

சரிவிகித உணவு என்பது எல்லாவித சத்துக்களும் உடலுக்குத் தேவையான அளவில் கலந்திருப்பது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பலவிதமான உணவுப் பொருட்களை கலந்து உண்ணும் போது நம் உடலுக்குத் தேவையான சக்தி அதிகமாகக் கிடைத்து நம் உடல் ஆரோக்கியமாக காணப்படுகிறது. இதுவே சரிவிகித உணவு ஆகும்.
நாம் சாப்பிடக்கூடிய தானியங்கள், உருளைக்கிழங்கு, சர்க்கரை, எண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதிகமாக கிடைக்கின்றன.
மனிதனின் உடல் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புரதச்சத்தானது பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, பால் போன்றவற்றில் அதிகமாகக் காணப்படுகிறது.
நமது உடலை பாதுகாக்க கூடிய உணவுப் பொருட்களான பச்சைக்காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றில் வகைக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இவ்வாறு மூன்று வகை உணவுப் பொருட்களையும் கலந்து சாப்பிடும் போது புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உப்புச்சத்து, உயிர்ச்சத்து போன்ற பலவகையான சத்துக்கள் உடலுக்கு சரிவிகித அளவில் கிடைக்கும்.
அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ், கம்பு, ராகி போன்ற தானியங்கள் 50% முதல் 80 % வரை கலோரிகளை உடலுக்குத் தருகின்றன.
அதைப்போல எல்லா வகையான பருப்புகளிலும் புரோட்டின், இரும்புச்சத்து, தயமின், போலிக்ஆசிட், வைட்டமின் போன்றவை நிறைய உள்ளன. தானியங்களில் சிலவகை அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த தானியங்கள் மனித உடலுக்குத் தேவையான புரோட்டின் முழுமையாகக் கிடைக்கச் செய்கின்றன.
நெய், வெண்ணெய் போன்றவற்றில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது. தானியங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களான நிலக்கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய் போன்றவற்றில் கொழுப்பு சத்தும், அமினோ அமிலமும், வைட்டமின் E ஆகியவை அடங்கியுள்ளன. வைட்டமின் D எண்ணெய் வித்துக்களில் அதிக அளவில் உள்ளன.
பால் ஒரு பரிபூரண உணவாகும். இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, தாது உப்புகள், வைட்டமின் போன்ற எல்லாவித சத்துக்களும் கலந்துள்ளது. பாலில் விட்டமின் C கலந்துள்ளது.
முருங்கைக்கீரை, பசலைக்கீரை, முட்டைகோஸ் போன்றவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் காணப்படுகிறது. தினமும் 50 கிராம் கீரை சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கிடைக்கிறது.
கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, வெங்காயம், ஆகியவற்றில் ஸ்டார்ச் காணப்படுகிறது. கேரட்டில் வைட்டமின் A, உருளைக்கிழங்கில் வைட்டமின் C அடங்கியுள்ளது. பீட்ரூட், சேப்பக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, டர்னிப், கருணைக்கிழங்கு போன்றவற்றில் கார்போஹைட்ரேட் நிறைய உள்ளது.
எல்லாக் காய்கறிகளும் உடலுக்கு நன்மை தருகின்றன. இவற்றில் கலோரிகள் குறைந்த அளவிலும், வைட்டமின், தாதுப் பொருட்கள் அதிகளவிலும் அடங்கியுள்ளன.
பழங்கள் நம் உடலுக்கு நன்மையைத் தருகின்றன. தினமும் 100 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலிமை பெறும். நெல்லிக்காயில் ஏராளமான வைட்டமின் C உள்ளது. மாம்பழத்திலும், பப்பாளிபழத்திலும் வைட்டமின் A அதிகம் உள்ளது. பேரிச்சம் பழத்தில் நிறைய இரும்பு சத்து உள்ளது.
இனிப்பு கூட மனித உடலுக்கு தேவைப்படுகிறது. சர்க்கரை, வெல்லம் ஆகிய இரண்டும் மனித உடலுக்கு சக்தியை கொடுக்கின்றன. சர்க்கரையில் 198 கிராம் கலோரியும், வெல்லத்தில் 350 கிராம் கலோரியும் உள்ளன. இவை இரண்டிலும் கார்போஹைட்ரேட் என்னும் கூட்டுச்சக்கரை உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது. சர்க்கரையில் இரும்பு சத்து இல்லை.
மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை ஆகியவற்றில் புரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. முட்டையில் வைட்டமின் C தவிர எல்லா சத்துக்களும் உண்டு. முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் முட்டையில் உள்ள அவிடின் என்ற பொருள் வைட்டமின் பயோடினை உடலில் சேராமல் தடுத்து விடுகிறது.
ஒவ்வொரு மனிதனும் சரிவிகித உணவை கீழ்க்கண்ட அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.
தானிய வகைகள் 400 கிராம்,
பருப்பு வகைகள் 85 கிராம்,
கொழுப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் 56 கிராம்,
பால் 264 கிராம்,
கீரை வகைகள் 114 கிராம்,
பூமிக்கு கீழே விளையும் காய்கள் 85 கிராம்,
பழங்கள் 85 கிராம்,
சர்க்கரை, வெல்லம், தேன் 57 கிராம்,
அசைவ உணவு வகை 125 கிராம்,
நிலக்கடலை, உப்பு, ஊறுகாய் 57 கிராம்.
இவ்வாறாக சரிவிகித உணவை மேற்கண்ட அளவுகளில் எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!' என்பது பழமொழி ஆகையால் நோயில்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும்.