

காலையில் எழுந்ததும் வாயில் கசப்பு சுவை ஏற்படுவது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இரவு முழுவதும் உமிழ்நீர் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணம் என்றாலும், இது உடலின் மற்ற ஆரோக்கியக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டலாம்.
மருத்துவ மொழியில் இது 'டிஸ்கியூசியா' (Dysgeusia) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது தற்காலிகமானதாக இருந்தாலும், சில நேரங்களில் இது உடலில் உள்ள வேறு சில ஆரோக்கிய குறைபாடுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இதற்கான முக்கியமான 6 காரணங்கள்:
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (GERD) அல்லது பித்த ரிஃப்ளக்ஸ்:
காலையில் வாய் கசப்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாகும். இரவு தூங்கும் போது வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் அல்லது பித்தநீர் பின்னோக்கி உணவுப்பாதை வழியாக தொண்டை மற்றும் வாய்ப் பகுதிக்கு வருவதால் காலையில் எழுந்தவுடன் கடுமையான கசப்பு அல்லது புளிப்பு சுவை ஏற்படுகிறது.
மோசமான வாய்வழி சுகாதாரம்:
இரவில் பற்களை சரியாக துலக்காமல் தூங்கும் பொழுது, வாயில் உள்ள உணவுத் துகள்களால் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கின் மேல் ஒரு படலமாக படிந்து, காலையில் துர்நாற்றத்துடன் கூடிய கசப்பு சுவையை உண்டாக்குகின்றன. அத்துடன் ஈறு வீக்கம், பற்சிதைவு அல்லது வாய்ப்புண்களும் கசப்பு சுவையைத் தருவதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
உலர் வாய் மற்றும் நீரிழப்பு:
இரவில் தூங்கும் பொழுது உமிழ்நீர் சுரப்பு இயற்கையாகவே குறையும். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலோ அல்லது தூங்கும் போது வாய் வழியாக சுவாசிப்பதாலோ உமிழ்நீர் சுரப்பு குறைகிறது. உமிழ்நீர் வாயை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால், அது குறையும் பொழுது பாக்டீரியாக்கள் பெருகி கசப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றன.
சில வகை மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ்:
நாம் உட்கொள்ளும் சில ஆன்டிபயாடிக்குகள், ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அல்லது இரும்பு, துத்தநாகம் போன்ற மல்டி வைட்டமின் மாத்திரைகளை உடல் உறிஞ்சும் பொழுது, அதன் துகள்கள் உமிழ்நீரில் கலந்து கசப்பு அல்லது உலோகச் சுவையை ஏற்படுத்தலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்:
கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நின்ற காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு காரணமாகலாம். கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாறுபாடுகளால் பல பெண்களுக்கு வாயில் கசப்பு அல்லது உலோகச் சுவை ஏற்படுவது இயல்பானது. அதேபோல் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் உலர் வாய் பாதிப்பு காரணமாக இந்த கசப்புச் சுவை வரலாம்.
சைனஸ் மற்றும் சுவாசப் பாதை தொற்றுகள்:
சளி, இருமல் அல்லது சைனஸ் தொற்றுகள் இருக்கும் பொழுது மூக்கிலிருந்து தொண்டைக்குள் வடியும் திரவங்கள் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் சுரக்கும் புரதங்கள் காரணமாக சுவை மொட்டுகள் பாதிக்கப்பட்டு வாய் கசப்பாக மாறக்கூடும்.
மருத்துவரை அணுக வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்:
காலையில் ஏற்படும் கசப்புச் சுவை பல் துலக்கிய பிறகோ அல்லது தண்ணீர் குடித்த பிறகோ சரியாகி விட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அப்படியில்லாமல் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக ஒரு பொது மருத்துவர் அல்லது இரைப்பை குடல் நிபுணரை (Gastroenterologist) அணுக வேண்டியது அவசியம்.
வாய் கசப்பு பல நாட்கள் அல்லது வாரக்கணக்கில் தொடர்ந்து நீடித்தால்.
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்று வலி, குமட்டல், வாந்தி அல்லது சாப்பிட்ட பின் அஜீரணம் போன்ற அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.
ஈறுகளில் இரத்தக் கசிவு, பற்களில் கடுமையான வலி, வீக்கம் அல்லது நாக்கில் வெள்ளைத் திட்டுகள் காணப்பட்டால்.
உணவை அல்லது உமிழ்நீரை விழுங்குவதில் வலி அல்லது சிரமம் ஏற்பட்டால்.
கல்லீரல் மற்றும் பித்தப்பை சரியாக செயல்படாத பொழுது உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகள் அதிகரிக்கக்கூடும். இது பித்த நீர் சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, காலையில் வாயில் கசப்பு சுவையை தோற்றுவிக்கும். இதன் அறிகுறியாக கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுவது.
திடீரென உடல் எடை குறைதல் அல்லது காரணமே இல்லாத அதீத சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
எளிய வீட்டு வைத்தியங்கள்:
வாயில் தொடர்ந்து கசப்பு சுவை இருப்பதற்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் என்றாலும் சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம்.
நீடித்திருக்கும் கசப்பான சுவையை வெளியேற்றவும், உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கலாம். நாள் முழுவதும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றுடன் வைத்திருக்க முடியும்.
எலுமிச்சை சாறு மற்றும் சிட்ரஸ் பழங்கள், இனிக்காத குருதிநெல்லி போன்றவற்றை சாப்பிடுவது அல்லது ஜூஸாகக் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து வாயில் உள்ள கசப்பு சுவையை போக்க உதவும்.
வாய் சுகாதாரத்தை கடைப்பிடிக்கலாம். மவுத்வாஷை பயன்படுத்துவது, காலை இரவு என இரண்டு வேளைகள் பல் துலக்குவது போன்றவை பயன்தரும்.
இரவில் காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைக் குறைக்கும்.