வெயிலில் கருகிய சருமம் வெள்ளையாகணுமா? இதை மட்டும் தடவுங்க போதும்!

கோடைக்கால வெயிலால் ஏற்படும் பிக்மென்டேஷன், சன் டேன் முதல் சரும புற்றுநோய் வரை 9 முக்கிய பிரச்சனைகளும் அவற்றை வீட்டிலேயே கட்டுப்படுத்த உதவும் எளிய தீர்வுகளும்..
Summer Skin Care Tips
Summer Skin Care TipsImg credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

Summer Skin Care Tips:

கோடைக்காலம் வந்தாலே சரும பிரச்சனைகளும் வந்துவிடும். கடும் கோடை வெயிலினால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக சூரியனிலிருந்து வரும் UV கதிர்களால் சருமம் பொலிவிழப்பதுடன் அலர்ஜி மற்றும் நோய் தொற்றுகளும் உண்டாகின்றன.

1) பிக்மென்டேஷன் (Pigmentation):

வெயிலின் தாக்கத்தால் முகத்தில் ஆங்காங்கே கருப்பு திட்டுகள் மற்றும் பழுப்பு நிறப் புள்ளிகள் (dark spots) ஏற்படுதல்.

தீர்வு: பச்சையான உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றை கரும்புள்ளிகள், கருப்பு திட்டுகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். உருளைக்கிழங்கில் உள்ள நொதிகள் மெலனின் உற்பத்தியைக் குறைத்து சருமத்தை வெண்மையாக்கும்.

2) சரும கருமை (Sun Tan):

புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் மெலனின் உற்பத்தி அதிகரித்து சருமம் கருமையடைகிறது. வெயிலின் தாக்கத்தால் சருமம் பொலிவிழந்து கருகிப் போதல் (tanning).

தீர்வு: தக்காளி சாற்றுடன் சிறிதளவு தயிர் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சன் டேன் மற்றும் பழுப்பு புள்ளிகளை நீக்க உதவும்.

3) சன் பர்ன் (Sunburn):

வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் சருமம் சிவந்து போகுதல், எரிச்சல், அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்றவை ஏற்படும்.

தீர்வு: கற்றாழை ஜெல்லை சன் பர்ன் பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தேய்க்கவும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வரலாம்.

4) பூஞ்சை தொற்று: 

வியர்வையும், ஈரப்பதமும் சரும மடிப்புகளில் தங்குவதால் தேமல், படர்தாமரை மற்றும் வேர் முடிச்சு பாதிப்புகள் (Boils) வெயில் காலத்தில் அதிகரிக்கும்.

தீர்வு: குளித்ததும் அக்குள், இடுப்பு போன்ற சரும மடிப்புகள் உள்ள இடங்களை நன்கு உலர வைக்கவும். தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும். சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி வர அரிப்பு குறையும். மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல செய்து தடவ பூஞ்சைகளை அழிக்க உதவும்.

5) சரும அலர்ஜி (Sun Allergy):

வெயிலில் சென்றவுடன் சிலருக்கு சருமத்தில் தடிப்புகள் மற்றும் சிவப்பு நிற அலர்ஜி உண்டாகும்.

தீர்வு:  தடிப்புகள் மட்டும் சிவப்பு நிற அலர்ஜிக்கு கலமைன் லோஷன் (calamine lotion) தடவ உடனடி நிவாரணம் தரும். அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் குளிர்ந்த, ஈரமான துணியை வைத்து ஒத்தடம் கொடுப்பதும் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடையில் கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி! தீர்வு என்ன?
Summer Skin Care Tips

6) வியர்க்குரு (Heat Rash):

அதிக வியர்வையினால் வேர்வை சுரப்பிகள் அடைப்பட்டு, கழுத்து, மார்பு மற்றும் மடிப்புகளில் சிறு சிறு சிவப்பு கட்டிகள் தோன்றுவதுடன் அரிப்பும் ஏற்படும்.

தீர்வு: சந்தனப் பொடியுடன் சிறிது பன்னீர் கலந்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவிட வியர்க்குரு காணாமல் போய்விடும்.

7) சரும வறட்சி: 

வெயிலினால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால் சருமம் பொலிவிழந்து சுருக்கங்களுடன் வறண்டு காணப்படும்.

தீர்வு: ஒரு நாளைக்கு கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வதும் சிறந்த தீர்வாக இருக்கும்.

8) சரும புற்றுநோய் அபாயம்:

நீண்ட நேரம் பாதுகாப்பின்றி வெயிலில் இருப்பதால் சருமத்தில் திடீர் மச்சங்கள், ஆறாத புண்கள் போன்ற புற்றுநோய் அறிகுறிகள் ஏற்படலாம்.

தீர்வு: சூரியனின் கதிர்கள் உச்சத்தில் இருக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியிலில் செல்வதை குறைக்கவும். வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு சன் ஸ்கிரீன் தடவவும். முகம், காதுகள் மற்றும் கழுத்தை மறைக்கும் அகலமான தொப்பி மற்றும் யூவி கதிர்களை தடுக்கும் சன் கிளாஸ் அணியவும். தக்காளி போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது சருமத்தை பாதுகாக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி? ஒரு முழுமையான ரிப்போர்ட்!
Summer Skin Care Tips

9) நீரிழப்பு (Dehydration):

உடலில் உள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பால் குறையும் நிலை நீரிழப்பு எனப்படுகிறது. போதிய நீர் சத்து இல்லாததால் சருமம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும்.

தீர்வு: வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்த்தொற்றுகள் காரணமாக உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுவதும், அதிகப்படியான உடற்பயிற்சி போன்றவையும் நீர் இழப்பை ஏற்படுத்தும். இதற்கு நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்வதும், இளநீர், பழச்சாறு போன்றவற்றை பருகுவதும் சிறந்தது.

10) தடுக்கும் முறைகள்: 

  • வெளியே செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் பயன்படுத்துதல். 

  • அதிகளவு தண்ணீர், மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகள் பருகுதல். 

  • காற்றோட்டமான காட்டன் உடைகளை அணிவது.

  • நேரடி வெயிலைத் தவிர்க்க குடை அல்லது தொப்பியை பயன்படுத்துவது.

  • சருமத்தில் பாதிப்புகள் அதிகமாக இருந்தால் உடனடியாக சரும மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com