முதுகெலும்பை அழிக்கும் புரோட்டின் பவுடர்கள்! மருத்துவர்கள் Shocking Report!
டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையின் எலும்பியல் துறைக்கு கடுமையான எலும்பு மற்றும் முதுகெலும்பு பிரச்சனைகளுடன் ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆராய்ந்ததில் 15 வயது முதல் 25 வயதான இளம் பருவத்தினரே இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களின் முதுகெலும்புகளை ஆராய்ந்ததில், அது 30 வயது முதல் 40 வயதுடைய நபரின் முதுகெலும்புகளைப் போல தோற்றமளித்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்போதைய காலக்கட்டத்தில் உடலில் சிக்ஸ்பேக் , எய்ட்பேக் வைப்பது நாகரீகம் ஆகிவிட்டதால் , உடலில் விரைவாக சதையை வளர்க்க , இளம் வயதினர் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பதை அறிவதில்லை.
தற்போது சிறுவர்கள் 13 வயதிலேயே ஜிம்களில் சேர்ந்து விடுகின்றனர். அவர்களுக்கு விரைவாக உடல் தசையை வளர்த்து , பலரது முன்னால் பெருமிதப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இதற்காக புரோட்டின் பவுடர் மற்றும் ஸ்டீராய்டு சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
இது போன்ற சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டால், முதல் ஒரு சில வாரங்களில் உடலில் சில மாற்றங்களை தெரியப் படுத்தும். ஆனால், அதற்கு ஏற்ற நீண்ட நேர உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இந்த சப்ளிமெண்ட் உடலை உள்ளிருந்து பாதிக்க வைக்கிறது. எலும்பு தேய்மானங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் முதுகெலும்பின் வட்டுக்கள் (டிஸ்க்) தேய ஆரம்பித்து , படிப்படியாக மல்டி-டிஸ்க் செயலிழப்பு நிலையை அடைய வைக்கிறது.
இது பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் பாவுக் கார்க் , "15 முதல் 20 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் , முதுகெலும்பு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை அடைகின்றனர். இந்த பிரச்சனை அதோடு மட்டும் நிற்காமல் , அவர்களின் உடலில் பலவீனம் அதிகரித்து, அன்றாட வேலைகளைச் செய்வது கூட கடினமாகி விடுகிறது. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாத ஸ்டீராய்டுகள் மற்றும் சப்ளிமெண்ட்களை உட்கொள்வது எலும்புகளில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
உடல் தசையை வளர்க்கும் சப்ளிமெண்ட்களை உட்கொள்வது எலும்புகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் போன்ற உடலின் பிற உறுப்புகளுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த சப்ளிமெண்ட்கள் பல உறுப்பு செயலிழப்புக்கு கூட காரணமாகின்றன. மேலும் யூரிக் அமிலம் அதிகரிப்பு, வைட்டமின் டி குறைபாடு , உடல் பலவீனம் , சோர்வு ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.
முப்பது வயதை அடையும் முன்னரே எலும்புகளின் இத்தகைய பிரச்னைகள் உடல் நலத்தை சீர்குலைத்து விடுகின்றன. தசைகளை உருவாக்கவும் , உடற் பயிற்சிக்கு தேவையான ஆற்றலை பெறவும் , இயற்கையான உணவு வகைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். எதையும் குறுக்கு வழியில் பெற நினைப்பது ஆபத்தை விளைவிக்கும்.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எந்த ஒரு சப்ளிமண்ட்களையும் மற்றவர்களின் தூண்டுதலின் பெயரில் எடுத்துக் கொண்டு , ஆரோக்கியத்தை இழக்க வேண்டாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)