குழந்தைகளுக்கு மினரல் வாட்டரா, காய்ச்சிய தண்ணீரா? எது சிறந்தது?

பாட்டில் தண்ணீரை விடக் காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் பாதுகாப்பானதா? பெற்றோர் அறிய வேண்டியவை!
Drinking Water Child Safety - குடிநீர்
Drinking Water Child Safety - குடிநீர்
Updated on: 

'குழந்தைக்கு குடிக்க எந்தத் தண்ணீரைக் கொடுக்கலாம்? கிணற்றுத் தண்ணீரா, மாநகராட்சித் தண்ணீரா, பாட்டில் தண்ணீரா?'

- பெற்றோர்கள் அடிக்கடி எழுப்பும் கேள்விகள் இவை.

உண்மையில், தண்ணீரின் பெயரை விட அதன் தரமும் பாதுகாப்பும் தான் முக்கியம். குழந்தையின் உடல் வளர்ச்சி, செரிமானம், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு எனப் பல செயல்களுக்கு நீர் இன்றியமையாதது. ஆனால், எல்லா நீரும் குடிப்பதற்கு ஏற்றதல்ல. இது குறித்து முழுமையாக விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.

Q

எந்தத் தண்ணீரை 'பாதுகாப்பான குடிநீர்' என்று சொல்லலாம்?

A

நோய்க்கிருமிகள், அதிக அளவு நச்சுப் பொருட்கள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் இல்லாமல், குடிப்பதற்குத் தகுந்த தரத்தில் இருக்கும் தண்ணீரே பாதுகாப்பான குடிநீர். E.coli போன்ற நோய்க்கிருமிகள் இருப்பது மாசுபாட்டின் முக்கிய அறிகுறியாகும். தெளிவாகவும் சுவையாகவும் இருப்பது மட்டும் பாதுகாப்புக்கான சான்றல்ல.

Q

மாநகராட்சி அல்லது பொதுவிநியோகக் குடிநீரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?

A

உரிய முறையில் சுத்திகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பாக விநியோகிக்கப்படும் பொதுக்குடிநீர் நிச்சயமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வீட்டை அடையும் வழியில் குழாய் கசிவு, கழிவுநீர் கலப்பு அல்லது சேமிப்புத் தொட்டி மாசுபாடு ஏற்பட்டால் தரம் பாதிக்கப்படலாம். எனவே வீட்டுத் தொட்டியையும் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். அதையும் காய்ச்சி ஆற வைத்து கொடுத்தால் மேலும் நல்லது.

Q

கிணற்றுத் தண்ணீர் இயற்கையானது என்பதால் அப்படியே குடிக்கலாமா?

A

இல்லை. நிலத்தடி நீரில் நைட்ரேட், ஃப்ளூரைடு, ஆர்சனிக் போன்ற வேதிப்பொருட்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமாக இருக்கலாம். மேலும் மழைக்காலத்தில் கழிவுநீர் கலந்தால் பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளால் மாசுபடலாம். எனவே கிணற்றுத் தண்ணீரை தொடர்ந்து பரிசோதித்து, தேவையான சுத்திகரிப்புக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும்.

Q

பாட்டிலில் கிடைக்கும் 'மினரல் வாட்டர்' தான் குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததா?

A

அப்படி ஒன்றுமில்லை. 'பாட்டில் தண்ணீர்' என்பதும் 'இயற்கை கனிம நீர்' (Natural Mineral Water) என்பதும் ஒன்றல்ல. பல பாட்டில் நீர்கள் வெறுமனே சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக இருக்கலாம். முக்கியமானது அதன் தரச் சான்று, பாதுகாப்பான உற்பத்தி மற்றும் சரியான சேமிப்பு. பாட்டிலில் இருப்பதால் மட்டும் அது மற்ற பாதுகாப்பான குடிநீரைவிடச் சிறந்ததாகிவிடாது.

Drinking Water Child Safety - குடிநீர்
Drinking Water Child Safety - குடிநீர்
Q

தண்ணீரைக் கொதிக்க வைத்தால் அனைத்து மாசுகளும் நீங்கிவிடுமா?

A

கொதிக்கவைப்பது பல நோய்க்கிருமிகளை அழிக்க மிகவும் பயனுள்ள முறையாகும். ஆனால், கனிமங்கள் அல்லது சில வேதிப்பொருள் மாசுகளை கொதிக்கவைப்பதால் நீக்க முடியாது. எனவே தண்ணீரின் தன்மையைப் பொறுத்து வடிகட்டுதல், குளோரினேற்றம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு முறைகள் தேவைப்படலாம்.

Q

குடிநீரில் கால்சியம், மக்னீசியம் போன்ற கனிமங்கள் இருப்பது நல்லதா?

A

ஆம். கால்சியம், மக்னீசியம் போன்றவை உடலுக்குத் தேவையான கனிமங்கள். ஆனால் குடிநீரை மட்டுமே நம்பி குழந்தையின் கனிமத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. சமச்சீர் உணவே முதன்மை. அதிகப் படியான ஃப்ளூரைடு அல்லது பிற கனிமங்கள் இருப்பதும் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
செல்லப்பிராணியின் உமிழ்நீர், முடியில் ஒவ்வாமையா? குழந்தைகளைக் காக்கும் வழிகள்!
Drinking Water Child Safety - குடிநீர்
Q

'அதிகமாகத் தண்ணீர் குடித்தால் உடலுக்கு அதிக நன்மை' என்பது சரியா?

A

இல்லை. குழந்தையின் வயது, உணவு, உடல் இயக்கம், காலநிலை ஆகியவற்றைப் பொறுத்தே தேவையான நீரின் அளவு மாறும். தாகம், சிறுநீரின் அளவு மற்றும் நிறம் போன்றவை உதவும் குறியீடுகள். ஏறக்குறைய ஒரு கிலோ எடைக்கு 50-70 மி.லி. தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து குழந்தை மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

Q

வீட்டில் தண்ணீரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?

A

சுத்தமான, மூடிய பாத்திரத்தில் தண்ணீரைச் சேமித்து, கைகளால் நேரடியாக எடுக்காமல் சுத்தமான பாத்திரம் அல்லது குழாய் மூலம் பயன்படுத்த வேண்டும். குடிநீர்த் தொட்டியை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். சந்தேகம் இருந்தால் தண்ணீரைப் பரிசோதனை செய்வதே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் குழந்தைக்கு சளி, காய்ச்சலா? தடுப்பது எப்படி?
Drinking Water Child Safety - குடிநீர்

'தண்ணீரின் பெயரைப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

அதன் பாதுகாப்பை அறிந்து தேர்ந்தெடுப்போம்.

தூய்மையான நீர் - குழந்தையின் ஆரோக்கியத்திற்கான முதல் படி!'

logo
Kalki Online
kalkionline.com