிவுப் பொருட்கள் உடலில் தேங்காமலும் இருக்கச் செய்யும்.
உதாரணமாக, நம் மூக்கினை எடுத்துக் கொண்டால், மூக்கின் மூலம் நாம் சுவாசிக்க முடியும். ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசிகளை நம் உடலுக்குள் செல்ல விடாமல் தடுக்க, நம் மூக்கில் சளிப்படலம் இருக்கும். அதன் மூலம் நம் மூக்கின் வழியாக நம் உடலில் தூசி சேர்வது தடுக்கப்படும். அதேபோல் தான் காதுப் பகுதியில் இருக்கும் மெழுகும் உடலில் கழிவுகள் சேர்வதை தடுக்கச் செய்யும்.
நம் உடலின் நவ துவாரங்கள் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதைப் போல, அதன் மூலமாக நம் உடலிலும் பொருட்கள் சேரும் என்பதும் உண்மையே. நாம் நமது சருமத்தில் பயன்படுத்தும் சில பொருட்கள் கூட நம் உடலுக்குள் செல்லும். அதன் மூலமும் நம் உடலில் சில பொருட்கள் சேரும்.
நீங்கள் தூங்கச் செல்லும் முன், இரண்டு பூண்டு பல்லை நன்றாகத் தட்டி உங்களின் பாதங்களின் தேய்த்து விடுங்கள். பின்பு அரைமணி நேரம் கழித்து, நீங்கள் காலின் பாதத்தில் தேய்த்து வைத்த பூண்டின் வாசம் உங்களின் வாயில் உணர முடியும்.
சருமத் துளைகளால் வியர்வை வெளியேறுவது மட்டுமின்றி, நாம் உடலில் தடவும் சில பொருட்களைக் கூட உடல் உறிஞ்சிக் கொள்ளும். இது மட்டுமல்லாமல் சிறுநீரகத் துவாரம் வழியாகத் தான் கெட்ட நீரும் மலத்துவாரம் வழியாகத் தான் கழிவுகளும் வெளியேறுகின்றன, இந்த இரண்டும் தினமும் நேரத்திற்கு வெளியேறா விட்டால் உடம்பில் அதிகமான உபாதைகள் ஏற்படும்.
இந்த ஒன்பதில் ஒன்று அடைபட்டாலும் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். இந்த ஒன்பது துவாரங்களும் ஒழுங்காக செயல்பட்டால் நமக்கு எந்த வியாதியும் வராது. நம்முடைய உயிர் பிரியும் போது இவை எல்லாம் அடைபட்டுவிடும்.