கோடையில் உடல் எடையைக் குறைக்க இதுதான் 'பெர்பெக்ட்' டைம்!

Exercise
ExerciseImg credit: AI Image
Updated on

கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நாட்களில், உடற்பயிற்சி செய்வதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக பலரும் உடற்பயிற்சியைத் தவிர்க்க முற்படுகிறார்கள். ஆனால், ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியம். கோடையில் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதா அல்லது மாலை நேரத்தில் செய்வது பாதுகாப்பானதா என்பதில் பலருக்கும் குழப்பம் உண்டு. இந்த இரண்டு நேரங்களிலும் உள்ள நன்மைகள் மற்றும் சவால்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்லாம்.

காலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள்:

கோடை காலத்தில் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலான நேரம் உடற்பயிற்சிக்கு மிகவும் ஏற்றது. இந்த நேரத்தில் வளிமண்டல வெப்பநிலை குறைவாகவும், காற்று புத்துணர்ச்சியுடனும் இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும், காலையில் உடற்பயிற்சி முடித்துவிட்டால், நாள் முழுவதும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும்.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை எரிக்க அதிக உதவுகிறது. மேலும், காலை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இருப்பினும், கோடை வெயில் சீக்கிரம் தொடங்குவதால், காலை 8 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் நடைப்பயிற்சியா? கோடை வெயிலில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான்!
Exercise

மாலை நேர உடற்பயிற்சியின் நன்மைகள்:

மாலையில் உடலின் வெப்பநிலை இயற்கையாகவே சற்று அதிகமாக இருக்கும். இது தசைகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் தசைப்பிடிப்பு மற்றும் காயங்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், அன்றைய தினத்தின் சோர்வை நீக்கவும் உதவும்.

கோடை காலத்தில் மாலை 6 மணிக்கு மேல் சூரிய வெப்பம் குறைந்த பிறகு உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது. ஆய்வுகளின்படி, மாலை நேரத்தில் நுரையீரலின் செயல்பாடு சிறப்பாக இருக்கும், இது கடினமான உடற்பயிற்சிகளை செய்வதற்கு ஏற்ற நேரமாகும். ஆனால், தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே பயிற்சியை முடிப்பது அவசியம். இல்லையெனில் உடல் வெப்பம் அதிகரித்து தூக்கம் பாதிப்படையலாம்.

இதையும் படியுங்கள்:
வாக்கிங் போக நேரமில்லையா? வார இறுதி நாட்களில் கடற்கரைக்கு மட்டும் போங்க போதும்! ஏன் தெரியுமா?
Exercise

பாதுகாப்பு எச்சரிக்கைகள்:

கோடை காலத்தில் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் பாதுகாப்பு மிக முக்கியம். வெப்பத் தாக்கம் ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

  • தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இடையிலும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எலக்ட்ரோலைட் பானங்கள் அல்லது இளநீர் எடுத்துக்கொள்வது தாது உப்புகளைச் சமநிலைப்படுத்த உதவும்.

  • பருத்தி ஆடைகள் அல்லது காற்றோட்டமான 'டிரை-பிட்'  ஆடைகளை அணியுங்கள். கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.

  • அதிக வெப்பம் இருந்தால் வெளிப்புறப் பயிற்சிகளுக்குப் பதிலாக, வீட்டிற்குள்ளோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ பயிற்சி செய்வது சிறந்தது.

எது அதிக பயனுள்ளது?

காலை அல்லது மாலை என எப்போது உடற்பயிற்சி செய்தாலும், உங்கள் உடலின் தேவை மற்றும் உங்கள் வாழ்க்கை முறைக்கு எது செட் ஆகிறது என்பதே முக்கியம். எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குக் காலை நேரம் சிறந்தது. தசை வலிமை மற்றும் தீவிரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மாலை நேரம் உகந்தது. கோடை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, மிதமான வேகத்தில் உடற்பயிற்சியைத் தொடங்குவது சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com