பாதாம் பிசினை தவறாக சாப்பிட்டால் ஆபத்து? சரியாக ஊறவைக்கும் முறை இதோ!

கோடையில் உடல் சூட்டை குறைத்து புத்துணர்ச்சி தரும் பாதாம் பிசின் நன்மைகள், ஊறவைக்கும் முறை மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் பற்றி அறியுங்கள்.
Gond Katira - Badam Pisin
Gond Katira - Badam Pisin
Updated on

வெயில் காலம் தொடங்கிவிட்டாலே நம் உடல் வெப்பம் அதிகரித்து, சோர்வும் தாகமும் நம்மை வாட்டும். இயற்கையாகவே உடல் சூட்டைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் ஒரு அற்புதமான பொருள் பாதாம் பிசின் (Badam Pisin) என்று அழைக்கப்படும் Gond Katira. இது ஒரு மரத்தின் பிசின் ஆகும். பார்ப்பதற்குச் சிறிய கற்கள் போலத் தோற்றமளிக்கும். இதை தண்ணீரில் ஊறவைக்கும்போது ஜெல்லி போன்ற மென்மையான வடிவத்தைப் பெறுகிறது.

பாதாம் பிசினை ஊறவைக்கும் சரியான முறை:

பாதாம் பிசினைச் சரியாக ஊறவைக்காமல் பயன்படுத்தினால் அதன் முழுப்பலனைப் பெற முடியாது. அதனைச் சரியாகத் தயார் செய்யும் முறை:

பாதாம் பிசின் தண்ணீரை உறிஞ்சிப் பல மடங்கு பெருகும் தன்மை கொண்டது. எனவே, ஒரு நபருக்கு 2 முதல் 3 சிறிய துண்டுகள் போதுமானது. பிசினில் சிறு மண் துகள்கள் அல்லது மரப்பட்டைகள் ஒட்டியிருக்கலாம். ஊறவைப்பதற்கு முன் ஒருமுறை தண்ணீரில் அலசிவிடவும். ஒரு பாத்திரத்தில் பிசினைப் போட்டு, அது முழுமையாக மூழ்கும் அளவிற்குத் தாராளமாகத் தண்ணீர் ஊற்றவும். இது ஜெல்லியாக மாறக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இரவு தூங்கும் முன் ஊறவைப்பது சிறந்தது. நன்கு ஊறிய பின், அது ஜெல்லி போன்ற தோற்றத்திற்கு வரும். அதில் கூடுதல் தண்ணீர் இருந்தால் அதை வடிகட்டிவிட்டு, பிசினை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம்.

பாதாம் பிசின் தரும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:

  • இது ஒரு சிறந்த இயற்கைக் குளிர்ச்சிப் பொருளாகும். கோடையில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வாய்ப்புண் மற்றும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க இது உதவுகிறது.

  • இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. வயிற்றில் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.

  • பாதாம் பிசின் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் தேவையற்ற பசி எடுக்காது, இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

  • இதிலுள்ள நீர்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் காரணமாக சரும ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். சருமத்தைச் சுருக்கங்கள் இன்றிப் பாதுகாக்கவும், இளமையாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

  • சோர்வாக இருக்கும் நேரங்களில் இதைப் பால் அல்லது சர்பத்துடன் சேர்த்து அருந்தும்போது புத்துணர்ச்சி தரக்கூடும்.

இதையும் படியுங்கள்:
வெயிலில் கருகிய சருமம் வெள்ளையாகணுமா? இதை மட்டும் தடவுங்க போதும்!
Gond Katira - Badam Pisin

தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்:

பாதாம் பிசினைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

  • நல்லதுதானே என்று அதிக அளவு பிசினைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இது செரிமானத்தில் மந்தநிலையை ஏற்படுத்தலாம்.

  • பிசினை ஊறவைக்கும்போது தண்ணீர் குறைவாக இருந்தால், அது சரியாக விரியாது. அதேபோல் பிசினைச் சாப்பிட்ட பிறகு அன்றைய தினம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

  • பிசின் முழுமையாக ஜெல்லியாக மாறாமல் உட்கொண்டால், அது வயிற்றில் உள்ள தண்ணீரை உறிஞ்சி உபாதைகளை ஏற்படுத்தும்.

  • உடல் தன்மைக்கு ஏற்ப சிலருக்கு குளிர்ச்சிப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அந்த வகையில், இது உடலைக் குளிர்ச்சியாக்கும் பொருள் என்பதால், சைனஸ் அல்லது சளி பிரச்சனை உள்ளவர்கள் அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. 

இதையும் படியுங்கள்:
கோடையில் உடல் எடையைக் குறைக்க இதுதான் 'பெர்பெக்ட்' டைம்!
Gond Katira - Badam Pisin

பயன்பாட்டு முறைகள்:

பாதாம் பிசினை வெறும் தண்ணீரில் கலந்து சாப்பிடுவதை விட, கீழ்க்கண்ட முறைகளிலும் சுவையாகப் பயன்படுத்தலாம்.

  • ரோஸ் சர்பத் அல்லது நன்னாரி சர்பத்: குளிர்ந்த நீரில் எலுமிச்சைச் சாறு, சர்பத் மற்றும் 2 ஸ்பூன் பாதாம் பிசின் கலந்து பருகலாம்.

  • பால்: காய்ச்சிய பாலில் பாதாம் பிசின், ஏலக்காய் மற்றும் நாட்டுச்சர்க்கரை கலந்து அருந்துவது மிகவும் பிரபலம். இது ஒரு சிறந்த ஆற்றல் பானமாகும்.

  • ஜிகர்தண்டா: மதுரையின் புகழ்பெற்ற ஜிகர்தண்டாவில் முக்கியப் பொருளே இந்தப் பாதாம் பிசின் தான்.

இயற்கை நமக்குக் கொடுத்த கொடைகளில் ஒன்றான பாதாம் பிசினை சரியான முறையில், முறையான அளவில் ஊறவைத்துப் பயன்படுத்தி  இந்தக் கோடை காலத்தைக் ஆரோக்கியமாகவும் மற்றும் குளிர்ச்சியாகவும் கொண்டாடுவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com