பூவுலகில் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் இயற்கையாகத் தாமே செய்வது சுவாசிப்பது. சுவாசிப்பது இன்றியமையாத செயலாகும்.
உணவில்லாமல் சில நாட்கள் கூட இருக்க முடியும். ஆனால் காற்றை சுவாசிக்காமல் நான்கு நிமிடங்களுக்கும் மேல் இருக்க முடியாது. ஆறு நிமிடங்கள் இருந்தால் அது ஒரு அதிசயமே!
ஒரு நாளைக்கு 25000 முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாசித்தலுக்கும் ஒருமுனைப்பட்ட கவனத்திற்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. சுவாசம் சரியில்லையேல் கவனமும் இருக்காது; உடல் இயக்கங்களும் பாதிக்கப்படும். சுவாசம் சீரற்றதாக இருந்தால் மனமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
ஆனால் நமக்குத் தெரியாமலேயே மூன்றில் ஒரு பங்கு சுவாசிக்கும் திறனையே நாம் பயன்படுத்துகிறோம்.
ஆகவே தான் ஆசனப் பயிற்சியும் தியானமும் நமது முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது.
பதஞ்சலி முனிவர் இதை வெகு அழகாக விளக்கிக் கூறுகிறார்.
உடலையும் மனதையும் பேணி நீடித்து வாழச் செய்வது சுவாசமே.
ஆழ்ந்த சுவாசம், பிராணாயாமம் ஆகியவை ஆயுளை நீட்டிக்கும் வழிகளாகும்.
இன்னொரு ரகசியமும் சுவாசத்தில் உண்டு.
ஸ்வரோதய விஞ்ஞானம் என்ற நமது சாஸ்திரத்தின் படி மூச்சுக் கலையை வைத்து ஜோதிடமும் கூறலாம்; நமது காரியங்களில் சுலபமாக வெற்றியும் பெறலாம்.
நன்றாக சுவாசிப்பது உடலில் இருக்கும் அழுக்குகளையும் மலங்களையும் நீக்குகிறது என்பதை பதஞ்சலி மகாமுனிவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
நமது முன்னோர்கள் மூச்சைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அதை விளையாட்டுகளில் கூடப் புகுத்தி விட்டார்கள்.
எடுத்துக்காட்டாக சடுகுடு எனப்படும் கபடி விளையாட்டை எடுத்துக் கொள்வோம். எவர் அதிகமாக மூச்சைப் பிடித்து விளையாடுகிறாரோ அவர் தான் ஜெயிப்பார்.
இதே போலவே ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளிலும் இந்த மூச்சு பிடிப்பது அவசியமே. வின்னிங் ஷாட் எனப்படும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி தருணங்களில் இந்த சுவாசக் கட்டுப்பாடே வெற்றியைத் தரும்.
மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் மனதையும் உடலையும் சீராக வைக்க உதவுகிறது. சுவாசமே உயிர்; நன்கு சுவாசித்தால் பூமியில் நீண்ட காலம் வாழலாம் என்கிறது ஆன்றோர் மொழி!