அஞ்சறைப்பெட்டியில் இருக்கு அம்புட்டு விஷயம்!

உடல் சூடு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் அஞ்சறைப்பெட்டிப் பொருட்களின் மருத்துவப் பயன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அஞ்சறைப்பெட்டி | Spice box
அஞ்சறைப்பெட்டி | Spice box

சமையலறையில் இருக்கும் சிறிய அஞ்சறைப்பெட்டி வெறும் சுவையூட்டிகளை மட்டும் கொண்டதல்ல; அது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் ஒரு மருத்துவப் பெட்டகம். இயற்கை மருத்துவர் நந்தினி சுப்ரமணியம் அவர்கள், நமது அஞ்சறைப்பெட்டியில் உள்ள பாரம்பரிய சமையலறைப் பொருட்களின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றை எளிய முறையில் பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்குகிறார்.

1. வெந்தயம் (Fenugreek):

வெந்தயம் (Fenugreek)
வெந்தயம் (Fenugreek)

உடல் சூடாகிவிட்டது, வயிற்று வலி, சிறுநீர் எரிச்சல் போன்று என்ன பிரச்னையானாலும் பெண்மணிகள் உடனே எடுத்துக்கொள்வது வெந்தயம். வெந்தயம் சாப்பிட்டால் உடல் சூடு தணியும் என்றே நமக்கு கூறி வளர்த்துள்ளனர் நம் தாய்மார்கள்.

வெந்தயத்தின் இலைக்கும் மலமிளக்கும் தன்மையும், உடல் வெப்பத்தைத் தணிக்கும் பண்பும் உள்ளது. வெந்தயத்திற்கு குடல் வாயுவை அகற்றி, சிறுநீரைப் பெருக்கி உடல் வெப்பத்தைத் தணிக்கும் குணம் உள்ளது.

15 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது கல்லுப்பு சேர்த்து மோர் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

2. தனியா (Coriander): 

தனியா (Coriander)
தனியா (Coriander)

கொத்துமல்லி இலை மற்றும் விதைகள் இரண்டுமே உடலுக்குக் குளிர்ச்சி தரும். தனியா வெப்பமுண்டாக்கும் என்றாலும், அவை வெப்பத்தை உண்டாக்கி உடலில் உள்ள அகட்டு வாயுவை வெளியேற்றும். சிறுநீரைப் பெருக்கி, உடல் ஜூரம், வெப்பம் தணிக்கும். பித்தத்தைக் குறைத்து பசியைத் தூண்டும். தனியாவை தினமும் 650 மில்லி கிராம் முதல் 2 கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்குக்கு ட்ரிப்ஸ் அவசியமா? பெற்றோர்கள் கவனத்திற்கு!
அஞ்சறைப்பெட்டி | Spice box

கொத்துமல்லி விதையை 2 தேக்கரண்டி எடுத்து லேசாக நசுக்கி இரண்டு தம்ளர் (300 ml) நீர்விட்டு அரை தம்ளர் (60 ml) ஆகக் காய்ச்சி, பால், சர்க்கரை கலந்து குடிக்க கோடைகாலத்தில் ஏற்படும் அதிதாகம், நாவறட்சி நீங்கும்.

3. சீரகம் (Cumin):

சீரகம் (Cumin)
சீரகம் (Cumin)

அன்றாடம் நாம் சமையலில் பயன்படுத்தும் சீரகம் சிறுநீரைப் பெருக்கி, உடல் திசுக்களை இருகச் செய்து உடலுக்கு பலம் தரக்கூடியது. கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.

சீரகத்தை இளம் வறுப்பாக வறுத்துப் பொடி செய்யவும். அரை தேக்கரண்டி வெண்ணெயை உருக்கி, ஒரு கிராம் சீரகப் பொடியை அதனுடன் கலந்து உண்ண, தொண்டை முதல் வயிறு வரை உண்டாகக் கூடிய எரிச்சல் தணியும். கோடை காலத்தில் நல்லெண்ணெயும் சீரகமும் சேர்த்துக் காய்ச்சி தலை முழுக, வெயிலினால் உண்டாகும் மயக்கம், தலைவலி நீங்கும்.

4. மிளகு (Pepper):

மிளகு (Pepper)
மிளகு (Pepper)

மிளகின் காரம் வயிற்றுப் புழுக்களை அழிக்கக்கூடியது. குடல் புண்களை ஆற்றும்.

மிளகு, பெருஞ்சீரகம், தேன் சேர்த்து லேகியமாக்கிச் சாப்பிட்டுவர முதியவர்களுக்கு உண்டாகும் மூலநோய் தணியும்.

5. கடுகு (Mustard):

கடுகு (Mustard)
கடுகு (Mustard)

இதன் சுவை காரம். தன்மை வெப்பம். கடுகைத் தனியாகவோ எண்ணெயிலிட்டோ பொரிப்பதன் மூலம் அதன் காரம் தணியும். தொடர்ந்து விக்கல் ஏற்படும்போது கடுகை நீர்விட்டரைத்து ஒரு பருத்தித் துணியில் தடவி நெஞ்சுக் குழியில் பற்றிட விக்கல் நிற்கும்.

இதையும் படியுங்கள்:
தாய்ப்பாலா? புட்டிப்பாலா? குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் உண்மை!
அஞ்சறைப்பெட்டி | Spice box

சூட்டு இருமல் அல்லது வரட்டு இருமல் இருந்தால், கடுகை வறுத்துப் பொடி செய்து தண்ணீருடன் கலந்து அரை மணி நேரம் கழித்து, தெளிந்த நீரைப் பருக இருமல் குறையும்.

6. பெருங்காயம் (Asafoetida):

பெருங்காயம் (Asafoetida)
பெருங்காயம் (Asafoetida)

இது வெப்பத்தை உண்டாக்கி, அகட்டு வாயுவை அகற்றும். பச்சையாக உபயோகித்தால் வாந்தியை உண்டாக்கும். தலைச்சுற்றல் மிகும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். பெருங் காயத்தைப் பொரித்துப் பயன்படுத்த அதன் காரத்தன்மையும், வெப்பமும் குறையும்.

பெருங்காயத்தை அளவாகப் பயன்படுத்த வேண்டும். மிகுதியாக உபயோகித்தால் நரம்புகளை வெப்பப்படுத்தும்; தொண்டைப் புண், நீர் எரிச்சலை உண்டாக்கும்.

7. மிளகாய் (Chili):

மிளகாய் (Chili)
மிளகாய் (Chili)

மிளகாய் மிக அதிக அளவில் உடலைச் சூடாக்கும் தன்மையுடையது. அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தினால் குடல் புண்களை உண்டாக்கும். கோடைகாலத்தில் பச்சை மிளகாய் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். வரமிளகாயை விதை நீக்கிப் பயன்படுத்தினால் குடல் புண்கள் ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
பள்ளி மாணவன் மயங்கி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள் முதலுதவி!
அஞ்சறைப்பெட்டி | Spice box

மிளகாயோடு இரண்டு பங்கு தனியா தூள் சேர்த்துப் பயன்படுத்த மூலநோயைத் தவிர்க்கலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம் அன்றாட சமையல் பொருட்களின் சரியான பயன்பாட்டை அறிந்துகொள்வதன் மூலம் மருந்துகளின்றி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்க முடியும்.

மங்கையர் மலர் ஏப்ரல் 16-30, 2019

குறிப்பு: இக்கட்டுரை கல்கி குழுமத்தின் அச்சுக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் முதலில் வெளியான காலகட்டத்தைச் சார்ந்தவை.

logo
Kalki Online
kalkionline.com