
அவகோடா, வெண்ணெய்ப் பழம், பேரிக்காய் அல்லது முதலை பேரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனிசம் சத்து, பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் வகைகள், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே போன்ற எண்ணற்ற சத்துக்களும் மினரல்களும் தாது உப்புகளும் நிறைந்துள்ளன.
பெண்களுக்கு உகந்த பழம்: கருமுட்டை வளர்ச்சி குறைபாடு இருக்கும் பெண்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க உதவும். இதில் உள்ள ஃபோலேட் ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு உதவுவதோடு, கருச்சிதைவு மற்றும் நரம்புக் குழாய் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் இந்தப் பழத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் வளர்ச்சி: ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை விரும்பும் பெண்கள் அவசியம் உண்ண வேண்டிய பழம் இது. இதில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரதம் போன்றவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. அவகோடா பழத்தை உண்பதோடு மட்டுமல்லாமல், இதை தோல் நீக்கி அரைத்து பேஸ்ட்டாக்கி முடியின் வேர்க்கால்களில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
இளமையான தோற்றத்துக்கு: இந்தப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்துள்ளதால் சருமச் சுருக்கத்தை தாமதப்படுத்துகிறது. அது மட்டுமின்றி, சரும செல்களை புதுப்பிக்கவும் முதிர்ந்த தோற்றம் ஏற்படாமல் தடுத்து இளைமையாகவும் வைக்கிறது. பலவிதமான அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க இந்தப் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடல் எடை குறைப்பு: இந்தப் பழம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும். இதில் குறைவான கார்போஹைட்ரேட்டும், கலோரிகளும் உள்ளதால், எடை இழப்பையும் ஊக்குவிக்கிறது. உடல் பருமனான பெண்களுக்கு இது மிகவும் கைகொடுக்கும்.
இதய ஆரோக்கியம்: இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் எனப்படும் இயற்கையான தாவர ஸ்டெரால் உள்ளது. இவை இதயத் தமனிகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நல்ல கொழுப்புகள் எனப்படும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சீரான இரத்த அழுத்தம்: இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இது தடுக்க உதவுகிறது.
சிறந்த கண் பார்வை பெற: அவகோடாவில் கண்களுக்கு நன்மை பயக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் ஏ, வைட்டமின் இ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. இதனால் கண் புரை, கண் பார்வை திறன் குறைவு போன்ற பாதிப்புகளை குறைக்கிறது. கண் தொடர்பான நோய்கள் வராமலும் தடுக்கிறது.
புற்றுநோய் தடுப்பு: புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இப்பழத்தில் நிறைந்துள்ளன. இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இது லிம்போசைட்டுகள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டல செல்களின் பெருக்கத்தை ஊக்குவிப்பதால், பெருங்குடல், வயிறு, கணையம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களிலிருந்து காக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: இந்தப் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், குடல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.