குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்!

கண், மூக்கு, காதுகளில் எண்ணெய் விடுவது முதல் அதிக அழுத்தம் கொடுப்பது வரை பெற்றோர் செய்யும் ஆபத்தான தவறுகள் குறித்து முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்
Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்
Updated on: 

அன்பான தொடுதல் குழந்தைக்கு இதம் அளிக்கட்டும், பாதுகாப்பும் குறைவில்லாமல் இருக்கட்டும்!

குழந்தைக்குக் குளிப்பாட்டுவதற்கு முன் எண்ணெய் தேய்ப்பது பல தமிழ்க் குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பழக்கம்தான். இது குழந்தையுடன் நெருக்கத்தை வளர்க்கும் அன்பான தருணமாகவும் அமைகிறது. ஆனால் எண்ணெயின் வகை, தேய்க்கும் முறை, அழுத்தம், குளிப்பாட்டும் நேரம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் தேவை. எண்ணெய் மசாஜ் என்பது சடங்கு மட்டுமல்ல, குழந்தையின் மென்மையான தோலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கூட!

Q

கண், மூக்கு, காதுகளில் எண்ணெய் விடலாமா?

A

கூடாது! கண்களில் எண்ணெய் விடுவது எரிச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். மூக்கில் எண்ணெய் ஊற்றினால் அது சுவாசப்பாதைக்குள் செல்லும் அபாயம் உள்ளது. காதுக்குள் எண்ணெய் விடுவதும் தேவையற்றது. குறிப்பாகப் பிறந்த குழந்தைகளுக்கு இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

செய்ய வேண்டியது: வெளிப்புறத் தோலில் மட்டும், பாதுகாப்பான முறையில் எண்ணெய் பயன்படுத்துங்கள்.

Q

வாசனை எண்ணெய்களும் கடுகு எண்ணெயும் பாதுகாப்பானவையா?

A

வாசனைத் திரவியங்கள் கலந்த எண்ணெய்கள், செயற்கை மணமூட்டிகள் கொண்ட பொருட்கள் குழந்தையின் மென்மையான தோலில் ஒவ்வாமையையோ எரிச்சலையோ ஏற்படுத்தலாம். கடுகு எண்ணெய் தோலின் பாதுகாப்புத் தடுப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால் குழந்தைகளுக்கு வழக்கமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

செய்ய வேண்டியது: தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், எந்த எண்ணெயும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்றது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முதலில் சிறிய பகுதியில் பயன்படுத்திப் பாருங்கள். ஒவ்வாமை ஏற்பட்டால் தவிர்த்து விடவும்.

Q

எண்ணெயைச் சூடாக்கித் தேய்க்கலாமா?

A

அதிக சூடான எண்ணெயை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. மிகக் குளிர்ந்த எண்ணெயும் குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தால், அது குழந்தையின் தோலுக்கு ஏற்றது என்பதை உறுதிசெய்து, வெதுவெதுப்பான நிலையில் மட்டுமே பயன்படுத்துங்கள். சமையலறையில் நீண்டகாலம் திறந்து வைக்கப்பட்ட எண்ணெய்களைத் தவிர்க்கவும்.

Q

அதிக அழுத்தத்துடன் மசாஜ் செய்வது தவறா?

A

ஆம். குழந்தையின் கை, கால், முதுகுப் பகுதிகளில் மென்மையாகத் தடவலாம். மார்புப் பகுதியில் மிக மென்மையாகவும், வயிற்றில் இன்னும் மென்மையாக வட்ட வடிவ அசைவுகளுடனும் மசாஜ் செய்யுங்கள். எலும்புகள், மூட்டுகள் மீது அழுத்தம் கொடுக்காதீர்கள். குழந்தை அழுதால், உடலை இறுக்கினால் அல்லது அசௌகரியம் காட்டினால் நிறுத்துங்கள்.

Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்
Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்
Q

எவ்வளவு நேரம் எண்ணெய் தேய்க்க வேண்டும்?

A

சுமார் 5–7 நிமிடங்கள் மென்மையான மசாஜ் போதுமானதாக இருக்கலாம். குழந்தையிடம் பேசுங்கள், பாடுங்கள், புன்னகையுங்கள், அன்பாகக் கொஞ்சுங்கள். இந்த நேரம் குழந்தையின் உடலைத் தொடுவதற்கான நேரம் மட்டுமல்ல, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நேரமும் ஆகும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி லேகியம் சாப்பிடுவது ஏன்? சாஸ்திரமும் அறிவியலும்!
Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்
Q

எண்ணெய் தேய்த்த உடனே குளிப்பாட்டலாமா?

A

எண்ணெய் தேய்த்த பிறகு சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்து குளிப்பாட்டலாம். அறை வெதுவெதுப்பாக இருக்கட்டும். குளிப்பாட்டும் நீரின் வெப்பத்தை முன்கூட்டியே சரிபாருங்கள். எண்ணெய் பூசிய குழந்தை வழுக்கக்கூடும் என்பதால், குழந்தையை கவனமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். குளிக்கும் தொட்டியிலோ தண்ணீரின் அருகிலோ குழந்தையை ஒரு நொடியும் தனியாக விடாதீர்கள்.

Q

எந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் தேவை?

A

குறைமாதக் குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், தோலில் அரிப்பு, சிவத்தல், புண்கள் அல்லது ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதற்கு முன் குழந்தை மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். எண்ணெய் தேய்ப்பது என்பது ஒரு சம்பிரதாயமல்ல. குழந்தையின் தோல் வறட்சியாக இருந்தால், குழந்தைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் தேவைப்படும் 7 உணவுகள்!
Baby Oil Bath - குழந்தைக்கு எண்ணெய் குளியல்

நினைவில் கொள்ளுங்கள்: குழந்தைக்கு எண்ணெய் தேய்ப்பதில் முக்கியமானது எண்ணெயின் அளவோ, மசாஜின் வேகமோ அல்ல. பாதுகாப்பான தொடுதல், மென்மையான அசைவுகள், அன்பான உரையாடல் ஆகியவையே முக்கியம். எண்ணெய் தேய்ப்பது உடலுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு செயல், அன்பாகத் தொட்டு கொஞ்சுவது மனதுக்கான இதம்!

logo
Kalki Online
kalkionline.com