குளிர்காலத்தில் அதிகம் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் ஒன்று காலிஃபிளவர். இது ஒரு குளிர்கால காய். 2000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடல் பகுதியில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. சில உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கும். கூடுதலாக, அவற்றில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கும். காலிஃபிளவரும் இதேபோன்ற உணவுதான். இது அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கத்துடன் எடை இழப்புக்கும் உதவுகிறது. 100 கிராம் காலிஃபிளவரில் 2.6 கிராம் புரோட்டீனும்,10 கிராம் நார்ச்சத்தும்,30 கலோரி ஆற்றலும் கிடைக்கிறது.
ஆட்டிசம் பாதித்த டீன் ஏஜ் மற்றும் இளம் வயதினர்கள் 4 வாரம் தொடர்ந்து காலிஃபிளவர் சாப்பிட்டு வர, அவர்கள் நடத்தையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. மேலும், அவர்களின் பேச்சுத் திறனும் மேம்பட்டதாக லண்டன் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் அதில் உள்ள ‘சப்போரேடோன்’ எனும் வேதிப்பொருள்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
காலிஃபிளவரில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தைச் சீராக்குகிறது. மேலும், இரத்த சர்க்கரை அதிகரிப்பு மற்றும் குறைவதைத் தடுக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. காலிஃபிளவரில் நீர்ச்சத்து அதிகம். இது கூடுதல் கலோரி உட்கொள்ளும் தேவையைக் குறைக்கிறது.
காலிஃபிளவரில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன. அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உயர் தானிய உணவுகளுக்கு நல்ல மாற்று உணவாக காலிஃபிளவர் பயன்படுகிறது. மேலும், இரத்த சர்க்கரையை குறைக்க விரும்புவோருக்கு அதிக நன்மை பயக்கிறது.
காலிஃபிளவரில் குளுக்கோசினோலேட்டுகள் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன. தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்கி, கல்லீரலை இது பாதுகாக்கிறது. ஆரோக்கியமான கல்லீரல் கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்ய இது உதவுகிறது.
காலிஃபிளவரில் நல்ல நோய் எதிர்ப்புச் சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் ஆற்றல் பெற்றவை என்பதால் புற்றுநோய் உள்ளவர்களுக்கு காலிபிளவர் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்களின் மார்பக புற்றுநோய் மற்றும் ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதில் வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் கே ஆகிய சத்துக்களும் பல்வேறு தாதுக்களும் உள்ளன. காலிஃபிளவரில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவையும் உள்ளன. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் காலிஃப்ளவர் முக்கியப் பங்காற்றுகிறது. மூளை செயல்பாட்டிற்கும் நரம்பு மண்டலத்திற்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
காலிஃப்ளவர், பருவ காலங்களில உண்பதற்கு ஏற்ற காய்கறி ஆகும். இதனை எண்ணெயில் பொரித்து உண்ணாமல் கூட்டு மற்றும் குழம்பாக வைத்து சாப்பிட்டால், அதிக பலன் கிடைக்கும். தினமும் இதனை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சில உடல் நலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் இடைவெளி விட்டு சாப்பிடலாம். மேலும், இதனை நன்றாக வேக வைத்து பின்னர்தான் சாப்பிட வேண்டுமாம்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், அதிகப்படியான கால்சியம் இருப்பதால் சிறுநீரக கற்கள் பிரச்னை உள்ளவர்களும் அளவோடு இதனை உண்பது நல்லது. காலிஃபிளவர் உண்பதால் T3, T4 ஹார்மோன்களின் அளவுகளின் சமநிலையை குலைக்கும். நாள்தோறும் சாப்பிட்டால் வாயு தொல்லை, அசிடிட்டி பிரச்னைகள் உண்டாகும். ஏற்கெனவே பித்தப்பை அல்லது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் காலிஃபிளவர் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.