

மது அருந்துவதற்தான வரம்பு என்ன? அதிகமானால் என்ன ஆகும்?? எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் கருத்து...
நம் எல்லோருக்குமே ஒரு பொதுவான நினைப்பு மனதில் இருக்கிறது. அதாவது எப்போதாவது ஒரு முறை பார்ட்டியில் அல்லது வேறு எதாவது get together function ல் அல்லது அப்படியே ஒரு ரிலக்ஸிற்காக மது அருந்தினால், அதனால் ஒரு பாதிப்பும் ஏற்படாதென்று. ஆனால், உண்மை தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மது அருந்தும் போது அது ஒவ்வொரு முறையும் நம் உடலைப் பாதிக்கிறது. மேலும், அதனால் ஏற்படும் அபாயங்களும் அதிகமாக தான் இருக்கும்.
மும்பையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், சுகாதார கல்வியாளர் மற்றும் நியூட்ரிபைட் வெல்னஸ் இணை நிறுவனர் டாக்டர் மனன் வோரா அவர்கள், நவம்பர் 30 அன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோவில், "ஆல்கஹால் எப்போதும் உங்கள் உடலை பாதிக்கிறது என்பதை பெரும்பாலான மக்கள் உணருவதில்லை. நீங்கள் அடிக்கடி அருந்தினாலும் சரி, எப்போதாவது அருந்தினாலும் சரி, ஒரே வித்தியாசம் தான்.... அது நீங்கள் எந்த அளவுக்கு குடிக்கிறீர்கள் என்பதுதான்" என்று வலியுறுத்தி இருக்கிறார்.
அவருடைய கருத்துககளின் சாராம்சம்:
மாதத்திற்கு ஒரு முறை குடிப்பது கூட நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டை மெதுவாக்கும். மேலும் கல்லீரலில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமானது கிளாசிக்கல் ஹேங்கோவர் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
நீங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அருந்தும் போது, உங்கள் மூளை அந்த நாளில் மெதுவாக இயங்குகிறது. அதனால் உங்களுக்கு நீரிழப்பு ஏற்படலாம். மேலும் உங்கள் கல்லீரல் அந்த நாளில் மதுவை அழிக்க கூடுதலாக வேலை செய்கிறது. இதன் காரணமாக மறுநாள் காலையில் உங்களுக்கு தலைவலி, சோர்வு தொந்தரவு மற்றும் தூக்கம் ஏற்படும்.
வாரத்திற்கு ஒரு முறை குடிப்பதால், உங்கள் கல்லீரல் தொடர்ந்து அதிகமாக வேலை செய்வதால், கொழுப்பு கல்லீரல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை குடித்தால், ஹேங்கோவர் அறிகுறிகள் மோசமாகிவிடும். கல்லீரல் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும். மேலும் படிப்படியாக ஆரம்பகால கொழுப்பு கல்லீரல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
வாரத்திற்கு பல முறை குடிப்பதால் உங்கள் உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காது. இறுதியில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி கல்லீரல் வீக்கத்திற்கு பங்களிக்கிறது.
நீங்கள் வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை குடித்தால், உங்கள் உடலுக்கு மீட்பு நேரம் கிடைக்காது. உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது கடினமாகும். ஒவ்வொரு இரவும் உங்கள் தூக்கத்தின் தரம் குறையும். மேலும் கல்லீரல் அமைதியாக உள்ளே வீக்கமடைந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் மது அருந்தினால் அது உங்களை மிக கொடிய ஆபத்திற்கு எடுத்து செல்லும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும் புற்றுநோய்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் மது அருந்தினால், நீங்கள் அதிக ஆபத்துள்ள வகைக்குள் நுழைகிறீர்கள் என்று பொருளாகும். புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் அல்லது சிரோசிஸ் போன்றவற்றை உருவாக்குவதற்கும் இது சாத்தியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும் உங்கள் இதயம் மற்றும் கணையம் கூட பாதிக்கப்படும்.
கடைசியாக அவர், மது அனைவரையுமே பாதிக்கிறது என்றும், மது அருந்துவதற்கென்று உண்மையிலேயே பாதுகாப்பான அறிவியல் பூர்வமான வரம்பு எதுவும் இல்லை என்றும் நீங்கள் எவ்வளவு அதிகமாகக் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அமைதியாக சேதம் உங்கள் உடம்பில் குவிகிறது என்றும் வலியுறுத்துகிறார்.
ஆகவே மது அருந்துவதை தவிர்த்து உடல் நலம் காப்போம்! ஆரோக்கியமான வாழ்க்கையை பேணுவோம்!!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)