கரும்பை கடித்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Saccharum
Saccharum
Published on

அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறோம். பொங்கல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பொங்கலுக்கு அடுத்தபடியாக கரும்புதான். நம்முடைய வரலாற்றில் கரும்புக்கென ஒரு தனித்துவமான இடம் உண்டு. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட மக்கள் கரும்புச்சாற்றை 'கடவுளின் பானமாக' கருதி பருகி வந்துள்ளனர். எனவே, இன்றைய சூழலில் பொங்கல் பண்டிகையின் மையப் பொருளான கரும்பை கடித்துச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் கரும்பு சாப்பிடுவதற்காக பொங்கல் வரும் வரை காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் பின் நாட்களில் ஆலை  கரும்புகளின் வருகைக்கு பின்னர் பார்க்கும் இடங்களில்  எல்லாம் கரும்புச்சாறு கிடைக்கும் வசதி வந்துவிட்டது. என்னதான் கரும்புச்சாறு பருகினாலும் கூட பொங்கலுக்கென்று பிரத்தியேகமாக பயிரிடப்படும் கருப்பு கரும்பை கடித்துச் சாப்பிடுவதில் இருக்கும் ருசியே தனிதான்! சாறு எடுத்துப் பருகும் போது அதன் இனிப்பு சுவை ஒரே அளவில்தான் இருக்கும்! ஆனால் பொங்கலுக்கு  விற்பனை செய்யப்படும் கருப்பு கரும்பை கடித்து சாப்பிடும் போது அதன் விளைச்சல் எப்படி இருக்கிறது? என்பதை அதன் இனிப்பு சுவையை வைத்தே நாம் உணர்ந்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் நுனிக் கரும்பு ஒரு விதமான இனிப்பு சுவையையும், நடுப்பகுதியில் ஒரு விதமான இனிப்பு சுவையையும், அடிப்பகுதி தித்திப்பான இனிப்பு சுவையையும் கொண்டிருக்கும்.

பொங்கல் பண்டிகையின் போது கிடைக்கும் கரும்பை கடித்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. முன்பெல்லாம் அனைவரும் ஆலமரம், வேப்பமரம் போன்றவற்றின் குச்சிகளை நன்கு கடித்து மசித்து அதை வைத்து பல் துலக்கினோம். ஆனால் இன்றைய காலகட்டங்களில் வாய் பகுதியில் கடினமான பொருட்களை கடிப்பது என்பதே அரிதாகி விட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் கரும்புகளை நன்கு கடித்து  சாப்பிடுவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை பலமடைய செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
50 வயதைக் கடந்த பெண்களுக்கு அவசியமான 7 புரத உணவுகள்!
Saccharum

கரும்பை நன்கு கடித்து சாப்பிடுவதன் மூலம் பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற முடியும். மேலும் கரும்பை நன்கு கடித்து மென்று சாப்பிடும் போது  வாய் துர்நாற்றம் நீங்குகிறது. கரும்பை கடித்தவுடன் வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் இவை சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.

கரும்பில் அதிகப்படியான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையமின், புரதம், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை உள்ளன. இவை உண்டவுடன் உடலின் சோர்வை நீக்கி உடலுக்கு ஒரு வித புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

மேலும் கரும்பை நன்கு கடித்து வாயில் மென்று சுவைப்பதன் மூலம் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. கரும்பில் உள்ள பொட்டாசியம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை குறைப்பதோடு அதனை கட்டுப்படுத்த உதவுகிறது. கரும்பில் அதிகமான ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும்  ஃபிளவனோய்டுகள் இருப்பதால் இவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதோடு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 கசப்பு உணவுகள்!
Saccharum

மேலும் கரும்பில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகச்சுருக்கம், சரும பாதிப்பு போன்றவற்றை குறைத்து வயதான தோற்றத்திலிருந்து விடுபட வழி வகுக்கிறது. எனவே இளமையாக இருக்க விரும்புபவர்கள் கரும்பை தாராளமாக சாப்பிடலாம். கரும்பை கடிக்கும் போது வாயில் சுரக்கும் அதிகப்படியான உமிழ்நீர் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கவும்  உதவுகிறது.

கரும்பை கடித்து சாப்பிடும் போது உடலில் ஏற்படும் அதிகப்படியான நீர் பெருக்கத்தின் காரணமாக சிறுநீர்ப் பிரச்சினைகள் சரி செய்யப்படுகின்றன. மேலும் கரும்பில் குறைந்த அளவிலான சோடியம் இருப்பதால் இது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில்  கரும்பு முக்கிய பங்காற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் நிறைந்த முத்தான மூன்று பொங்கல் வகைகள்!
Saccharum

மேலும் இதில் உள்ள அதிகப்படியான எலக்ட்ரோலைட்டுகள் கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தலைமுடியின் வளர்ச்சியினை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் வளரும் குழந்தைகளை கரும்பை கடித்துச் சாப்பிட வைப்பதன் மூலம் அவர்களின் பற்கள் மற்றும் வாயின் ஆரோக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க முடியும்.

இத்தகைய அற்புதமான நற்பலன்கள் நிறைந்த கரும்பை வரும் பொங்கல் நாட்களில் அனைவரும் சுவைத்து மகிழுங்கள்!

குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் உரிய மருத்துவரின் ஆலோசனையின் படி கரும்பைச்  சுவைப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com