
ஒரு காலத்தில் முதியோரிடையே மட்டுமே காணப்பட்டு வந்த முதுகுவலி, இப்போது பள்ளி குழந்தைகளுக்கே ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, மரபணு சார்ந்த பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாகவே 20 வயது முதல் 30 வயது வரையிலான பெரும்பாலான இளைஞர்கள், உடல்சார் வேலையில் ஈடுபடாமல், மூளைசார் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் 80% பேருக்கு பரிசோதனை செய்து பார்த்தால் எந்த பிரச்னையும் இருக்காது. முதுகுவலி வருவதற்கு அவர்களது வாழ்க்கை முறையும் நீண்ட நேரம் எந்த வித உடல்ரீதியான செயல்பாடுகளும் இல்லாமல், அமர்ந்த நிலையில் இருப்பதுவும் ஆகும். அவர்கள் அமர்ந்திருக்கும் நிலையும் தவறாக இருக்கலாம்.
இதில் வெகுசிலருக்கே டிஸ்க் சார்ந்த காரணங்கள் இருக்கும். டிஸ்க் என்பது முதுகெலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு அமைப்பு ஆகும். பொதுவாக கீழ் முதுகின் வேலையே மேலே இருக்கும் உடலை தாங்குவதுதான். இதற்கு எலும்பு, தசை, மூட்டு ஆகியவை இணைந்து உதவும். ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே இருக்கும்போது இவை எதுவுமே பணியாற்றாமல், ஒட்டுமொத்த சுமையும் ஜவ்வுகளின் மீது போடப்படுகின்றன.
அதனால், அது கிழிதல் அல்லது பலவீனமடைகிறது. வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வெவ்வேறு பணி செய்பவர்களுக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றினாலே முதுகுவலியை தவிர்க்க முடியும்.
இயற்கையாகவே நமது முதுகுத்தண்டில் கழுத்துப்பகுதி, நடுமுதுகு, கீழ்முதுகு என வளைவுகள் உள்ளன. நாம் சரியாக அமராத போது அவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை தவிர்க்க லேப்டாப் போன்ற கணினி முன் பணியாற்றும் போது திரையில் தெரியும் முதல் வரிக்கு நேராக நமது கண்கள் இருக்குமாறு அமர வேண்டும்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது நமது கீழ் முதுகு நாற்காலியை தொட்டவாறு அமர வேண்டும். நாற்காலிக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக் கூடாது. நமது தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்க வேண்டும். நமது முட்டிப் பகுதியில் இருந்து கால் வரை இருக்கும் தொலைவே, நமது இருக்கைக்கும் தரைக்கும் இடையே இருக்க வேண்டும். இருக்கையில் அமரும்போதும் கைகளை விரித்த நிலையில் அமராமல், உடலோடு ஒட்டியவாறு அமர்ந்திருக்க வேண்டும்.
கணினியில் கீபோர்டை பயன்படுத்தும்போது மணிக்கட்டு, முன் கை உள்ளிட்ட மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். இதேபோல் வாகனம் ஓட்டுபவர்களும், முறையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முதுகுவலியை தவிர்க்க முடியும்.
பள்ளி மாணவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பையின் எடையும் அவர்களின் உடல்சார் செயல்பாடுகளோடு தொடர்புடையது தான். இப்போதெல்லாம் மாணவர்கள் பெரிதும் விளையாடுவதில்லை. இதனால், அவர்களின் உடல்சார் செயல்பாடு குறைகிறது. எனவே, அவர்களது உடல்சார் செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும். இது மட்டுமில்லாமல் நோயெதிர்ப்பு குறைந்த குழந்தைகளுக்கும் முதுகுவலி பிரச்னை ஏற்படலாம்.
இந்தியாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 2020-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட விதியின்படி, தன்னுடைய எடையில் 10 சதவீத எடை கொண்ட புத்தகப்பையை மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் புத்தகப் பையை தோளின் இரண்டு பக்கமும் மாட்ட வேண்டும். பையின் மேல்பகுதி அவர்களின் தோள்பட்டைக்கு இணையாக இருக்க வேண்டும்.
சில பைகளில் இடுப்பில் கட்டிக்கொள்ளுமாறும் வசதி இருக்கும். அதையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பைக்கும், முதுகுக்கும் இடையில் இடைவெளி இருக்கக்கூடாது. அதிக எடையுள்ள புத்தகத்தை முதுகை ஒட்டியவாறும் குறைந்த எடையுள்ள புத்தகங்களை அடுத்தடுத்த வரிசையிலும் அடுக்க வேண்டும்.
தசைகள் பலவீனமடைந்து சரியாக வேலை செய்யாதபோது பெல்ட்டை நாம் பயன்படுத்தி நம்முடைய இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுகிறோம். அந்த சமயத்தில் தசை செய்ய வேண்டிய வேலையை பெல்ட் செய்யும். ஆனால், அதை தொடர்ந்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் தசை மீண்டும் வலுவடையாது. வலியில் குறைவு ஏற்பட்டவுடன் பெல்ட்டை நீக்கிவிட்டு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே தசை வலுப்பெற்று மீண்டும் அதன் பணியை செய்ய தொடங்கும்.
அமர்ந்தே பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடத்திற்கும் ஒருமுறை 10 நொடிகள் எழுந்து உடலை தளர்த்த வேண்டும். சாதாரண முதுகுவலிக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். முதுகுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவி கால் மரத்து போதல், முதுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் முதுகுவலிப் பிரச்னை நாள்பட்டதாகவும், தீவிரமாகவும் இருந்தால் ஆர்த்தோ மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)