

கொலாஜன் மற்றும் பயோட்டின் இரண்டும் முடி, சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், அவற்றின் செயல்பாடு வேறுபடும். எது சிறந்தது என்று தெரிந்து கொள்வதற்குமுன் இந்த இரண்டையும் பற்றி அறிய வேண்டும்.
கொலாஜன் (Collagen):
நம் சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது கொலாஜன். ஆனால் வயது ஆக ஆக கொலாஜன் உற்பத்தி குறையும் அதற்கு ஈடுகட்ட ஹைட்ரோலைச்டு கொலாஜன் மற்றும் பெப்டைட் கொலாஜன் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். ஆராய்ச்சிகளின் மூலம் கொலாஜன் பெப்டைட் சருமத்தின் நீரேற்றத்தை அதிகரித்து நெகிழ்ச்சியாகவும் வைக்கிறது என்பது அறியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முடி அடர்த்தியாக வளருவதைத் தூண்டுவது மற்றும் நக ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகத் தெரிகிறது. கொலாஜன் சருமத்தை பளபளப்பாகவும் வைக்கிறது.
பயோட்டின் (Biotin):
நம் உடலில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்தும் பண்பு நிறைந்தது பயோடின். இது இயற்கையாகவே முட்டை, கொட்டைகள், மீன், விதைகள் மற்றும் மாமிசங்களில் நிறைந்துள்ளன. பயோட்டின் அளவு அதிகரிப்பதால் உங்கள் முடி ஆரேரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. பயோடினை சப்ளிமெண்டாக எடுப்பவர்களுக்கு குறைந்த அளவு பயன் கிடைப்பதாக அமெரிக்கன் டெர்மடாலஜி அகாடமி ஆய்வில் கூறுகிறது. பயோட்டின் சப்ளிமெண்ட் எடுப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக் கூடாது.
கொலாஜன், பயோட்டின் இரண்டிற்கும் உள்ள வித்யாசம்:
கொலாஜன் என்பது புரதம் நிறைந்தது சருமத்திற்கும் திசுக்களையும் ஆரோக்கியமாக வைக்கக் கூடியது. பயோட்டின் என்பது வைட்டமின் சத்தாகும். இது உங்கள் உடலில் உள்ள செல்கள் மெட்டபாலிசத்தை சிறப்பாக செய்வதற்கு பயன்படுகிறது. கொலாஜன் என்பது அதிக அளவில் உடல் சருமத்தோடு சம்பந்தப்பட்டது. சருமத்தின் இலாஸ்டிசிடி மற்றும் நீரேற்றத்திலும் சம்பந்தப்பட்டது. ஆனால் பயோட்டின் அப்படியில்லை.
முடி ஆரோக்கியம் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிப்படுத்த சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். முடி பாதிப்பிற்கு காரணங்கள் பல உண்டு. இரும்புச் சத்து குறைவு, தைராய்டு பிரச்னைகள், ஹார்மோன்களின் சமச்சீரின்மை ஜெனிடிக்ஸ் மற்றும் மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு என்று பல காரணங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஆராய்ந்து உங்கள் முடி பாதிப்பிற்கான முக்கியக் காரணம் எது என்பதைக் கண்டு பிடிப்பதே முதல் வேலையாக இருக்க வேண்டும். காரணம் தெரியாமல் சப்ளிமெண்டுகளை எடுத்துக் கெள்வதில் பயனில்லை.
எது முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது?
உங்கள் முடி வளர்ச்சி குறைவாக இருந்தால் உடனடியாக பயோடினைத் தேடி போக வேண்டாம். உங்கள் பயோட்டின் அளவு நார்மலாக இருக்கும் போது அதிக பயோட்டின் எடுப்பதால் முடி வளர்ச்சி அதிகமாகும் என்பது இல்லை.
முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர கொலாஜன் முக்கியம் 2026வது ஆராய்ச்சியில் இது கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் முடி மெலிவடைந்து போனால் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் சேர்க்க வேண்டும். தைராய்டு மற்றும் சோர்வு போன்ற பிரச்னைகளையும் சரி செய்தல் மிக அவசியம்.
சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது?
உங்கள் சருமம் வறண்டும் வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தினால், கொலாஜன் பெப்டைடுகள் சுருக்கம் நீரேற்றம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் இது எல்லோருக்கும் பொருந்தாது. சிலருக்கு கொலாஜன் அளவு வேறுபடும்.
துத்தநாகம் மற்றும் முடி ஆரோக்கியம்
துத்தநாக சத்து முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் தேவையானது. இது குறைபாடு என தெரிந்தால் துத்தநாக சத்து நிரம்பிய உணவுகளை எடுக்க வேண்டும். உங்கள் முடி மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க புரதம், துத்தநாகம், வைட்டமின்கள், கொழுப்புச் சத்து முதலியவைகள் இருக்க வேண்டும்.
உங்கள் சருமம் மற்றும் முடியின் பாதிப்பிற்கான காரணிகளை நன்கு ஆராய்ந்து அதற்குத் தக்கபடி கொலாஜன் மற்றும் பபயோடினை பயன் படுத்துவது சிறந்தது.