

ஜம்பிங் ஜாக்ஸ் என்பது ஒரு எளிய ஆனால் சிறந்த முழு உடல் கார்டியோ பயிற்சியாகும். இது இதயத்துடிப்பை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து தசை வலிமியை மேம்படுத்த உதவுகிறது. உபகரணங்களின் உதவி எதுவுமின்றி எங்கும் செய்யக்கூடிய வகையில் உள்ளது இப்பயிற்சி.
ஜம்பிங் ஜாக்ஸ் - ஆரோக்கிய நன்மைகள்:
1) இருதய ஆரோக்கியம் & கொழுப்பு எரிப்பு:
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதயத்துடிப்பை அதிகரித்து நுரையீரல் திறனை வலுப்படுத்துகிறது. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. 10 நிமிட ஜம்பிங் ஜாக்ஸ் சுமார் 100 முதல் 200 கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2) முழு உடல் தசை வலிமை:
கைகள், கால்கள், தோள்கள், முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் தசைகளை ஒரே நேரத்தில் வேலை செய்ய வைத்து வலுப்படுத்த உதவுகிறது.
3) எலும்பு ஆரோக்கியம்:
இது ஒரு வகை weight bearing உடற்பயிற்சி என்பதால் எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு நோய்களைத் தடுக்கிறது. எடையைத் தாங்கும் உடற்பயிற்சி என்பதால், இது எலும்பு அடர்த்தியை அதிகரித்து எலும்புகளை வலுவாக வைத்து உதவுகிறது.
4) உடல் ஒருங்கிணைப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை:
கைகள் மற்றும் கால்களின் சீரான இயக்கம், உடல் சமநிலை (balance), ஒருங்கிணைப்பு (coordination) மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.
5) வசதி மற்றும் மனநலம்:
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்யக்கூடியது. இது உடற்பயிற்சிக்கு முன் சிறந்த வார்ம் -அப் (warm up) ஆகும். இந்த உடற்பயிற்சி என்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது.
மூட்டு வலி அல்லது தீவிரமான உடல்நல பிரச்னைகள் உள்ளவர்கள் இதை செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பயிற்சி செய்யும் முறை:
குதிக்கும்போது முதலில் நிமிர்ந்த நிலையில் நிற்கவும். அப்பொழுது கைகள் இரண்டும் இருபுறமும் தொடைப்பகுதியை தொட்டிருக்க வேண்டும்.
பின்பு இரு கால்களையும் சற்று அகலமாக விலக்கி வைக்க வேண்டும். அப்போது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கைகூப்பியபடி நிற்க வேண்டும். பின்பு கைகளை தளர்த்தி தொடைப்பகுதியை ஒட்டி வைக்க வேண்டும். அப்போது கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்த நிலைக்கு கொண்டு வந்து இயல்புக்கு திரும்ப வேண்டும். பின்பு கால்களை அகலமாக விலக்கியும், கைகளை உயர்த்தியும் மீண்டும் இயல்புக்கு திரும்புவதுமாக பயிற்சி செய்ய வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)